என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்-வேண்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் குமார். இவரது மகன் விக்னேஷ்குமார்-உமா மகேஸ்வரி திருமணம் பொன்னேரியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

    மணமக்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும். கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம். மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டு மொத்தமாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடுமையாக ஏறியுள்ளது. பூண்டு விலை தற்போது சரிந்து வருகிறது.

    வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும். கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 24 மணி நேரம் கடையை திறக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் போலீசார் கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பேரமைப்பு தலைவர் வில்லியம்ஸ், நந்தன், எஸ்.வி, முருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பால்ராஜ், கேசவன், ரமேஷ் கண்ணன், செங்குன்றம் வியாபாரிகள் சங்கதலைவர் செல்வகுமார், செல்லதுரை, அப்துல், காதர், வேலு, ஆச்சாரி, பால் பாண்டி, பாலகிருஷ்ணன், அஜிஸ், யுவராஜ், திராஜிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது.
    • தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம்.

    தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி.

    நாட்டை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்பொழுது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? தேர்தல் வரும் பொழுது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். நான் ஆட்சியில் அமர்ந்த பின்பு மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப் பார்க்கட்டும்.

    காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பா.ஜ.க.விற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரை அக்கட்சியில் சேரும்போது ஏதாவது செய்வார்கள். அதன்பின் எந்த செய்தியும் வராது.

    வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பா.ஜ.க.வினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள். நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர பல்வேறு கட்சியில் இருந்து அழைப்பு வருகிறது. என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள். நானும் அதை ரகசியமாக வைத்துள்ளேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது. வேட்பாளர் அறிவித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    வாக்கு எந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை.

    நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு எந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

    • இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
    • பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். வெளிநாட்டில் நடைபெறும் 'தக்லைப்'சினிமா படப் பிடிப்பில் பங்கேற்றுக் கொண்டே பாராளுமன்றத் தேர்தல் பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த 19-ந் தேதி அன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் 21-ந் தேதி அன்று ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழாவிலும் பங்கேற்றார்.

    அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே வருகிற 29-ந் தேதி மீண்டும் கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதற்குள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனுக்கான இடம் உறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார்.
    • இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஜம்புதுரைக்கோட்டை ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது37). திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அப்போது விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார். அது குறித்து போலீசில் புகார் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து காலையில விசாரணைக்கு வருமாறு கூறினர்.

    பின்னர் நிலக்கோட்டையில் வக்கீலாக பணிபுரியும் எனது சகோதரர் உதயகுமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது. நாங்கள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு பைப் சேதம் அடைந்தது தெரிய வந்தது. அப்போது விஜய் குடும்பத்தினர் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    • போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது.

    இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையான உரிமம் பெற்ற உணவகங்கள் தடையின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், "சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடச்சொல்லி போலீசார் கூறுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் சென்னை நகருக்குள் வருபவர்கள் ஒரு கப் காபி அல்லது லேசான டிபன் சாப்பிட விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் ஓட்டல் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    சங்க செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் கூறியதாவது:-

    ஐ.டி. நிறுவனங்கள், விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வரை மக்கள் பயணமாகி கொண்டே இருக்கின்றனர்.

    இதுதவிர பெரிய மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். பஸ், ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி மற்ற முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருந்தால்தான் அரசுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த முடியும். தொழில் செய்யவிடாமல் தடுத்தால் எப்படி வரி கட்டுவது.

    எனவே போலீஸ் இடையூறு இருக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்குவதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என்றார்.

    இதற்கிடையே இரவு 11 மணிக்கு மேல் அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஓட்டல்கள் செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
    • காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

    இதனை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுடன் சிறை பிடிப்பார்கள்.

    "பொது மக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

    அதன் பெயரில் மாவட்ட நிர்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது.

    காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி சாலையில் பாயும் கனரக வாகனங்களை பொதுமக்களுடன் இணைந்து சிறை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது.
    • சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உறுதிமொழி வாசித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, உலிபுரம், தலைவாசல், மங்கபட்டி, கடம்பூர், ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 காளைகள் கலந்து கொண்டன. 400 மாடுபிடி வீரர்கள் 4 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடுபிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து மைதானத்தில் விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்து மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.

    இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கும் கரகோஷம் எழுப்பினார்கள்.

    சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. விழா குழு சார்பாக டிரஸ்ங் டேபிள், பட்டு புடவை, வெள்ளி நாணயம், மின்விசிறி, தென்னங்கன்று போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

    • தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள்.
    • தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மு. பழனிசாமியின் ஆணைப்படி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ''தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்'' வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள ''ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில்'' (எழும்பூர் ரெயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது.

    தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, 'எடப்பாடி பழனிசாமி ஆகியோரது அ.தி.மு.க. ஆட்சிகளில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களையும்; தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும்; மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும்'' பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
    • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    • கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.
    • எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களான சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்தநிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    ×