என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜி.கே.மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வருகின்ற 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் ஜி.கே.மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வருகின்ற 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்தும், நாளை அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளுவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
- எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை.
தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சியும் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்து உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். 4 நாட்களாக நான்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
- கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை தி.மு.க. அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பள்ளிகள், கல்லூரிகளை சீரழித்து வருகிறது. தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத் தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல. இதை உணர்ந்து மூடப்பட்டு வரும் 207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்தி, அங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாளைய உலகை மாற்றப்போகும் திறமைமிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே உற்று கவனிக்கிறது.
- 50 சதவீதத்துக்கு மேலான நிறுவனங்களை தலைமை எடுத்து நடத்துவது பெண்கள் தான்.
சென்னை:
தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சிக்காக, 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளும், திட்டங்களில் பயனடைந்தவர்கள் குறித்தும் விளக்கும் வீடியோவை துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
நாளைய உலகை மாற்றப்போகும் திறமைமிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே உற்று கவனிக்கிறது. தமிழ்நாட்டின் இளைய சமுதாயம் உலகை வெல்ல தயார் நிலையில் உள்ளது எனத் துவங்குகிறது வீடியோ பதிவு.
விழுப்புரம் இளைஞனின் வியாபார முன்னேற்றம், கோவை இளம்பெண் இஸ்ரோ வரை பணிக்கு சென்றது. மதுரை இளைஞன் ஜெர்மனி சென்று வாழ்க்கையில் உயர்ந்தது என திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானவற்றை சரியாக செய்து உள்ளதை விளக்கிச் செல்கிறது இந்த வீடியோ பதிவு.
குறிப்பாக, நான் முதல்வன் முதல் ஸ்டார்ட் ஆப் டிஎன் வரை, புதுமைப்பெண் முதல் தமிழ்புதல்வன் திட்டங்கள் வரை, திராவிட மாடல் அரசு இளைஞர்கள் நலனுக்கான அரசு என விளக்கப்படுவதுடன், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ தகவல்படி, இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 8 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளன என்பதை குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள, 11 ஆயிரம் நிறுவனங்களில், 8500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உருவானவை. இதில் 50 சதவீதத்துக்கு மேலான நிறுவனங்களை தலைமை எடுத்து நடத்துவது பெண்கள் தான். இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதை தரவுகளுடன் விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.
கடந்த 4 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 272 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
மேலும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களுக்கும் நான் முதல்வன் திட்டம் மூலமாக திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து உலகையே வெல்லக்கூடிய வகையில் அவர்களை தயார்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு என்று கூறி வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- லட்சுமிபுரம், பெரியார் நகர், கோணிமேடு, கங்கை நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அடையாறு: காந்தி நகர் 3 மற்றும் 4-வது பிரதான சாலை, 2வது கிரசண்ட் பார்க் சாலை.
கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், நியூ கடற்கரை சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59வது தெரு வரை, பகத்சிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21-வது தெரு, புதிய காலனி, கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோவில் தெரு, ஈசிஆர் பிரதான சாலை, மருந்தீஸ்வர கோவில், கஜுரா கார்டன், பல்கலை நகர், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யூ, 1 முதல் 4-வது கடல்வழி சாலை, பாலகிருஷ்ணா நெடுஞ்சாலை, வால்மீகி நகர், கலாஷேத்ரா சாலை, சிஜிஐ காலனி, போலீஸ் குடியிருப்புகள், திருவீதியம்மன் கோவில் தெரு, சங்கம் காலனி, கந்தசாமி நகர், காமராஜர் சாலை, பாலவாக்கம்.
திருமுல்லைவாயல்: லட்சுமிபுரம், பெரியார் நகர், கோணிமேடு, கங்கை நகர், சரத் கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன்பேட்டை, ஏரங்குப்பம்.
பஞ்செட்டி: கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, பனப்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், சின்னம்பேடு, காரணி, புதுவொயல், ராளபாடி, மங்கலம்.
