என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை
- அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக ஆலோசனை.
- கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கு காலக்கெடு வைக்கப்பட்டது.
அந்தக் காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ரகசியமாக பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை டாக்டர் ராமதாசிடம் வழங்கினர்.
இன்னும் 2 நாட்களில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என நேற்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக பா.மக. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளராக தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர்கள் 108பேரும், மாவட்டத் தலைவர்கள் 108பேரும், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் 111பேரும், மாவட்ட தலைவர்கள் 111 பேரும் கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.






