என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏ.ஜி.ஆர்.கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகள்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (08.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி ராமாபுரம் பகுதிகளான வள்ளுவர் சாலை, பஜனை கோவில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், ஸ்ரீராம்நகர், சபரிநகர், தமிழ்நகர், கிரிநகர், குறிஞ்சிநகர், கங்கையம்மன் கோவில் தெரு, அம்பாள்நகர், ரத்னா காம்ப்ளக்ஸ், பிரகாசம் தெரு, செந்தமிழ்நகர், கோத்தாரிநகர், அன்னை சத்யாநகர், கே.கே.பொன்னுரங்கம் சாலை, கலசாத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்.ஆர்.எம்.திருமலைநகர், குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ்காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்திநகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, கமலாநகர், சுபஸ்ரீநகர், எம்.கே.எம்.ஸ்கூல், வெங்கடேஸ்வர அவென்யூ, ராம்நகர், மாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணவேணிநகர், குருசாமிநகர், சி.ஆர்.ஆர்.புரம், காசாகிரான்ட, ஆறுமுகம்நகர், திருநகர், கணேஷ்நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏ.வி.மல்லிஸ் கார்டன், ட்ரைமாக்ஸ், வி.வி.கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏ.ஜி.எஸ்.காலனி, மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏ.ஜி.ஆர்.கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர்,

    மேலூர் பகுதிகளான மீஞ்சூர் நகர், டி.எச்.ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு,

    மயிலாப்பூர் பகுதிகளான சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே.தெரு, குட்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, வி.சி.கார்டன் தெரு, ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி சாலை 5-வது குறுக்கு தெரு, வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளுவர் பேட்டை, ஜெத்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.
    • தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று 5-ம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 2021 இல் ஆட்சி அமைந்தபோது, 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.விடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவவேற்றியதோடு, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது சாதனைகளின் சிகரமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் ஆகியவற்றில் மிகச் சிறந்த அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    எனவே, தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கும் இன்று காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்த கலெக்டர் அலுவலகம் தரப்பிலும், ஆனந்தன் அய்யாசாமி தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் முழு பாதுகாப்பின் கீழ் தென்காசி கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.
    • நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.

    நெல்லை:

    நெல்லை மண்டலத்திற்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர்களின் கூட்டம் நெல்லையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும்.

    பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    தெலுங்கானா காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசியதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தம் அடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

    இந்தியாவின் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்க காரணம் கணவனை இழந்த பெண்கள் செந்தூரம் அதாவது குங்குமத்தை வைக்க முடியாது. அதனால் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 177-வது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை. இது போன்ற வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எனவே விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம்.

    பா.ஜ.க.வில் இருந்து திருமாவளவனுக்கு நான் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். மற்றவர்கள் யாரும் பேசினார்களா என தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள். நீங்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,

    நான் தமிழக முதலமைச்சரை பெரிதும் மதிக்கிறேன். நயினார் நாகேந்திரனுக்கு எதற்கு பாதுகாப்பு. அவர் தான் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க கூடியவர் என அவர் நினைத்திருக்கலாம் என கூறினார்.

    பின்னர் மத்திய அரசால் வழங்கப்படும் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா? என கேட்டதற்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார்.

    • அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
    • தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது‌.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.

    மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.

    இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.

    • அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.
    • மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இந்த தேரோட்டத்தில் பங்கேற்ற இருதரப்பு இளைஞர்கள் அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்கு மற்றொரு தரப்பினர் திரண்டு சென்று தாக்குதல் நடத்தினர் .

    இதில் வீடுகள், வாகனங்கள் அடுத்து நொறுக்கப்பட்டது. குடிசைக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் வடகாடு ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் அதிரடி படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகள் தாக்கப் பட்ட பகுதியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். இரு தரப்பினர் மோதல் சம்பவத்தால் வடகாடு கிராமத்தில் இன்று 3-வது நாளாக பதட்டம் நிலவுகிறது அங்கு பாதுகாப்பு பணிக்காக இன்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதல் கட்டமாக வீடுகள் மீது தாக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரு தரப்பைச் சேர்ந்த ராமஜெயம், தனபால், வினித், பிரவீன், முருகேஷ், அர்ச்சுனன், அரவிந்தன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தம் இரு தரப்பைச் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வடகாடு பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இன்று 2-வது நாளாக அந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மோதல் சம்பவத்தால் பதட்டம் நிலவினாலும் திருவிழா வழக்கம்போல் நடந்து முடிந்தது அம்மனுக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    • தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது.
    • மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! என பதிவிட்டுள்ளார். 

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பெரியகோவில் விளங்கி வருகிறது.

    தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.

    தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

    • 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
    • நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

    நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தி உள்ள ஆபரேஷன் சிந்தூரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது. பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார். 



    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்து வந்து, கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத உச்சமாக இந்த விலை பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடித்தது.

    அதனைத்தொடர்ந்து இந்த மாதத்தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை மளமளவென குறைந்து வந்தது. எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதேபோல் சரியத் தொடங்கியது இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்தது.

    அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல், நேற்று மீண்டும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும், விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்தது. அதையடுத்து நேற்று மாலையிலும் விலை மாற்றம் இருந்தது. அப்போது கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் அதிகரித்தது.

    இப்படியாக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.325-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. போர் பதற்றம், போர்க்கால ஒத்திகை குறித்த அறிவிப்பு போன்றவற்றால், தங்கம் விலையில் நேற்று அதிரடி மாற்றம் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,075-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-05-2025- ஒரு கிராம் ரூ.111

    05-05-2025- ஒரு கிராம் ரூ.108

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    ×