என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்தநிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    • கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா்.
    • தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கடந்த 19-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் நடை பெற்று வரும் இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

    நேற்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது இடைநிலை ஆசிரியா்களை போலீசார் கைது செய்தனா். அவா்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக, போலீஸ் வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி அலைக்கழித்ததாகவும், கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்க ளில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரி யா்கள் புகாா் தெரிவித்தனா்.

    மேலும், போலீசார் தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சோ்ந்த கலிய மூா்த்தி என்பவா் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று ஆசிரியர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடிக்கிறது.

    இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை நாளை முதல் தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:-

    ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இதுவரை சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். நாளை முதல் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.

    நாங்கள் நீண்டகாலமாக எங்களின் உரிமைகளை இழந்து வருகிறோம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக்க ணக்கான ஆசிரியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
    • உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.

    கடலூர்:

    மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு கடலூா் முது நகா் மீன்பிடி துறை முகத்தில் இரவு நேர மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம். இதில், மீனவா் கிராமங்களில் பல்வேறு கோவில்களில் இருந்தும் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.

    மின்விளக் குகள், பூக்களால் படகுகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் கடலில் உற்சவா்கள் வலம் வருவது வழக்கம். இதன்படி, தைக்கால் தோணித்துறையில் கருப்ப முத்துமாரியம்மன் படகில் எழுந்தருளி உப்பனாற்றில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல மீன்பிடி துறைமுகத்தில் தைக்கால் தோணித்துறை கெங்கை அம்மன், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளி ரியம்மன், சலங்கைக்காரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை முத்துமாரியம்மன், அக்கரைக்கோரி கண்ணனூா் மாரியம்மன் ஆகிய உற்சவா்கள் படகுகளில் எழுந்தருளி வலம் வந்தனா்.

    பின்னா் மீன்பிடி துறை முகத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதனால், துறைமுகம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மேள தாளங்கள் முழங்கிட வாண வேடிக்கையுடன் சாமிகள் படகுகளில் கடற்கரையோரமாக உலாவந்து துறை முகம் மீன்பிடித்தளத்தில் நிறுத்தப்பட்டது.

    விழா மிகவும் ரம்மியமாக இருந்ததால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நடை பெற்ற இந்த மாசி மக திருவிழாவில் பல்லாயி ரக்கணக்கானோர் குவிந்து விடிய விடிய சுவாமி தரிசனம்

    செய்தனர்.

    • காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

    காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

    • கமல்ஹாசன் போட்டியிடுவதற்கு வசதியாக கோவை பாராளுமன்ற தொகுதியைவிட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திட்டமிட்டு உள்ளது.
    • கமல்ஹாசனுக்கு மேல்சபை எம்.பி.பதவியை மட்டும் அளிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதி களை ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாகி வருகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கமல்ஹாசன் போட்டியிடுவதற்கு வசதியாக கோவை பாராளுமன்ற தொகுதியைவிட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திட்டமிட்டு உள்ளது.

    அதற்கு பதிலாக தி.மு.க. கடந்தமுறை வெற்றி பெற்ற பொள்ளாச்சி தொகுதியில் களம் இறங்க அந்த கட்சி காத்திருக்கிறது. இதை தொடர்ந்து இன்னொரு தொகுதியாக தென் சென்னை அல்லது மதுரை தொகுதியை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகுந்த கவனத்தோடு காய் நகர்த்தி வருகிறது.

    இதில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் கோவை தொகுதியில் மட்டுமே களம் இறங்க முடியும் என்கிற இக்கட்டான சூழல் கமல் கட்சிக்கு ஏற்படும். அது போன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது பற்றியும் கமல்ஹாசன் தீவி ரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இது ஒருபுறம்ம இருக்க காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளிலேயே கமல் ஹாசனுக்கு இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு காங்கிரஸ் கட்சி யும் ஒத்துக் கொண்டு உள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 10 இடங்களை ஒதுக்க தி.மு.க. தலைமை தயாராக உள்ளது.

    இந்த 10 தொகுதியில் கமல்ஹாசனுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிவிட்டால் மீதம் 8 தொகுதிகள் மட்டுமே இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி அதுபற்றி யோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.

