என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
- புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.83,440ஆக விற்பனையாகிறது.
காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.83,440ஆக உயர்ந்து விற்பனையாகிறது.
- பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை நடைபெற்றது.
- காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்கியது. முன்னதாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டன.
பின்னர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, வாகனங்கள் மற்றும்கோவில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
இதேபோல் பழனி மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
விழாவின் 10-நாளான 1-ம் தேதி பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
- இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30).
இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார்.
இன்று வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்றபோது தோப்பூர் விலக்கு அருகே அவரை மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சாலை ஓரத்தில் உள்ள மரக்கடைக்குள் ஓடினார். ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்த நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மரக்கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருச்செந்தூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
- திருப்பூரில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என டெல்லி வரையில் இயங்கும் முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.
பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும் திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
வருகிற 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று நவராத்திரி விழாவும் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. இதற்காக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.
திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும் அவற்றுடன் சேர்த்து கன்டெய்னர் லாரி மற்றும் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
பெரியவர்களுக்கு டி-சர்ட், டிரக் பேன்ட்' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்து வகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும்.
வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்திய-கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதே நேரம் இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 24-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25 மற்றும் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
- ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
* 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.
* 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
* 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
* இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது"
* கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
* நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
* தமிழ்நாடு அரசு நடத்தும் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
என்று தெரிவித்தார்.
- 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாக குறைப்பு.
- 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில், ஆவின் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாயாகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை.
- மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும்.
நெல்லை:
சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது.
மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசியதாக பல செய்திகள் வந்துள்ளன.
முதலமைச்சரை மிரட்டும் தொனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோ கால் வேறு. பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனத்துடனும் விஜய் இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்குத் தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' பட பிரச்சனைக்காக 3 நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல.
மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது. கவர்னர் எதனையும் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம்.
குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
பா.ம.க. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து சட்டமன்றம் கூடும்போது பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயம் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாகவே ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
நேற்று மாலையும் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களையும் வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என தேடியது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி லாரியின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை லாவகரமாக கீழே எடுத்து போட்டு ருசித்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து ஆசனூர் வனப்பகுதியில் சுற்றிவரும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.
- தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. அதிக விலைக்கு பால்பொருள்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதன் பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறுவனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறுவனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை.
ஜி.எஸ்.டி வரி எனப்படுவது பால் பொருள்களின் விலைகள் மீது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையாகும். அந்த வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்கள் வாடிக்கையாளர்களையே சென்றடைய வேண்டும். அப்படியில்லாமல் அதே விலையில் விற்க வேண்டும் என்றால் பால் பொருள்களின் அடிப்படை விலையை உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவே பொருள். ஆவின் பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டனவா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
அமுல் நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. நந்தினி 15 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பத்துக்கும் மேற்பட்ட வகையான பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது ஆவின் நிறுவனம் மட்டும் விலைகுறைப்பு செய்ய மறுப்பதன் நோக்கம் என்ன? ஆவின் பொருள்களை பயன்படுத்தும் ஏழை மக்களை சுரண்டி அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. ஆவின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆகியுள்ளது. இது 36% உயர்வு ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும்.
- வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-
விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும். மதத்தால் சண்டையிட்டால் வாழ முடியாது. என்றும் மத நல்லிணக்கம் என்பது தான் முக்கியம். குரங்கை விட மோசமானவனாக மனிதன் உள்ளான். பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. நான் பெரியார் புத்தகங்களை படித்த பிறகு தான் கடவுள் என்பது கற்பனை என உணர்ந்தேன்.
திருப்பூர் எவ்வளவு வளர்ந்து உள்ளது. ஆனால் அமெரிக்காகாரன் திடீரென ஆப்பு வைத்து விட்டான்வடமாநில இளைஞர்களிடம் உங்கள் ஊருக்கு செல்கிறீர்களா? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு சிறப்பாக உள்ளனர்.
மும்பையில் பீப் ஸ்டால் இல்லை. அங்கு அவ்வளவு கொடுமை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டி தான் பேசி வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக உள்ளது. 2026ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.
தமிழகத்தில் நீதிக்கட்சி முதல் தி.மு.க., ஆட்சி வரை சமூக நீதி ஆட்சி நடை பெறுகிறது. வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய மோதல் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டு சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. பணம் உள்ளது. யார் ஆட்சி வந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு மூன்றரை வயது சிறுவன் சத்யா.
இவர்கள் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமை குடிலில் அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி சிறுவன் விளையாடி கொண்டிருந்த பொழுது தெருநாய் முகம், கை ஆகிய பகுதிகளில் அவனை கடித்து குதறியதால் காயங்கள் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை யில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை கழிவறைக்கு செல்லும் போது சிறுவன் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு மருத்து வமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






