என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
கோவை:
சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
அதன்படி சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம் (பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.
- தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தபால் துறை சார்பில், தமிழக அஞ்சல் வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உபகோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற்றது.
இதில் திருப்பூர் அஞ்சல் கோட்டம் கடந்த நிதியாண்டில் இந்திய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூ.3 கோடியோ 9 லட்சம் பிரீமியம் ஈட்டி 2-ம் இடமும், கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 கோடியோ 81 லட்சம் பிரீமியம் ஈட்டி 3-ம் இடமும், பார்சல் பதிவு வருவாய் வளர்ச்சி வீதத்தில் அதிக வளர்ச்சி பெற்ற பிரிவில் ரூ.54 லட்சம் வருவாய் ஈட்டி தமிழக அளவில் 2-ம் இடமும் என 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.
பார்சல் பிரிவில் பதிவு செய்த வருவாய் வளர்ச்சி கடந்த 2023-24 நிதியாண்டை காட்டிலும் 96 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஐ.பி.பி.பி. பிரீமியம் கணக்கு சேர்க்கை மற்றும் ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.
தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிதியாண்டில் கோட்ட வாரியாகவும், உட்கோட்ட வாரியாகவும், தனிப்பட்ட சிறப்பு செயல்பாடு உள்பட மொத்தம் 9 விருதுகளை திருப்பூர் அஞ்சல் கோட்டம் பெற்றுள்ளது.
- திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 4 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வந்தார்.
- அவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய குழந்தைகளின் கல்விக்கான நிதி 2152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் செந்தமிழன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஏ ஜி சிதம்பரம் வர்த்தக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சக்தி கண்ணன், தணிகாசலம், நல்லமணி, பெர்னட் ஜான்சன், தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜராஜேஸ்வரி, உமா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
- தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
- அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- மீனவ மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
- அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதாக தெரிகிறது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மீன்பிடி ஒழுங்கு முறை தடை சட்டம் 1983-ன் தடையைமீறி, அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதாக தெரிகிறது.
இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறியும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மீன்வள துறையை கண்டித்தும் தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் உள்ள கடலில் இறங்கி ஏராளமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பெண்கள் தரங்கம்பாடி கடற்கரையில் கைகளில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது.
- கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
'தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம்' சுற்றுப்பயணத்திற்காக மதுரை வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இன்று வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சங்கத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை-தூத்துக்குடி சாலை, விமான நிலைய விரிவாக்கம், தென் தமிழகத்தில் தொழிற் வளர்ச்சி, உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், கப்பலூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு அரசியில் கட்சியினரும் இங்கு வந்துள்ளீர்கள். தொழிலும், அரசியலும் அப்பாற்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை தற்போது படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.
ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது. அதற்கு நிதி, நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடிந்த பிறகு தான் தொழிற்சாலை வரும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.
அதேபோல் கோவில் நகரமான இங்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க. அரசு முழு நடவடிக்கை எடுக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தொழிலுக்கு குறிப்பாக நிலம் தேவை. தற்போது நிலத்தை கையகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் விவசாயிகள் முன் வந்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழில்கள் பாதிக்கப்படும். எனவே வெளிமாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் தொழிலில் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். அம்மா ஆட்சியிலும், எனது ஆட்சியிலும் எனது தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொழிற்துறையினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறையினரின் பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்.
கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.1300 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையில் 4 தடுப்பணைகள், ரூ.400 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், பாதாள சாக்கடை வசதிகள், குடிமராமத்து பணிகள், பறக்கும் பாலம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி, வளர்ச்சி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தொழிற்துறையினர் கொடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கவனமுடன் பரிசலீத்து நடவடடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி.
- அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்.
சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என்ற வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
- மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள்.
- அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
- செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இருப்பினும் சில மாதங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த சலசலப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பிரிந்து சென்றார்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு அ.தி.மு.க. பிளவே காரணம் என கூறப்பட்டது. இதன்பின்னர் அ.தி.மு.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என கூறிவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார். இதன்பின், ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசுவேன். அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும் பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க. வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்துள்ளவர்கள் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ... அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரி இல்லை என்கிற வகையில் வருகிற சட்டசபை தேர்தல் வரை தமிழ்நாட்டு அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை!
- சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.
சென்னை:
சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புரசைவாக்கம் பிளவர்ஸ் தெருவில் வசித்து வரும் அரவிந்த் என்பவர் வீட்டுக்கு இன்று காலையில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாநிலங்களில் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்த இவர் சென்னையிலும் அதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.
- ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சார ரீடிங் கணக்கிடும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 3,700 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் 2200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். 364 திட்டங்களுக்கான பணிகள் நடந்து முடிந்து உள்ளது. மொத்தம் 404 திட்டங்கள் நடைமுறைக்கு எடுக்கப்பட்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் நிலுவையில் 37 திட்டங்கள் உள்ளது
நாட்டிற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது வடசென்னையில் 6158 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.
கேள்வி:- தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட மாதந்தோறும் மின்சார ரீடிங் எடுக்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்த அரசு முயற்சி எடுக்குமா?
மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பதில்:-ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சார ரீடிங் கணக்கிடும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே அதற்கான டெண்டர் போய் உள்ளோம். டெண்டர் முடிவுற்று ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்ற பெயரில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நான்கு தளங்களிலும் ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. திருச்சிக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் திருச்சி கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வந்தாலும், அதில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே மனநிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டு சோதனையால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.






