என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
    X

    GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

    • மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

    தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் மீது தொடுத்த வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    இதேபோல அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.

    பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது.

    இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.96 ஆயிரம் வரை சென்றது. அதன்பிறகு விலை சற்று தணிய தொடங்கியது. அதாவது, 'முழம் ஏறி சாண்' சறுக்கியது.

    கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தங்கம் விலை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் நிலையற்றத்தன்மை காணப்பட்டது.

    தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாத கனியாகவே மாறிவிட்டது. குறுகிய காலத்தில் தங்களது சேமிப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் சிலர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கடந்த 9-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதன்பிறகும் படிப்படியாக தங்கம் விலை ஏறுமுகம் கண்டு வருகிறது.

    அதன்பின்னர் கடந்த 13-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது.

    இதற்கிடையே நேற்று காலை ரூ.90 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 460-க்கும், ரூ.720 அதிகரித்து சவரன் ரூ.99 ஆயிரத்து 680-க்கும் விற்கப்பட்டது.

    நல்ல வேளையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டவில்லை என்று நினைத்தவர்களுக்கு சில மணி நேரங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.

    அதாவது மேலும் ரூ.55 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், 440 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145-ம், சவரனுக்கு ரூ.1,160-ம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று ஏறிய வேகத்தில் குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும் சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 211 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.100,120

    14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-12-2025- ஒரு கிராம் ரூ.215

    14-12-2025- ஒரு கிராம் ரூ.210

    13-12-2025- ஒரு கிராம் ரூ.210

    12-12-2025- ஒரு கிராம் ரூ.216

    11-12-2025- ஒரு கிராம் ரூ.209

    Next Story
    ×