என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளோம்- திருமாவளவன்
    X

    மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளோம்- திருமாவளவன்

    • மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி.
    • கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

    திருப்பூர்:

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி. நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார் .

    மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை. உக்ரைன் மீது ரஷியா போர் நடத்துகிறது. அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார். அரசு வணிகம் தவிர்த்து தனியாருக்கு வாங்கி தருகிறது. அவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு விற்பனை செய்யாமல் ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பயன் இல்லை.

    கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்த லாபம் முழுவதும் அம்பானிக்கு சென்று சேர்கிறது. பல காரணங்கள் இருந்தாலும் இந்த வர்த்தகம் காரணமாகவே வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நம் நாட்டு பொருள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும். மற்ற நாட்டு தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும். இதனால் நம் பொருட்கள் விற்பனை ஆகாது. வெறும் ஜவுளி மட்டும் அல்ல. இறால் ஏற்றுமதி, நவரத்தின கற்கள் என அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு சிம்பிள் சொல்யூசன் அதானியை அழைத்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்ல வேண்டும். இந்த வரி விதிப்பால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை . ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாம் பாதிக்கப்படுகிறோம். சனாதன அரசியலை திணிக்கிறார்கள், மதவெறியை தூண்டுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., பருப்பு வேகவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாதுகாப்பு அரண். மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்து நிற்பது தான் நமது கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×