என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 நாள் கனமழை எச்சரிக்கை எதிரொலி: கோவை, நீலகிரியில் பரவலாக மழை
    X

    2 நாள் கனமழை எச்சரிக்கை எதிரொலி: கோவை, நீலகிரியில் பரவலாக மழை

    • தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
    • குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    கோவை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவி வந்தது. நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியை ஓட்டிய இடங்களில் மழை கொட்டியது.

    இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும், கடும் குளிரால் வெளியில் வர முடியாமல் விடுதிகள், லாட்ஜ்களிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    Next Story
    ×