search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?
    X

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
    • நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.

    இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.


    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.

    இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.

    நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.

    இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.

    Next Story
    ×