பெரம்பூர்: நெடுஞ்சாலை, 1, 2 தெரு, மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலை 1 முதல் 5 தெரு, தேசியா காலனி, வீட்டுவசதி வாரியம், சி.ஒய்.எஸ் சாலை, சேமாத்தமன் காலனி, மேட்டுப்பாளையம், சாந்தி காலனி, பி.எச் சாலை, நியூ ஃபெரன்ஸ் சாலை, ஸ்ட்ராஹன்ஸ் சாலை, தர்கா தெரு, பென்ஷனர்கள் சந்து, அப்பாசாமி தெரு, யாகூப் கார்டன் தெரு, அலெக்சாண்டர் கார்டன் தெரு, எஸ்.எம்.எஸ் தெரு, வடக்கு டவுன் 1,2, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, போலீஸ் குடியிருப்பு, ஹண்டர்ஸ் சாலை, ஹண்டர்ஸ் லேன், ரங்கையா தெரு, ராகவன் தெரு, அஸ்தபூஜம் சாலை, கே.எம். கார்டன், நம்மாழ்வார் தெரு, மாணிக்கம் தெரு, முருகேச முதலி தெரு, நரசிம்ம பெருமாள் கோவில் தெரு, காலாதியப்பா தெரு, தானா தெரு, முத்தையா நாய்க்கன் தெரு, அரசப்பன் தெரு, பெருமாள் தெரு, காரியப்பா தெரு, ராஜா சாகிப் தெரு, சின்ன தம்பி தெரு, மசூதி தெரு, கார்ப்பரேஷன் லேன் , சிஎஸ் நகர், சிஆர் கார்டன், சூரத் பவன் தெரு, எத்திராஜ் கார்டன், ராமானுஜம் கார்டன், தியாகப்பா முதலி தெரு, பாபு தெரு, பேரக்ஸ் கேட் தெரு, நைனியப்பன் தெரு, எஸ்எஸ் புரம், பிரிக்ளின் சாலை, திரு.வி.க தெரு, காமராஜ் தெரு, தேவி பவானி எல்லையம்மன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சண்முகம் தெரு, கே.எல்.பி.
- பக்தர்களிடம் ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.
முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் 'ஆண்டவர்'களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
- விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் சோதனை செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது வருகிற 20-ந் தேதி வரை தொடரும் என தெரிகிறது.
திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விமான நிலைய இயக்குனர் ஞானேஸ்வரராவ் தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மோப்பநாய் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
- பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
- அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது.
சென்னை:
வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்றும் சொல்வார்கள்.
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.
பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம். பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கும்.
இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும்.
ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் உதிக்கும்.
இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
- . யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.
ஈரோடு:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி உலக யானையில் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
யானைகளின் சாணத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகள் காடுகளில் பரப்புகின்றன. சாணத்தில் உள்ள பலவகை பூச்சி இனங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. இவ்வாறு யானைகள் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன.
அதனால்தான் யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை மேகமலை, களக்காடு - முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள ஆய்வு இயக்குனர் ராஜ்குமார் கூறும்போது,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் வாழக்கூடிய உகந்த இடமாக இந்த வனப்பகுதி உள்ளது. கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை 720 -ல் இருந்து 780 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய வனப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும் சூழலில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மட்டும் 25 சதவீதம் யானைகள் வசித்து வருகிறது.
தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.
மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் 780-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்தவரை யானை வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பின் அடிப்படையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.
- சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
- தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகரம் முதல் குக்கிராமம் வரை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் கடந்து செல்லும் பொது இடங்களில், சாலையோரங்களில், இருட்டான பகுதிகளில் புகைப்பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் உடல்ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினரும் உடல்ரீதியாக மன ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
இச்சூழலில் பொது இடத்தில் புகைப்பிடிக்கவும், மது அருந்தவும் தடை இருந்தும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
எனவே எவரும் பொது இடங்களில் புகைப்பிடிக்காமல், மது அருந்தாமல் இருக்க தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்த பின்பு மனு விசாரிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "இந்த ஒப்பந்தப்பணியினால், இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் 2 ஆயிரத்து 42 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள். 1,953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "இந்த வழக்கிற்கு பதில் மனு தயாராக உள்ளது. இருந்தாலும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினார்.
மனுதாரர் தரப்பில், "சுமார் 2 ஆயிரம் பேர் தெருக்களில் போராடி வருகிறார்கள். குப்பையை போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாகவும், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு வக்கீல் வினோத் என்பவர் ஆஜராகி, "மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அந்த மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம் என்று அரசு விளக்கம் அளித்தது.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு என தலைமை நீதிபதி முன் வழக்கறிஞர் வினோத் மீண்டும் முறையிட்டார்.
தினந்தோறும் முறையீடு செய்ய வேண்டாம் என வழக்கறிஞர் தரப்புக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்த பின்பு மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
- 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது.
- கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 58 கிராம மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் வைகை அணையிலிருந்து 17.6 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் 925 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வழக்கமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது ைவகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 58 கிராம கால்வாயிலோ அல்லது திருமங்கலம் பிரதான கால்வாயிலோ தண்ணீர் திறக்கப்பட வில்லை.
இதுகுறித்து கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக உசிலம்பட்டி மற்றும் விருவீடு பகுதியில் வைகை அணையில் இருந்து 58 நீர் பாசன கால்வாயில் தண்ணீரை திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் 58 கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும், 58 கிராம பாசன கால்வாயை நீர்ப்பாசன கால்வாயாக மாற்ற கோரியும், உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரியும் புறவழிச் சாலை அமைக்க கோரியும் உசிலம்பட்டி பகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வன பாதுகாப்பு சட்டம் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு மதுரை ரோட்டில் இருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் நடத்தினர்.
உசிலம்பட்டி பகுதியில் கடையடைப்பின் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.






