என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
* பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
* கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ள நிலையில் டி.ஜி.பி.கையில் விருது பெறுகிறார்.
* போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி தொடர்பில் உள்ளார்.
* செய்தி வெளிவந்த பிறகே ஜாபர் சாதிக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
* ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும்.
* தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
* முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி மண்டல வாணிப அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்று பேசுகையில், நாட்டில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை மோடி தனது கைப்பாவையாக வைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியாவில் உடனுக்குடன் தரவுகளை எடுக்க முடியும். ஆனால் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமா்ப்பிக்க 4 மாதங்கள் ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டுள்ளது. ஸ்டேட் வங்கி இப்படி கூற பிரதமர் நரேந்தி ரமோடி அளித்துள்ள அழுத்தமே காரணம். எனவே கால அவகாசம் இன்றி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், டாக்டர் சிவக்குமார், மண்டல தலைவர் சிவபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர்.
- 2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், பெண்களை முன்னிறுத்தும் வளர்ச்சிகள், பெண்கள் நிர்வாகம் ஆகியவற்றில் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.
பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை கட்டுவது, பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் கழிப்பறைகள் வசதிகள் செய்து கொடுப்பது ஆகிய திட்டங்களால் மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர்.
குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. பல இடங்களில் மாணவர்களைவிட மாணவிகள்தான் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்மார்கள் பிறந்த குழந்தைகள் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர்.
அதேபோல், நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர்.
முத்ரா கடன் எடுத்து தொழில் தொடங்கிய பெண்கள் 40 கோடி பேர் உள்ளனர். அவர்கள் 23 லட்சம் கோடி கடனாக பெற்று உள்ளனர்.
பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த தேசிய கனவு பெண்களின் சரி பாதி பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்' பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம்:
உலக பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. இந்த சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள்.
- 6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.
சென்னை:
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. வருகிற 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர். 5 நாட்களில் 60 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் பெற்றோர் குவிகிறார்கள். இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் எவ்வித செலவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்க்க அலைமோதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்க தொடங்கிய முதல் நாளில் பெற்றோர் குவியத் தொடங்கினர்.
ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள். விண்ணப்ம் வாங் குவதற்கு நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.
இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அசோக் நகர் மேல் நிலை பள்ளியில் குறிப்பாக 6-ம் வகுப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். அப் பகுதியில் உள்ள மெட்ரிக் குலேஷன், தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவர்கள் இங்கு சேருகின்றனர் என்றார்.
இந்த பள்ளியில் 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முழு அளவில் தேர்ச்சி பெறுவதால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.
அரசு பள்ளிகள் என்றாலே தரம் இருக்காது, கட்டமைப்பு வசதி இருக்காது என்ற பொதுவான பார்வைக்கு மத்தியில் அசோக்நகர் அரசு மகளிர் பள்ளி மட்டும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த பக்கம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அ.தி.மு.க. தரப்பில் சி.வி. சண்முகம் எம்.பி. 2 முறை டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் வரை கொடுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பா.ம.க. தரப்பில் மேல்சபை பதவியும் கேட்பதால் உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பா. ஜனதா தரப்பிலும் பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
டாக்டர் ராமதாஸ் இன்று சென்னை வருகிறார். சென்னையில் அவர் தங்கியிருக்கும் போது பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தமிழகத்தில் பா.ம.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பா.ஜனதாவுடன் இணைந்தால் டெல்லியில் பொறுப்புகள் கிடைக்கலாம். எனவே கட்சி நலன் கருதி அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் அ.தி.மு.க.வுடன் இணைந்து வெற்றி பெற்றாலும் எந்த புண்ணியமும் இல்லை. மத்தியில் மோடி ஆட்சி அமைந்தால் பொறுப்புகள் பெறுவதன் மூலம் கட்சியையும் பலப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே எந்த பக்கம் சாய்வது? என்ன முடிவெடுப்பது என்ற தடு மாற்றத்துடன் இருக்கிறார்கள். நாளை (9-ந்தேதி) வரை காத்திருக்கும்படி அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். எனவே நாளைக்குள் பா.ம.க. முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது.
