என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

50 சதவீதம் வரி விதிப்பு- திருப்பூரில் 35 லட்சம் பனியன் ஆடைகள் தேக்கம்
- கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
- வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் சுமார் 30 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15000 கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மேலும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் விலை அதிகம் உள்ள ஆடைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இதில் லாபமும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 50 சதவிகித வரி விதித்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவை விற்பனையின்போது 150 ரூபாய் என்ற உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம் வியட்நாம் ஜோர்டான் போன்ற நாடுகளில் பனியன் ஆடைகளை வாங்க வர்த்தக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு பெற்ற ஆர்டர்கள் முழு பணியும் நிறைவடைந்து பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெறாமல் அமெரிக்க வர்த்தகர்கள் தாமதம் செய்து வருவதால் தங்களின் முதலீடு முடங்கி உள்ளதாகவும் பெரும் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் தயார் நிலையில் உள்ள ஆடைகளை பெறாமல் அப்படியே நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை பெற முடியாமல் உள்ளேன். இந்த தொகை முழுவதும் கடன் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என தெரியவில்லை வர்த்தகர்கள் உடனான சந்திப்புக்கு பிறகே நிலை தெரியும் இந்த நிலை மாற விரைவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுகுறு நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரும் என தெரிவித்தார்.
திருப்பூரில் தயார் நிலையில் 10 லட்சம் ஆடைகள் மற்றும் உற்பத்தி நிலையில் 25 லட்சம் ஆடைகள் என சுமார் 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேங்கி உள்ளதாகவும் வரி விதிப்பு குறித்த முறையான தெளிவான அறிவிப்பு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆரம்ப நிலையிலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் மேலும் இடைக்காலமாக மற்ற நாடுகளிடமிருந்து ஆடைகள் வாங்கப்பட்டால் வர்த்தகர்களை மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வருவது சிரமமான நிலையை அடையும் என்பதால் இதில் தாமதமின்றி அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.






