என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் புகாருக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
- எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை.
தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சியும் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்து உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். 4 நாட்களாக நான்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