    இதனால் கமல்ஹாசனுக்கு மேல்சபை எம்.பி.பதவியை மட்டும் அளிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஒரு பாராளுமன்ற தொகுதி மற்றும் மேல்சபை எம்.பி. பதவியை எப்படியாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக உள்ளது. இது தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
    • உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

    இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    டால்மியாபுரம்:

    கல்லக்குடி பேரூராட்சியில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், தாசில்தார் முருகன், கல்லக்குடி பேரூரட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஊட்டத்தூர் ஊராட்சி மன்ற இந்திரா அறிவழகன், அன்பழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடு பிடி களமானது எந்த வித வளைவுகளும் இன்றி நேர் பாதையாக அமைந்ததால், காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து, வீரர்களை சுழற்றி அடித்து நேராக புயலென விரைந்து சென்று கெத்து காட்டின.

    காளைகள் கெத்து காட்டினால் வீரர்கள் சும்மா இருப்பார்களா? சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடிக்க 450 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் அணி அணியாக மாடு பிடி களத்திற்குள் வந்து புயலென வாடி வாசலை விட்டு வெளியில் வந்த காளைகளை, லாவகமா மதில்களை தழுவி, தங்களின் புஜ பலத்தால் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

    திமிழ் உள்ள திமிரல், பாய்ந்து வந்து, காளைகள் வீரர்களை சிதறடித்தபோது, உன் திமிழ் பிடித்து, தமிரை அடக்குகிறேன் பார் என்று காளையர்கள் வீரம் காட்டிய போதும், பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கரகோஷம் எழுப்பி, கத்திய சத்தம் விண்ணை பிளந்தது. சிறப்பாய் சீற்றம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும், பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றதோடு, மாடுகள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காயமடையும் இளைஞர்களுக்கு சிசிக்கை அளிப்பதற்காக அவசர கால ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் வருகிற 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பிரதமர் வருகையையொட்டி பா. ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,400 ஏக்கர் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை 80க்கு 60 அடி என்ற அளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மீது இரும்பு பில்லர்கள் கொண்டு மேடை அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று கொண்டு பங்கேற்கும் விதமாகவும், 250 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட இடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கான பிரத்யேக வழித்தடம், ஹெலிபேடு, உணவுக்கூடம், பார்க்கிங் வசதி, வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி.களுக்கான பகுதி, பொதுக்கூட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துரிதகதியில் நடக்கின்றன. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு சென்றுள்ளார். இதையடுத்து பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என தெரிகிறது.

    இதுகுறித்து பொதுக்கூ ட்டத்திற்கான பொறுப்பாளர்களான பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது. அதனை ரத்தாக்கி செயல்படுத்தி காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,333 பூத்களிலும் தலா 370 பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். மாநில தலைவர் அண்ணாமலை, தனது உடலை வருத்திக்கொண்டு யாத்திரைக்காக அனைத்தையும் செய்து வருகிறார். அவரது உழைப்பு ஈடு இணையற்றது. இத்தனை நாட்கள் அவர் உழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொதுக்கூட்டத்தை முழு வெற்றி பெறச்செய்ய உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் வருகிற 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

    இதன்படி கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவினாசி வழியாக செல்ல வேண்டும். கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.

    திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவினாசி வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர் பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி, வழியாக செல்ல வேண்டும்.

    பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவினாசிபாளையம் வழியாக செல்ல வேண்டும். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.

    அதேபோல கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவினாசி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

    பிரதமர் வருகையையொட்டி பா. ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்விதமாக பா. ஜனதா கட்சி அலுவலகத்தில் விளம்பர இசை நிகழ்ச்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில் வேல் முன்னிலை வகித்தார். இசை தயாரிப்பு உடுமலை பிரவீன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அருள் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், பிரதமர் வருகை குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் பொதுக்கூட்ட மேடை மற்றும் மைதானத்தை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கொள்ளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    போலீசார் கூறுகையில், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்பட 6 மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.3892 மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
    • குறுவை, சம்பா சாகுபடிக்காக ஏக்கருக்கு சராசரியாக ரூ.30,000 வரை உழவர்கள் செலவழித்துள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெரு மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    மொத்தம் 4 லட்சத்து 12,165 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.160.42 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.3892 மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவானத் தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்குவது எந்த வகையில் நியாயம்?

