என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
- இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னை:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ச்சுன்ராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், பாதிப்புகளை சரிகட்ட மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடி பாதி ட்ரம்ப் பாதி இருக்கும் முகமூடி அணிந்து கட்சியினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி.
- கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.
திருப்பூர்:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி. நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார் .
மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை. உக்ரைன் மீது ரஷியா போர் நடத்துகிறது. அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார். அரசு வணிகம் தவிர்த்து தனியாருக்கு வாங்கி தருகிறது. அவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு விற்பனை செய்யாமல் ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பயன் இல்லை.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்த லாபம் முழுவதும் அம்பானிக்கு சென்று சேர்கிறது. பல காரணங்கள் இருந்தாலும் இந்த வர்த்தகம் காரணமாகவே வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நம் நாட்டு பொருள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும். மற்ற நாட்டு தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும். இதனால் நம் பொருட்கள் விற்பனை ஆகாது. வெறும் ஜவுளி மட்டும் அல்ல. இறால் ஏற்றுமதி, நவரத்தின கற்கள் என அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிம்பிள் சொல்யூசன் அதானியை அழைத்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்ல வேண்டும். இந்த வரி விதிப்பால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை . ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாம் பாதிக்கப்படுகிறோம். சனாதன அரசியலை திணிக்கிறார்கள், மதவெறியை தூண்டுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., பருப்பு வேகவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாதுகாப்பு அரண். மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்து நிற்பது தான் நமது கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும் என்றார்.
- வைராவி குளம் பகுதியில் தாமரை பூக்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான தாமரை பூக்கள் தற்போது அவை ரூ.1.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே வைராவி குளம் பகுதியில் தாமரை பூக்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
ஆவணி மாதத்தை முன்னிட்டு சுபமுகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் தற்போது தாமரை பூக்கள் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான தாமரை பூக்கள் தற்போது அவை ரூ.1.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உரிய விலை இல்லாததால் வைராவிகுளம் பகுதியில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட தாமரை பூக்களை சாலையில் வீசி சென்றனர்.
- அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக ஆலோசனை.
- கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கு காலக்கெடு வைக்கப்பட்டது.
அந்தக் காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ரகசியமாக பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை டாக்டர் ராமதாசிடம் வழங்கினர்.
இன்னும் 2 நாட்களில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என நேற்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக பா.மக. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளராக தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர்கள் 108பேரும், மாவட்டத் தலைவர்கள் 108பேரும், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் 111பேரும், மாவட்ட தலைவர்கள் 111 பேரும் கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.
- சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
- முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
* இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 5 ஆண்டு காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே தி.மு.க. அரசு தமிழகத்தை மீட்டுள்ளது.
* கொரோனா கால நெருக்கடிகள், நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
* 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.17%, 4.91% ஆக இருந்த நிதி பற்றாக்குறை 3% ஆக குறைந்துள்ளது.
* சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம்.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம். இது 10 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாகும்.
* தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது.
* 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 3.28 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்கள், 14 நியூ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.
* மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.
* மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை.
- டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசியதாவது:-
தமிழ்நாடு இன்று எவ்வளவு பெரிய இன்னல்களை, துன்பங்களை, நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் ஒரு எம்.எல்.ஏ என்பதால் அறிய முடிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் மத்திய அரசு ஏற்ற அரசாக இருந்து கொண்டு ஒரு மாநில முற்றதிகாரத்தையே தனதாக்கிக்கொண்டு ஒரு காட்டு தர்பார் ஆட்சியை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது .
சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை. யாராவது இது குறித்து நீதிபதிகள் பேசினால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்று அவர்களை சங்கிகள் தன் கையில் எடுக்கின்ற நிலை உள்ளது.
இதில் பெரும்பான்மையான விசயங்களை சட்டசபையில் நான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சருக்கும் எனக்கும் சண்டை அல்லது அவரது அமைச்சர்களுக்கு எனக்கும் சண்டை என்றுதான் சட்டசபை நடந்தேறிக் கொண்டிருக்கிறது
டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள். இதனை கேட்பதற்கு நாதியில்லை, சட்டசபையில் இது குறித்து நான் கேட்டேன், அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மாற்றம் செய்யப்படும் என்று சொன்னார், ஆனால் மத்திய அரசு இதுவரை மாற்ற விடவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணங்களை உயர்த்தி பல மடங்கு பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு தேவையான பொருள்களின் விலையை உயர்த்தி மக்களை துயரத்தில் ஆளாக்கி வருகின்றனர்.
சுங்கச்சாவடி என்பது அமைக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பிறகு ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை குறைப்பது தான் ஒரு நியாயமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் அதற்கு நேர் மாறாக பன்னாட்டு பணக்கார பெரும் நிறுவனங்கள் இந்திய மக்களுடைய பணங்களை குறைந்த வட்டி விகிதங்களில் தேசிய வங்கிகளில் கடனாக பெற்று அதை நாங்கள் சாலை விரிவாக்கத்திற்காக முதலீடு செய்கிறோம் என்கிற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இதை எதிர்த்து தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது . தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதான கோரிக்கை இந்த சுங்கச்சாவடிகளை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான் என்றார்.
- மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
- வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்து உள்ளது.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 27 -வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை படுத்து இருந்தது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் முடிந்த அளவு இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றனர்.
- அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும்.
- தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர்:
கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம், டாக்டர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், போக, போக தெரியும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், நான் அரசியல் வியாதியும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. சமூக சீர்திருத்தவாதி என்றார்.
முன்னதாக கடலூர் அருகே ராமாபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டாக்டர் அன்புமணி பற்றிய கேள்விக்கு, சொல்வதற்கு ஏதும் இல்லை. எதுவும் இல்லை. அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும். எதுவும் சொல்லக்கூடாது என்றார்.
அதைத்தொடர்ந்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டுக்கு சென்ற அவர் அவரது இரட்டை குழந்தைகளில், ஒன்றை எடுத்து கொஞ்சியபடி தாலாட்டு பாடினார். காலை எழும் சூரியனே , ஆராரோ, ஆரிராரோ என்று பாடினார்.
இந்த தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்கிறது.
வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வந்த நிலையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் பரவி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும்.
- உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.
பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,
கட்டாய உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வை எழுதி தகுதி பெற வேண்டும்.
தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். சில குறைபாடுகளால் தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* டெட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் ஆசிரியர்களை ஒருபோதும் தமிழக அரசு கைவிடாது.
* உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.
* உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.
- மனம் திறந்து பேசப்போகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன கருத்து சொல்லப்போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.






