என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு வரலாறு படைக்கும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாடு படைத்த சாதனைகளை கூறினார். மேலும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். உதகை, தருமபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கம் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக 5-வது ஆண்டாக அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன் எனது பயணம்.... தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ்... வெல்க தமிழ்நாடு... என்றார். 

    • 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்து இருந்தார்.
    • ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருப்பதால் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்.

    * ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.

    'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    • வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக பாலக் கோடு போலீஸ் டி.எஸ்.பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி கொத்தப்பள்ளியை சேர்ந்த சிராஜ் (25) என்பதும், உடன் வந்தவர் கர்நாடகா மாநிலம் சிக்ககொல்லர அட்டி கிராமத்தை சேர்ந்த திலக்குமார் (24) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் 2 பேரும் பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்க்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து குட்காவுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.
    • காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது.

    * சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.

    * தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

    * குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது.

    * குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்.

    * ஆண்டுதோறும் செப்.6-ந்தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.

    * காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.

    * அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்.

    * காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    * குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.

    * தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது.

    * இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

    * இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை.

    * இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்.

    * திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது.

    * மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.

    * இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை

    * என் 60 ஆண்டுகால பொதுவாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் முன்னதாக கூறியிருந்தார்.

    * கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார்.

    * கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

    * கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.

    * கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

    * கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    * நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

    * தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போர் 1.43 சதவீதம் மட்டுமே.

    * இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார். 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது.

    இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.65-ம், ஒரு சவரன் ரூ.520-ம் குறைந்து, முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • தமிழ்நாடு முழுவதும் “தமிழ் வாரம்” கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் "தமிழ் வாரம்" கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.
    • வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ள முடியும்.

    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்படும். 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.

    சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ளவும், உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்.

    ஆபத்தில் உள்ளவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் என கூறப்படுகிறது.

    மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    • தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.
    • எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன எனச் சொல்லியிருக்கிறார்.

    தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த, கூட்டணிக்கு சம்மதித்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.

    தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன என ஜோசியம் சொல்கிறார்.

    தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் எடப்பாடி பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் 'தோல்வி'சாமி அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

    செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?.

    தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்-அமைச்சர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது' என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த 11 எம்.எல்.ஏ.க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்-அமைச்சர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.

    எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்த எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
    • இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில்," தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்றார்.

    • பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம்.
    • மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும், பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    அதன்படி, பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மெட்ரோ ரெயில் 35- 40 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    ×