என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
- விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.
சென்னை:
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். மேலும் 100-வது டெஸ்டில் விளையாடி புதிய மைல் கல்லை தொட்டார். அஸ்வின் 100 டெஸ்ட்களில் 516 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.
ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கும்ப்ளே, சி.எஸ்.கே. நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்ட னர்.
விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீரரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடினமான விஷயம். 100 போட்டியில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனையாகும்.
எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். அவரது புகழை வரலாறு சொல்லும். மிக சிறந்த சுழற்பந்து வீரர் சென்னையைச் சேர்ந்தவர் என்று வரலாறு கூறும் என்றார்.
முன்னாள் சுழற்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அஸ்வினுக்கு வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது. அப்போது கும்ப்ளே பேசியதாவது:
நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சிறந்தவர்களில் அஸ்வினும் ஒருவர். அவரது விக்கெட் எண்ணிக்கை சிறப்பானது. அவருக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் அமோகமான தொடர்பு இருக்கிறது. வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர். அவர் தனது 100-வது டெஸ்டை முன்பே விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது அவர் எப்போதும் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வின் கிளப் டி.என்.பி.எல். மற்றும் மாநில அணிக்கான தொடரில் விளையாடி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கூறினார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் வீடியோ பதிவு மூலம் அஸ்வினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
வீடியோ காலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு புதுமை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அஸ்வின் சுழற்பந்து வீச்சை முன்னோக்கி கொண்டு சென்றார். கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் சுழற்பந்து வீரர் பற்றிய நமது புரிதலையும், அறிவையும் அவர் முன்னோக்கி நகர்த்தி உள்ளார் என தெரிவித்தார்.
இறுதியில், ஏற்புரை நிகழ்த்திய அஸ்வின், வாழ்நாள் முழுவதும் டோனிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
- நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையிலான குழுவினர் இன்று காலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் சின்னகோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது.
இதுகுறித்து காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் முறையாக ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
- ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
- ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந் துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
பங்குனி உத்திர நாளன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்க மன்னார் சன்னதியில் வீற்றியிருந்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சனம் பட்டர் கொடியேற்றி கொடிமரத்திற்கு அபிஷேகம் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜைகளை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து பூஜையை உடனிருந்து செய்த ரங்கராஜ் என்ற ரமேஷ் பட்டர், சுதர் சன பட்டர், ஐகிரி வாசன் பட்டர், கோபி பட்டர், முத்து பட்டர் சிறப்பாக பூஜைகள் செய்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுகிறது .
திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காலை மற்றும் இரவு வேலைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.
- கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.
அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.
- திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் பிரதீஸ்வரன்(42) ஓட்டி வந்தார்.
திண்டிவனம் அருகே சாரம் பாஞ்சாலம் ஜங்ஷன் அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பஸ் டிரைவர் பிரதீஸ்வரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 17-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டனர்.
இதில் 9-க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது.
- ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். குளித்தலை அருகே கரூர் முதல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது பெட்டவாயிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது,
தொடர்ந்து மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை ஆர்.டி.ஓ. தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
அப்போது குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், குளித்தலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா மற்றும் காவல்துறையினர் இருந்தனர்.
- இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
ரேசன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் வித்யாலயம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் விரைந்து வந்து மிதின்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
- போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் சத்யம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ராயகிரியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதின்குமார் (வயது 19) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்றிரவு நண்பர்களுடன் பேசி விட்டு மிதின்குமார் தனது அறைக்கு சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. நண்பர்கள் சென்று பார்த்தபோது மிதின்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் மிதின்குமாரின் தந்தை மணிகண்டன் கல்லூரிக்கு விரைந்து வந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மிதின்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் மிதின்குமார் சொந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண் கடந்த 2 நாட்களாக அவரிடம் பேசாததால் மன வேதனையடைந்து தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
- நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.
சென்னை:
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.
அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.
இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.
இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.
இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.
இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.
- மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
- தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம், நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலின வாக்காளர்கள் 152 பேர் அடங்குவர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளது. தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
100 வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் உள்ளனர். தொகுதியில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 13 வாக்குச்சாவடிகள் கவனிக்கத்தக்கதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.
இந்த பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 203 பேரும் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 1,517 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 126 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டயறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 8,873 பேரும், முதல் தலைமுறை வாக்காளர்கள் 22 ஆயிரத்து 492 பேரும் உள்ளனர்.
- எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
- சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
- கூடலூரில் மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணைய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளனர்.
நேற்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 16 பறக்கும் படையினர் நேற்று மாலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 702 பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரையில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியே 67 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறக்கும் படை அதிகாரிகள் சோதனையை தொடங்குவதற்கு முன்பே நேற்று முன்தினம் போலீசார் பாரிமுனை பகுதியில் ரூ.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு பறக்கும் படை சோதனையில் நேற்று இரவு ரூ.1 கோடியே 42 லட்சம் பணமும், இன்று காலையில் வால்டாக்ஸ் சாலை சந்திப்பு அருகே ரூ.10 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.
சவுகார்பேட்டை பகுதியில் வணிக வளாகம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 42 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது.
இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அது வியாபாரி ஒருவரின் பணம் என்பது தெரிய வந்தது. ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக சம்பாதித்த பணம் இது என்று கூறப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகளின் படி இந்த பணத்தின் முழு பின்னணி பற்றி விசாரித்து வருகிறார்கள். இன்று காலையில் வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு அருகே வைத்து பிடிபட்ட ரூ.10½ லட்சம் தொடர்பாக சவுகார்பேட்டையில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் ரூ.2 கோடி அளவுக்கு பணம் பிடிபட்டுள்ளன.
கூடலூரில் மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.
அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை-சங்கரன் கோவில் சாலையில் சின்ன கோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது. அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது. ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் காரில் இருந்த ரூ.1.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 லிட்டர் வெளிமாநிலங்களை சேர்ந்த மதுபான வகைகள் பிடிபட்டுள்ளன.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ் குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 இருந்தது கண்டறியப்பட்டது.
மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது.
இப்படி சோதனையில் சிக்கிய ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதே போன்று பறக்கும் படை அதிகாரிகளின் வேட்டை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.






