என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
    • அரசுக்கு ரூ.30 கோடியே 16 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தாயுமானவர் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை கோபால் நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று ரேசன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைய உள்ளனர்.

    அதாவது மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேசன் கார்டுகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு இதன்மூலம் பொருட்கள் கிடைக்க உள்ளது.

    ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள ரேசன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் இருந்து பெறப்பட்டு அந்தந்த பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மூடிய வேன்களில் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும்போது மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு செய்யும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் கொண்டு சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் அரசுக்கு ரூ.30 கோடியே 16 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தாயுமானவர்' திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரேசன் பொருட்களை வீடு தேடி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சூடசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா (60) விவசாயி. இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    வீட்டில் 2 மாடுகளை வளர்த்து வந்த இவர், இன்று அதிகாலை வழக்கம் போல் மாட்டு கொட்ட கையில் வேலை செய்த போது ஒற்றைக் காட்டு யானை கல்லப்பாவை துரத்தி சென்று தாக்கியுள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    கல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூடசந்திரம், ஆச்சு பாலம், கீசனகுப்பம், சத்திரம் தொட்டி, நெல்லு மாறு, அவேறுபள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி அச்சுறுத்தியும் வருகிறது.

    காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம்.
    • இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.

    சென்னை:

    உலக யானைகள் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கினைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

    கோவையில், ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் யானைகள் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பைப் பார்வையிட உள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரெயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன. இதனால் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்மையில், தெப்பக்காட்டில் யானைப் பாகர்களுக்கான கிராமத்தையும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தொடங்கி வைத்தேன். நமது யானைகளை அக்கறையோடு பராமரிக்கும் பாகர்களுக்கான சுற்றுச்சூழலோடு இயைந்த வீடுகளை அது கொண்டுள்ளது. யானைகளைப் பாதுகாப்பதோடு யானைப் பாகர்களின் நலனையும் இது மேம்படுத்துகிறது. இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும்.
    • பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.

    கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

    உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.

    ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?

    பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 



    • மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.
    • உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலோ இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வியடைந்து விட்ட நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.

    எந்தவொரு மாநிலமும் தொழில் துறையில் வளர்ச்சி அடைந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்; வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆனால், புதிதாக எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற திட்டங்களால் ஏற்பட்ட பயன்கள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

    அதேபோல், விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய வெளிநாட்டு பயணங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 நாள் பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்திய பேச்சுகளின் அடிப்படையில், லூலூ நிறுவனம் மூலம் ரூ.3500 கோடி, நோபுள் ஸ்டீல்ஸ் ரூ.1000 கோடி, ஒயிட் ஹவுஸ் ரூ.500 கோடி உட்பட மொத்தம் ரூ.6100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த முதலீடுகளின் வாயிலாக 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

    அதன்பின் 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட பயணத்தில் ரூ.1342 கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    2024-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஸ்பெயின் நாட்டில் 14 நாள்கள் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, எடிபன் நிறுவனம் ரூ. 540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ. 400 கோடி என மொத்தம் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் கையெழுத்திடப்பட்டன. இதில் ஒரு ரூபாய் கூட இன்னும் வரவில்லை; அதனால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.

    2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் மொத்தம் 17 நாள்கள் பயணமாக சென்றார். இப்பயணத்தின் போது ரூ.7616 கோடிக்கும் முதலீடுகள் திரட்டப்பட்டதாகவும் அதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், நடக்கவில்லை.

    இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவற்றின் மூலம் மொத்தம் ரூ.18,498 கோடி முதலீடு கிடைக்கும்; ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் வாயிலாக மட்டும் 28,516 பேருக்கு முதலீடு கிடைக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், முதலமைச்சர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை என்பதால், கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் தோல்வியடைந்து விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

    அதுமட்டுமின்றி, உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை. அண்மையில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம் 32.78 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10% கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை. 5 விழுக்காடு அளவுக்குக் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

    மேலும் தமிழக அரசு கூறும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 10.62 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ரூ.18,498 கோடி தான். இது மொத்தமாக கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பில் வெறும் 1.72% மட்டும் தான். தமிழக அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தாலும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வி என்பது உறுதியாகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை நியாயப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது? முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வளவு முதலீடுகள் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன? எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர்? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அதன்பிறகே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    • தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
    • எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என கேட்டவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள்.

    தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சி அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்தனர்.

    இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,

    எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என கேட்டவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள்.

    மேலும் கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பணத்தாசை காட்டி போராட்டத்தை கலைக்க முயல்வதாகவும் அவர்கள் கூறினர்.

    • மாநாட்டிற்காக சுமார் 506 ஏக்கர் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு செம்மைப்படுத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • தற்போது மழை காலம் என்பதால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதன் முறையாக களம் காண இருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பூத் கமிட்டி மாநாடு முதல் உறுப்பினர்கள் சேர்க்கை வரை அதிரடி காட்டியுள்ளது.

    அந்த வகையில் தென் மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியலும், ஆன்மீகமும் கலந்த மதுரையில் த.வெ.க. தனது 2-வது மாநில மாநாட்டை வருகிற 21-ந்தேதி பிரமாண்டமாக நடத்துகிறது. அதன் மூலம் கட்சியின் பலம் மற்றும் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க முயற்சி எடுத்து வருகிறது.

    மாநாட்டிற்காக சுமார் 506 ஏக்கர் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு செம்மைப்படுத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான 'ரேம்ப் வாக்' நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள், மாநாட்டின் பிரம்மாண்ட முகப்பு ஆர்ச் மின்விளக்குகள், பிரமாண்ட கோட்டை வடிவிலான நுழைவு வாயில் போன்றவை அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தற்போது மழை காலம் என்பதால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    மாநாட்டு திடலில் மொத்தம் 90 பாக்சுகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக தடுப்பு கம்பிகள் போடப்பட்டு, ஒரு பிரிவில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த வகையில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள், அதேபோல மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் தண்ணீர் தாகம் ஏற்படாமல் இருப்பதற்காக நிலத்திற்கு அடியில் பைப்புகள் போடப்பட்டு 750 குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மாநாட்டு திடலை சுற்றி பார்க்கிங் மற்றும் சாலைகளில் 5,000 லிட்டர் அளவிற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட சின் டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களில் விஜய் தனது பலத்தை நிரூபிக்க த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் தேர்வு செய்யாத வகையில் ஒரு பிரம்மாண்ட பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை விஜய் தேர்வு செய்து இந்த மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக காவல்துறை சார்பில் 42 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. காவல் துறையிடம் விளக்கம் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் காவல்துறை தற்போது வரை அனுமதி கொடுக்காததால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகரை சந்தித்து மாநாடு அனுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக நேற்று பிற்பகலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மாநாடு நடைபெறும் திடல் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நேரில் பார்வையிட்டார்.

    தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதுகுறித்து த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறுகையில், விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காவல் துறை தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளோம். குறிப்பாக பார்க்கிங் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து தற்போது வரை மாநாட்டு பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
    • எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.

    எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும். பணிப்பாதுகாப்பு மற்றும் பணப்பலன்கள் வழங்குவதை மாநகராட்சி உறுதி செய்யும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 16 ஆயிரம் கன அடியாக வந்தது.

    மேலும் தமிழக காவிரி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது.  இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760

    07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    07-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.
    • தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களது மகன் நூர்சல் ஹக்(வயது 8). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றான். அங்கு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தான்.

    வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென அங்கு வந்த கரடி ஒன்று, அவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்றது. அங்கு அவனை கடித்துக்கொன்றுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் அருகில் பாலும், ரத்தமும் சிதறி கிடந்தது.

    உடனே தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்தான். இதை கண்டு அவர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே வால்பாறை பகுதியில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரடி ஒன்று சிறுவனை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 91.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.63 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 776 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 288 கனஅடியாக அதிகரித்து வருகிறது.

    மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×