என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
- வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் சுமார் 30 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15000 கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மேலும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் விலை அதிகம் உள்ள ஆடைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இதில் லாபமும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 50 சதவிகித வரி விதித்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவை விற்பனையின்போது 150 ரூபாய் என்ற உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம் வியட்நாம் ஜோர்டான் போன்ற நாடுகளில் பனியன் ஆடைகளை வாங்க வர்த்தக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு பெற்ற ஆர்டர்கள் முழு பணியும் நிறைவடைந்து பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெறாமல் அமெரிக்க வர்த்தகர்கள் தாமதம் செய்து வருவதால் தங்களின் முதலீடு முடங்கி உள்ளதாகவும் பெரும் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் தயார் நிலையில் உள்ள ஆடைகளை பெறாமல் அப்படியே நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை பெற முடியாமல் உள்ளேன். இந்த தொகை முழுவதும் கடன் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என தெரியவில்லை வர்த்தகர்கள் உடனான சந்திப்புக்கு பிறகே நிலை தெரியும் இந்த நிலை மாற விரைவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுகுறு நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரும் என தெரிவித்தார்.
திருப்பூரில் தயார் நிலையில் 10 லட்சம் ஆடைகள் மற்றும் உற்பத்தி நிலையில் 25 லட்சம் ஆடைகள் என சுமார் 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேங்கி உள்ளதாகவும் வரி விதிப்பு குறித்த முறையான தெளிவான அறிவிப்பு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆரம்ப நிலையிலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் மேலும் இடைக்காலமாக மற்ற நாடுகளிடமிருந்து ஆடைகள் வாங்கப்பட்டால் வர்த்தகர்களை மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வருவது சிரமமான நிலையை அடையும் என்பதால் இதில் தாமதமின்றி அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது.
- பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை.
பெரம்பலூர்:
மதுரையில் கடந்த 21-ந்தேதி நடந்த த.வெ.க. மாநில மாநாட்டில் கட்சி தொண்டர் சரத்குமார் என்பவரை தலைவர் விஜய் முன்னாலே பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது சரத்குமார் இல்லை என த.வெ.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி போட்டது சரத்குமாரே இல்லை. புகார் கொடுத்துள்ள சரத்குமார் அந்த இடத்திற்கு வரவே இல்லை. சரத்குமாரின் அம்மா பேட்டியை பார்த்து விட்டு அவரிடம் அது பற்றி கேட்ட போது, அது நான் இல்லை, அங்கு நான் செல்லவில்லை என தெரிவித்தார்.
மேலும் எனது சட்டையை பார்த்து விட்டு யாரோ சொன்னதைக் கேட்டு எனது அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனில் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.
நாங்கள் 100 சதவீதம் சொல்கிறோம் பவுன்சர்கள் தூக்கி போட்டது இந்த பையன் இல்லை. இது ஒரு தவறான தகவல். யாருடைய தூண்டுதலின் பேரிலே இப்படி புகார் கொடுக்கப்பட்டு, எங்கள் கட்சித் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு என்பது முக்கியம். ரசிகர் என்ற முறையில் அதை தாண்டி அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை பவுன்சர்கள் தடுக்கிறார்கள். யாரையும் தூக்கி போடவில்லை.
தள்ளி விடும்போது அவர் கம்பியை பிடித்து இறங்கி வருகிறார். உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது. கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் தான். அவரும் பேட்டி கொடுத்துள்ளார். நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன், நான் சென்றது தவறுதான், நான் போய் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மாநாட்டுக்கு சரத்குமார் 2-வது நாள் தான் சென்றதாக கூறினார். முதல் நாள் சென்றவர்கள் மட்டுமே நடைமேடை அருகே செல்ல முடியும், காரணம் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்று செய்கிறார்கள்.
இதன் பின்னணியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், தற்போது உள்ள ஆளுங்கட்சி தான், அவர்களாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. புகார் கொடுத்த சரத்குமார் போட்டிருந்த சட்டையை வைத்து முடிவுக்கு வர முடியாது. அதுமட்டுமின்றி கீழே விழுந்தவருக்கும், புகார் கொடுத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யான வழக்கு. அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கட்சி தலைமையின் ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து கடந்த 3 தினங்களாக 6,500 கன அடியாக தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.
- தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. வழக்கமாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவான 71 அடிவரை நீர்மட்டத்தை நிலைநிறுத்த முடிவு செய்து நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால் நீாவரத்து 634 கனஅடியாகவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் 68.83 அடியாக குறைந்துள்ளது. 5529 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 619 கனஅடி நீர் வருகிறது. 5784 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
பெரியாறு 14, தேக்கடி 7.6 மழையளவு பதிவாகி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.
நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை கிழக்கு மண்டல அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கோட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கடலோர காவல் படை அலுவலக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது
இதுதொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
புது வண்ணாரப்பேட்டையில் உள்ள கடலோர காவல் படை அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
- குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது.
கோவை:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவி வந்தது. நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியை ஓட்டிய இடங்களில் மழை கொட்டியது.
இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும், கடும் குளிரால் வெளியில் வர முடியாமல் விடுதிகள், லாட்ஜ்களிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.
- சுபமுகூர்த்த நாளையொட்டி தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
- இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், நேற்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சுபமுகூர்த்த நாளையொட்டி மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,405-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையாகிறது.
இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120
26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840
25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440
24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520
23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-08-2025- ஒரு கிராம் ரூ.130
26-08-2025- ஒரு கிராம் ரூ.130
25-08-2025- ஒரு கிராம் ரூ.131
24-08-2025- ஒரு கிராம் ரூ.130
23-08-2025- ஒரு கிராம் ரூ.130
- சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
- கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சகோதரர் உறவுமுறை உள்ளவரை காதலித்த சிறுமி (17) 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது.
- கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சவுத்தியா (8), சவுமிகா (6).
ராஜேஷ் குமார் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் குடும்பத்தோடு தங்கி சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக ராஜேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் காரில் பயணம் செய்தனர். அப்போது, மழை காரணமாக கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.
இதில் காரில் பயணித்த ராஜேஷ்குமார் அவருடைய மனைவி, மகள்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்ட த்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் சத்தீஸ்கர் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவருடைய சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தாம்பரம்: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெரு வரை, சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர், ஸ்ரீ ராம் நகர் தெற்கு, சரஸ்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, முடிச்சூர் சாலை ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், பாலகிருஷ்ணா நகர்.
பெருங்குடி வடக்கு: சிபிஐ காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், ராமப்பா நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர்.
ஆர்.கே.நகர்: எஸ்.ஏ.கோவில், திலகர் நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், ஆர்.கே.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, பெருமாள் கோவில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, காமராஜ் காலனி, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, ஸ்டான்லி ஏரியா, கன்னிவாசன் ஏரியா, தியாகப்பன்பேட்டை தெரு பகுதி.
எழும்பூர்: நாட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, சுப்ரமணி தெரு, ராமகிருஷ்ணா தெரு, கருப்பண்ணன் தெரு, சோமசுந்தரம் தெரு, ஆறுமுகம் தெரு, மணிகண்டா தெரு, சீனு முதலி தெரு, வரத முத்தியப்பன் தெரு, அச்சரப்பன் தெரு, புத்தி சாஹிப் தெரு, முத்து நாயக்கன் தெரு, அம்மான் சாகிப் தெரு, கோஷா நாயக்கன் தெரு, வைத்தியநாதன் தெரு, பண்ணைக்கார ஆண்டியப்பா தெரு, ஆனைக்காரன் தெரு, நாகமணி, பட்டு ராசப்பா தெரு, சேவியர் தெரு, மின்ட் தெரு, மங்கம்மாள் தெரு, மங்கம்மாள் லேன், வெங்கட்ராமன் தெரு, குட்டி தெரு, முத்துஷா தெரு, அக்ரஹாரம் தெரு, அயலூர் முதலியார் தெரு, சாமலூர் முதலியார் தெரு, வண்டலூர் எம். நம்புலியார் தெரு, வாஷர்மேன் அலி லேன், செவன்வெல்ஸ் தெரு, பேரக்ஸ் தெரு, ராமலிங்கம் தெரு, இரண்டாவது நாராயண தெரு, பெட்டு நாய்க்கன் தெரு, முருகேசன் தெரு, சரவணன் தெரு, வடக்கு சுவர் வீதி, பெருமாள் தெரு, முனியப்பன் தெரு, கண்ணையன் தெரு, வேங்கையர் தெரு, பட்டாபி ராமையா தெரு.
ஆவடி: டிஎன்எச்பி ஆவடி, காமராஜ் நகர், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், ஆவடி மார்க்கெட், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர்.
திருமுல்லைவாயல்: வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போதூர், அரிக்கமேடு, காட்டூர் லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ்.
- அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
- காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 30). எம்.எஸ்சி. பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த தனக்கோடி- விஜயா தம்பதியின் மகன் சஞ்சய்குமார் (32). பி.பி.ஏ. பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமிர்தா, சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திடீர் திருப்பமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. காதலனை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டதால் அமிர்தாவும் திருமண நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சஞ்சய்குமார் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. திருமண நாள் வந்து விட்ட நிலையில் மணமகன் குடும்பத்தார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய்குமார் திடீரென மாயமானது அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் கண்ணன், கார்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட்டிடம் புகார் தெரிவித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது. நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.
கட்சியின் மாவட்ட செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய்குமார், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி உள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு பவுனியா, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன' என கூறினார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






