என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது- ஆர்.பி.உதயகுமார்
    X

    யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது- ஆர்.பி.உதயகுமார்

    • நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    • இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்கள் பெயரிலும் விருப்ப மனுவை அளிக்க வைகை எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர்.

    முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 54 ஆண்டுகளில் தேர்தல் களத்தில் முதன்மை இயக்கமாக, தேர்தலில் முதல் துவக்கமாக எம்.ஜி.ஆர். காலம் தொட்டு, அம்மா காலம் வரை அ.தி.மு.க. இருந்து வந்தது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் தற்போது தேர்தல் பணியில் துள்ளி குதித்து வருகிறது.

    தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். 12,000 கிலோமீட்டர் பச்சை பேருந்து மூலம் பச்சை தமிழராய் ஒரு கோடி மக்களை சந்தித்தார். இந்த சரித்திர சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்தனர்.

    தற்பொழுது அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் தனி தொகுதி தவிர உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என்று விருப்ப மனு அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி மகுடம் சூட்ட தயாராகிவிட்டனர்.

    குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும். அதனால் தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் இன்றைக்கு நடுங்கி போய் உள்ளார்கள்.

    நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது. செயற்கையாக சுவாசத்தை கொடுக்க விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

    தி.மு.க.வின் தோல்வியை பற்றி உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறுகிறார். இந்த ஆட்சி முடிய 3 மாதம் உள்ளது. இப்போது அறிவித்து என்ன பயன்? இதை எல்லாம் மக்கள் நம்பப் போவதில்லை தி.மு.க. வுக்கு மக்கள் ரெட்கார்டு போட்டு விடுவார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.

    யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தி.மு.க. வை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்றுதான் பார்ப்பார்கள். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.

    Next Story
    ×