என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. 2-வது மாநில மாநாடு: முன்னேற்பாடுகள் தீவிரம்
- மாநாட்டிற்காக சுமார் 506 ஏக்கர் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு செம்மைப்படுத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- தற்போது மழை காலம் என்பதால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திருமங்கலம்:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதன் முறையாக களம் காண இருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பூத் கமிட்டி மாநாடு முதல் உறுப்பினர்கள் சேர்க்கை வரை அதிரடி காட்டியுள்ளது.
அந்த வகையில் தென் மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியலும், ஆன்மீகமும் கலந்த மதுரையில் த.வெ.க. தனது 2-வது மாநில மாநாட்டை வருகிற 21-ந்தேதி பிரமாண்டமாக நடத்துகிறது. அதன் மூலம் கட்சியின் பலம் மற்றும் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க முயற்சி எடுத்து வருகிறது.
மாநாட்டிற்காக சுமார் 506 ஏக்கர் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டு செம்மைப்படுத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான 'ரேம்ப் வாக்' நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள், மாநாட்டின் பிரம்மாண்ட முகப்பு ஆர்ச் மின்விளக்குகள், பிரமாண்ட கோட்டை வடிவிலான நுழைவு வாயில் போன்றவை அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தற்போது மழை காலம் என்பதால் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் மொத்தம் 90 பாக்சுகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக தடுப்பு கம்பிகள் போடப்பட்டு, ஒரு பிரிவில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த வகையில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள், அதேபோல மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் தண்ணீர் தாகம் ஏற்படாமல் இருப்பதற்காக நிலத்திற்கு அடியில் பைப்புகள் போடப்பட்டு 750 குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மாநாட்டு திடலை சுற்றி பார்க்கிங் மற்றும் சாலைகளில் 5,000 லிட்டர் அளவிற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட சின் டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் விஜய் தனது பலத்தை நிரூபிக்க த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் தேர்வு செய்யாத வகையில் ஒரு பிரம்மாண்ட பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை விஜய் தேர்வு செய்து இந்த மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக காவல்துறை சார்பில் 42 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. காவல் துறையிடம் விளக்கம் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் காவல்துறை தற்போது வரை அனுமதி கொடுக்காததால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகரை சந்தித்து மாநாடு அனுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக நேற்று பிற்பகலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மாநாடு நடைபெறும் திடல் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதுகுறித்து த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறுகையில், விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காவல் துறை தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளோம். குறிப்பாக பார்க்கிங் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து தற்போது வரை மாநாட்டு பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