    குறுவை பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40,000 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சம்பா, தாளடி பருவத்தில் வறட்சியால் 12 லட்சம் ஏக்கரில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்குக் கூட அரசு இழப்பீடு வழங்கப்படவில்லை. குறுவை, சம்பா சாகுபடிக்காக ஏக்கருக்கு சராசரியாக ரூ.30,000 வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். ஆனால், செலவழித்த பணத்தில் பாதியைக் கூட திரும்ப எடுக்க முடியாததால், சம்பா சாகுபடிக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவைப் பயிர்கள் கருகிய நிலையில், அதற்காக வாங்கிய கடனை இன்னும் செலுத்தாத உழவர்கள், இப்போது சம்பா சாகுபடி வீழ்ச்சி அடைந்ததால் கூடுதல் கடனை சுமக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது.

    உழவர்களின் துயரத்தை உணர்ந்து கொண்டு தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சம்பா பருவத்தில் வறட்சியால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதே போல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார்.
    • நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாசை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களைவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று இரவு சந்தித்து பேசியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது.

    இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார். நிகழ்ச்சி முடித்து அங்கிருந்த கிளம்பிய சி.வி. சண்முகத்திடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்று கூறிய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.

    • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.
    • அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட கலைஞர் தன் மரணத்திலும் போராளியாக-சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு உடன் பிறப்புகளாம் உங்களை, உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், கழகத்தின் தலைவராகவும் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். காரணம், யானைதான் காட்டின் வளத்தைப் பெருக்கும். இயற்கையின் சமச்சீரான நிலையைத் தக்கவைக்கும். பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கும். யானை வாழ்ந்ததற்கான அடையாளம் அது நடந்து சென்ற பாதை மட்டுமல்ல, அது உலா வந்த காட்டின் பசுமையும் செழுமையும்தான். தமிழ்நாட்டின் தாய் யானையாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர். 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர் 80 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இனம் காத்திடப் போராடினார். மொழிகாக்கச் சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதலமைச்சர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீனத் தமிழ்நாட்டைத் தன் சிந்தனை உளியால் செம்மையுறச் செதுக்கினார். எதிர்காலத் தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்த பிறகே நிரந்தரமாக ஓய்வு கொண்டார்.

    அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது. அவர்களின் மனங்களில் குடியேறியது. மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. அந்த அண்ணா நம்மை விட்டு மறைந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கலைஞர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் தம்பி என்றவர் அண்ணா. அந்த அண்ணாவின் இதயத்தைக் இரவலாகக் கேட்டவர் கலைஞர்.

    சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்பதுதான் தலைவரின் அரசியல் இலக்கணம். சொன்னது போலவே, அவர் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்ட போது, தன் அண்ணனின் அருகிலேயே உறக்கம் கொண்டார். இலக்கியமாய் நிலைத்துவிட்ட, 'இரவல் கேட்ட இதயத்தை'யும் சொன்னது போலவே, அண்ணாவின் கால்மலரில் வைத்து வரலாற்றைப் படைத்தார்.

    வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட 1969-ல் பேரறிஞர் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்துக் கொடுத்தவரே தலைவர் கலைஞர்தான். ஓங்கி உயர்ந்த தூணும், அணையா விளக்கும் கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தவரும் அவர்தான். தன்னை அரசியல் களத்தில் ஆளாக்கிய அண்ணாவுக்கு மட்டுமல்ல, அரசியல் களங்களில் மற்போர் போல சொற்போர் நடத்தினாலும் தமிழருக்கேயுரிய பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் மாற்று இயக்கத்தின் தலைவர்கள் மறைந்த போதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர் கலைஞர்.

    ராஜாஜி, காமராஜர் ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தவர் கலைஞர்தான். எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில், 1975 அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி பிறந்த நாளன்று காமராஜர் மரணமெய்திய போது, முதலமைச்சராக இருந்த கலைஞரே மழையையும் சகதியையும் பொருட்படுத்தாமல், கிண்டியில் உள்ள இடத்திற்கு இரவு நேரத்தில் நேரில் சென்று, கார் விளக்கொளியில் ஆய்வு செய்து, அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மேற்பார்வையிட்டு, அரசு மரியாதையுடன் காமராசரின் உடலை எரியூட்டச் செய்து, அந்த இடத்தில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சின்னமான ராட்டைச் சின்னத்துடன் கூடிய நினைவிடத்தை அமைத்தவர் கலைஞர்.

