என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வால்பாறை அருகே சிறுவனை கடித்துக்கொன்ற கரடி
- நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.
- தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களது மகன் நூர்சல் ஹக்(வயது 8). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றான். அங்கு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தான்.
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென அங்கு வந்த கரடி ஒன்று, அவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்றது. அங்கு அவனை கடித்துக்கொன்றுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் அருகில் பாலும், ரத்தமும் சிதறி கிடந்தது.
உடனே தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்தான். இதை கண்டு அவர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே வால்பாறை பகுதியில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரடி ஒன்று சிறுவனை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.






