என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரு தரப்பினர் மோதலால் ஆலங்குடி வடகாடு கிராமத்தில் 3 மதுக்கடைகள் மூடல் - போலீசார் குவிப்பு
    X

    இரு தரப்பினர் மோதலால் ஆலங்குடி வடகாடு கிராமத்தில் 3 மதுக்கடைகள் மூடல் - போலீசார் குவிப்பு

    • அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.
    • மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இந்த தேரோட்டத்தில் பங்கேற்ற இருதரப்பு இளைஞர்கள் அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்கு மற்றொரு தரப்பினர் திரண்டு சென்று தாக்குதல் நடத்தினர் .

    இதில் வீடுகள், வாகனங்கள் அடுத்து நொறுக்கப்பட்டது. குடிசைக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் அரசு பஸ்ஸின் கண்ணாடிகள், காவல்துறை வாகனம் நொறுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் வடகாடு ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் அதிரடி படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகள் தாக்கப் பட்ட பகுதியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். இரு தரப்பினர் மோதல் சம்பவத்தால் வடகாடு கிராமத்தில் இன்று 3-வது நாளாக பதட்டம் நிலவுகிறது அங்கு பாதுகாப்பு பணிக்காக இன்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதல் கட்டமாக வீடுகள் மீது தாக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரு தரப்பைச் சேர்ந்த ராமஜெயம், தனபால், வினித், பிரவீன், முருகேஷ், அர்ச்சுனன், அரவிந்தன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மற்றொரு தரப்பில் புள்ளான் விடுதியைச் சேர்ந்த ராஜா 19 என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தம் இரு தரப்பைச் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வடகாடு பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இன்று 2-வது நாளாக அந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மோதல் சம்பவத்தால் பதட்டம் நிலவினாலும் திருவிழா வழக்கம்போல் நடந்து முடிந்தது அம்மனுக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    Next Story
    ×