    ராமாயணத்தைச் சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதியவர் ராஜாஜி என்பதனால் அவரது நினைவிடத்தை ராமரின் பட்டாபிஷேக மகுடம் போல அமைத்தவரும் கலைஞர்தான். மாற்றுக் கருத்துடையவர்களேனும் அவர்தம் மனம் எதை விரும்பியதோ அதனையே நினைவிடத்தின் அடையாளமாக்கியவர் கலைஞர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் முதன் முதலில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்தவரும் கலைஞரே. பலருக்கும் நிழல் தருபவராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதன் அடையாளம் அது.


    தேர்தல் களத்துப் பகையை நெஞ்சில் கொள்ளாமல், தன் காலத்துத் தலைவர்களுக்கு, உரிய மரியாதையுடன் நினைவிடம் அமைத்த கலைஞர், அவர் விரும்பிய படி கடற்கரையில் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. தம்பிடி இடம் கூடத் தர மாட்டோம் எனக் காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். கழகத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலைஞருக்குக் கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கண்ணீர்க் கோரிக்கை வைத்தது. இரக்கம் சுரக்க வில்லை ஆட்சியாளர்களுக்கு! ரத்தம் கொதித்தது உடன்பிறப்புகளுக்கு! சட்டப் போராட்டத்தைத் தொடங்கினோம். தந்தைக்கு மகன் செய்யும் கடமையாக நினைக்காமல், தலைவருக்குத் தொண்டன் செய்ய வேண்டிய கைம்மாறாக இதனை முன்னெடுத்தேன். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின், நண்பகல் பொழுதில் நல்ல தீர்ப்பு வந்தது. கடற்கரையில் இடம் ஒதுக்கித் தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். தன் அண்ணனிடம் இரவலாகப் பெற்ற இதயத்தை ஒப்படைத்து, சொன்ன சொல் காத்த தம்பியானார் கலைஞர்.

    'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று தலைவர் கலைஞரே எழுதித் தந்த தனக்கான கல்லறை வரிகளுடன் கடற்கரையில் அவர் ஓய்வு கொள்ளத் தொடங்கினார். அன்றாடம் ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் அங்கே வந்து கண்ணீரைக் காணிக்கை யாக்குவது வாடிக்கை. 2021 தேர்தலில் கழகம் பெற்ற வெற்றியை உயிர்நிகர் கலைஞரின் ஓய்விடத்தில்தான் உங்களில் ஒருவனான நானும் காணிக்கையாக்கினேன். தலைவரின் ஓய்விடத்தில் தங்களின் திருமணத்தை நடத்தி, புதுவாழ்வைத் தொடங்கிய வெற்றிகரமான இணையர்கள் உண்டு. பிறந்த குழந்தையை கலைஞரின் ஓய்விடத்தில் கிடத்தி, குடும்பத்தின் மூதாதையரை வணங்குவது போன்ற வணக்கத்தைச் செலுத்தியவர்கள் உண்டு. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்புநிலை மக்கள் எனத் தலைவர் கலைஞரின் ஆட்சித்திறனால் தங்கள் வாழ்வில் ஒளிபெற்றவர்களின் நன்றி செலுத்தும் இடமாக கலைஞரின் ஓய்விடம் அமைந்தது.

    தமிழுக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாகக் கட்டியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட மாடல் அரசு அதற்கான செயல் திட்டங்களை வகுத்தது. 6-வது முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தொடங்கிய இந்தப் பணி, கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருவதற்கு முன்பாக நிறைவடைந்துள்ளது.

    எதையும் தாங்கும் இதயத்துடன் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன அண்ணா, கலைஞர் ஓய்வு கொள்ளும் இடங்கள். கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழினத்தின் உயர்வுக்காக அயராது உழைத்த கலைஞருக்காக இரவு-பகலாக உழைத்தும், தங்கத்தைப் போல இழைத்தும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது இந்த நினைவிடம்.

    என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு களாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றேன்.

    "எழுந்து வா.. எழுந்து வா.." என்று கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவிரி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளிலும் நின்று முழக்கமிட்ட உடன்பிறப்புகள் நீங்கள்தானே..! உங்களின் குரலை இப்போது கடல் அலைகள் அன்றாடம் முழக்கமிடுகின்றன. அண்ணாவை எழுந்து வரச் சொன்னார் கலைஞர். அண்ணா வரவில்லை. கலைஞரை எழுந்து வரச் சொல்கின்றன அலைகள். அவரின் ஓய்வு நிறைவடையவில்லை. தன்னால் வர இயலாவிட்டாலும், தன் உடன்பிறப்புகள் நிச்சயம் வருவார்கள் என்பதைத் கலைஞர் அறிவார். தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலை மாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    ×