என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர்.
    • ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் பயணிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக கோவை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் வைத்திருந்த பைகள் உள்ளிட்ட உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 2 பயணிகள் கொண்டு வந்த பைகளில் 6.713 கிலோ கிராம் எடையுள்ள உயர்ரக கஞ்சா(தண்ணீரில் வளரக்கூடியது) போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபயதுல்லா ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்த ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கைதான கேரள பயணிகள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.



    இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடத்தில் அதே விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் ரூ.18.67 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுங்க இலாகாவிற்கு வரி செலுத்தாமல் அவற்றை ரகசியமாக கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    • அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும்.
    • பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அரியலூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசாருக்கு தகுந்த உத்தரவை எடுக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். பின்னர், ''அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும். பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோரினால் பாதிக்கப்படும் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில், வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி. எடுக்கவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    • புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
    • 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ. ஒப்புதல்.

    திருச்சி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார்.

    • ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 55 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்புகூட ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

    ராமேசுவரம், பாம்பன் உள்பட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் எந்த பிரச்சனையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, 2-வது நாளாக இன்று ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
    • பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழைய குற்றால அருவி. இந்த அருவிக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபடுவார்கள்.

    பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு பிறகு கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    • திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
    • ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை.

    தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்களை நேரில் சென்று வாங்க சிரமப்படுவதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துப் பொருட்களையும் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க 'தாயுமானவர்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

    அதனை தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, ஏறக்குறைய 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் 70 வயதிற்கும் மேற்பட்ட 20 லட்சம் முதியோர், 1 லட்சத்து 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.



    இந்த நிலையில், 'தாயுமானவர்' திட்டத்தை இன்று தொடங்கி வைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    வணக்கம். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அந்த வரிசையில் எனது மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருக்கிற திட்டம் தான் 'தாயுமானவர் திட்டம்'. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசின் செயல்களை மக்களுடைய வீடுகளுக்கே சென்று கொடுப்பது இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை. அந்த திட்டத்தின் பயன், பலன் கடைக்கோடி மனிதர்களையும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கிறதும் கடமையா நினைக்கிறேன்.

    அப்படி உருவாக்குன இத்திட்டத்தை 34,809 நியாய விலைக்கடைகளில் செயல்படுத்த போறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என 21,70,454 பேர் இந்த திட்டத்தால் பயன் அடையபோகிறார்கள். ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். இதற்காக ரூ.30 கோடியே 16 லட்சம் ஆகிற செலவை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையா நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவுத்துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப்போகிற மிகப்பெரிய கடமை. இந்த நேரத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையணும். உங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர்கிற வகையில் நீங்கள் கனிவா நடந்துக்கணும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு என்றார். 



    • திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

    இதுகுறித்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டார். 

    அதன்படி, திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

    டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி  ஆயுஷ்மான் திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக  நியமிக்கப்பட்டுள்ளார். 

      

    • காவல்துறையின் 42 கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தது த.வெ.க.
    • வருகிற 21ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    முதலில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக ஆகஸ்ட் 21-க்கு மாற்றியமைக்கப்பட்டது.

    மாநாட்டிற்கான தேதி மாற்றப்பட்ட பின்னர், த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அக்கட்சியினர் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மனு அளித்தனர்.

    அப்போது, மாநாடு நடைபெறும் இடம், எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு, வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் குறித்த 42 கேள்விகளை காவல்துறை முன்வைத்தது. இந்தக் கேள்விகளுக்கு த.வெ.க. தரப்பில் விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.
    • அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

    இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.வினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து வியாழக்கிழமை 570 பேருந்துகள் இயக்கம்.
    • புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தலா 375 பேருந்துகள் இயக்கம்.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும் 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8,145 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 26,534 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும், சனிக்கிழமை 3,678 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23,266 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மேயர் பிரியாவிடம் இருந்து தகவல் மட்டும் தான் வருது தீர்வு வரவில்லை.
    • பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவர்கள் கேட்கிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 11 -வது நாளை எட்டி உள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்களை நடிகை சனம் ஷெட்டி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    கொரோனா நாட்களில் நாம் உயிர் பயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு நமக்காக வந்தவங்க. ஊர் ஊரா.. தெரு தெருவா.. சுத்தம் செய்தவங்க. என்னுடனைய நண்பர்கள்.

    மேயர் பிரியா வாராங்க செய்தி சொல்லிவிட்டு போராங்க. அவரிடம் இருந்து தகவல் மட்டும்தான் வருது தீர்வு வரவில்லை. எத்தனை நாள் தான் இவர்கள் இப்படி இருக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பறித்து விட்டீர்கள்.

    பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவங்க கேட்கிறார்கள். உங்க வாக்குறுதியை நீங்க காப்பற்றவில்லை என்றால், இனிமேல் முதலமைச்சரிடம் எதை எதிர்பார்க்க முடியும்.

    மக்களுக்காக தான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன. உங்க வாக்குறுதியை தான் கேக்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க.

    என ஆவேசத்துடன் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது.
    • தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.

    தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.

    தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.

    அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

    பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது. நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்.

    ×