- கன்னியாகுமரியில் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும்.
- 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன் பக்தர்கள் ஓடத் தொடங்கினார்கள்.
திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்தி ரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகா தேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து அனைத்து சிவன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.
குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வழிநெடுகிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடை பெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
சிவாலய ஓட்ட பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலை மையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவராத்திரியை யொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. இன்று பிரதோஷம் என்பதாலும், மாலை 5 மணிக்கு கொன்றையடி நாதருக்கு அபிஷேகம் தொடர்ந்து மூலவராகிய தாணுமாலயன் சாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிவன், விஷ்ணு சாமிகள் திருவீதி உலா நடக்கிறது.
இரவு 11 மணிக்கு தாணுமாலயன் சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், விபூதி, பஞ்சாமிர் தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 2-வது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. சிவராத்திரியை யொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருக்கும்.
- யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
- சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது51). தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து அந்த வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்தது. யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து, அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேவர்சோலை சர்க்கார் மூலை பகுதியை சேர்ந்தவர் மகாதேவ். இவர் அந்த பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை பணி முடிந்து, தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தேவர்சோலை பகுதியில் வந்த போது அவரை ஒற்றை யானை வழிமறித்தது.
யானை நிற்பதை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோட அவர் முயற்சித்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவரை யானை தாக்கி தூக்கி வீசியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.
பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மகாதேவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
நீலகிரியில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
- உதயசூரியன் அல்லது கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் நேற்று முன் தினம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதை தொடர்ந்து கமல்ஹாசன் நேற்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கோவை, தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் ஒரு இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் உதயசூரியன் அல்லது கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கமல்ஹாசனோ மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்புகிறார். அப்போதுதான் தனது தனித்துவத்தை காட்ட முடியும் என்று அவர் நம்புகிறார்.
ஆனால் தி.மு.க. தரப்பிலோ, நாங்கள் ஒதுக்கும் இடத்தில் போட்டியிட்டால் உதயசூரியன் சின்னத்திலேயே களம் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் ஒதுக்கீட்டில் போட்டியிடுவதாக இருந்தால் கை சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று அந்த கட்சி கூறி வருகிறது.
இதனால் என்ன முடிவை எடுக்கலாம் என்பது பற்றி கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது.
- ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் சந்திக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகள் எவை என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு தேர்தலில் தந்தது போல தங்களுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் தி.மு.க. 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று கூறி வருகிறது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது. அதுபோல ம.தி.மு.க.வும் 2 தொகுதிகள் கேட்டதால் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
நேற்று ம.தி.மு.க. உயர் நிலைக் குழு கூட்டம் சென்னையில் கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது 2019-ம் ஆண்டு தேர்தலை போல ஒரே ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்வது என்றும் ஒரு மேல்சபை தொகுதியை கேட்டு பெறலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த இழுபறிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 10-ந்தேதி வேட்பாளர் தேர்வை தொடங்க இருப்பதாகவும் வெள்ளி, சனி இரண்டு நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன் பேரில் பேச்சு நடத்த வருமாறு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்துக்கு சென்றார்.
அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இருவரும் தொகுதி பங்கீடு குறித்து மனம் விட்டு பேசினார்கள். இதில் ஒருமித்த கருத்து உருவானதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வைகோவும் ஒரு தொகுதியை ஏற்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு தொகுதி பங்கீடு குறித்து அவர் தி.மு.க. தலைவர்களுடன் பேசினார்.
- மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
- கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.
மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
பெரும்பாறை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
லோகேஷ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் அங்கு பணியில் இருந்தனர். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த போது லோகேஷ்வரனுக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கும் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஷ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து லோகேஷ்வரனின் உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதன் பின்பு உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.






