என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
- ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.
தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.
அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.
மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.
இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுவர்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.
- சென்னையில் 3 தொகுதிகளிலும் 944 இடங்களில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
சென்னை :
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னையில் கட்சி கொடிகள், பதாகைகள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சுவர்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2 தினங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. விதிகளை மீறி சுவர்களில் எழுதப்படும் கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்ட பிறகு அந்த கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் 3 தொகுதிகளிலும் 944 இடங்களில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அந்த பகுதிகளில் உள்ள கொடி கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.
அதுபோல சென்னையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்கள் அருகிலும் கட்சி கொடிகள் இல்லாதவாறு விளம்பரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
நேற்று மட்டும் சுமார் 5,200 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 2931 போஸ்டர்கள், 149 பேனர்கள் அதிரடியாக சென்னை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.
- வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி விட்டனர்.
- பொதுமக்களுக்கு செய்யப் போகிற புதிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க. அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் 4 ஆண்டுகளாக களத்தில் உள்ளன.
இந்த கட்சிகளின் தலைமையின் கீழ் உள்ள கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டன. தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி விட்டனர். பொதுமக்களின் வாக்குகளை பெற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது வழக்கம். பிரசாரத்தின் போது நாங்கள் ஜெயித்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்றாற் போல் செயல் திட்டங்களை அறிவிப்பார்கள். தேர்தல் அறிக்கையாக இதனை புத்தக வடிவில் ஒவ்வொரு கட்சியினரும் தயாரித்து பிரசாரத்திற்கு முன்னதாக வெளியிடுவார்கள்.
அந்த வகையில் தி.மு.க. அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஒருசில நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய இந்த அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைகிறது. விரைவில் அக்கட்சிகளின் தலைவர்கள் இதனை வெளியிட உள்ளனர்.

தி.மு.க., அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு என தனி குழுக்கள் அமைத்து அந்த பணியை செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு செய்யப் போகிற புதிய திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும்.
பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் நாடு முழுவதும் ஒரே வகையான தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டனர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சந்திப்பதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்திற்கு செல்வார்கள். அதன் அடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட கட்சி தலைவர்கள் தயாராகி விட்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது.
- பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் நானும் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தோம்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ராமதாஸ் வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தமிழக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 90 கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர 13 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், மேலும் சில முக்கிய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் துப்பாக்கியை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இவர்களை தவிர 10 ஆயிரம் பேருக்கு இது தொடர்பாக உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றிய உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
- புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது.
- அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது.
தேர்தல் வந்தாலே பட்டி தொட்டி முதல் மாநகர பகுதிவரை விழா கோலம்தான். அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை என்றவாறு வலம் வரும் வாகனங்கள், போடுங்கம்மா ஓட்டு என்ற குரல்கள், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதிகள் என கலகலக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.
பாராளுமன்ற தேர்தலில் சற்று புதுமையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களை 4 தொகுதி வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டப் பேரவை தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது.
தேர்தல் பிரசாரம், தலைவர்கள் வருகை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் 4 பாராளுமன்ற தொகுதி கட்சியினர் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 4 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது என்ற நிலை உள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது. என்றாலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் பொருட்டு மறக்காமல் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.
- வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. சீனியர் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதுடன் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.
இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனும், தென்சென்னையில், தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இதே போல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் போட்டியிடுகிறார்கள்.
இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார் என்று முடிவாகி விட்டது. வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர். பெண்களுக்கும் இதில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள் இடம்பெற செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.
- 3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.
- கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர். இந்த தொகுதி 1952-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.
ஆனால் 1952 மற்றும் 1954-ல் திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது.1957, 62, 67-ம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டசபைக்காக தேர்தலை சந்தித்தது. 1971-ம் ஆண்டு முதல் தான் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலை விளவங்கோடு எதிர்கொண்டுள்ளது. அது முதல் 12 பொதுத் தேர்தல்களை விளவங்கோடு சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றிக்கனியை பறித்து உள்ளன.
இதில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால்தான் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. ஆனால் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது சந்தேகம் என்கின்றனர். தொகுதியைச் சேர்ந்த பலரும். பாரதிய ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜெயசீலனும் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் தனது பெருமையை நிலைநாட்ட தொகுதியில் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. தொகுதி தங்களுக்கு தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போதே சீட் கேட்டு, சென்னை மற்றும் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகளின் கோட்டையான விளவங்கோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என தற்போதே அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தங்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் போன்றவற்றை வைத்து அ.தி.மு.க.வினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு தொகுதியில் தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8-வது முறையாக மகுடம் சூடுமா? வேறு கட்சிகள் வெற்றியை தட்டிப்பறிக்குமா? என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- டி.டி.வி.தினகரனுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளது.
- பிற கட்சிகளுக்கும் தாமரை சின்னத்தில் ஒவ்வொரு தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. நீண்ட நாட்கள் பேச்சுவார்தைக்கு பிறகு பா.ஜ.க.-பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 10 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
பா.ம.க.விற்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டவர்களுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சேலத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கைகோர்க்கின்றனர். பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது போன்றவை இறுதி செய்யப்படாமல் உள்ளன.
பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் இன்று முடிவடைவதால் நாளை மறுநாள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்தில் நிற்க பா.ஜ.க. வலியுறுத்துகிறது. ஆனால் அவர் தனிச்சின்னத்தில் நிற்பதில் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.க. சின்னத்தில் நின்றால் 4 தொகுதிகள் வரை தர சம்மதிப்பதாகவும், தனி சின்னத்தில் நிற்க முன்வந்தால் 2 தொகுதிகள் கொடுக்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளது. பிற கட்சிகளுக்கும் தாமரை சின்னத்தில் ஒவ்வொரு தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்படாமல் இருப்பதால் அதனை பேசி நாளை முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டதால் ஓரிரு நாட்களில் தொகுதிகளை ஒதுக்கி விட்டு களத்தில் இறங்க பா.ஜ.க. தீவிரமாகி விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.
- மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
- விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
- தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.
மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.
பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.
இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.
இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.
பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.
ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.
பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.
சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
- மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை:
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன்படி பணப் பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியாக ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ குழு என 3 குழுவினரும் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் முழுவதிலும் 70 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்குடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது காரில் இருந்த காளையார் கோவில் பகுதியை உடையப்பன் என்பவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாச்சியர் ஷாலினியிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கடவூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனை யிட்டனர். அதில் பல ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள், சட்டைகள், டி-சர்ட்டுகள், பட்டாசுகள் ஆகியவை பெட்டி பெட்டியாக உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பொருட்களை ஒப்படைத்துசென்றனர்.
இதேபோல் மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயம் சிவகாசியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை மடக்கி அதில் முழுவதுமாக சோதனை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் 11 பெட்டிகளில் முழுவதுமாக பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.
லட்சக்கணக்கு மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினியின் அனுமதியுடன் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பட்டாசு பெட் டிகள் ஒப்படைக்கப்பட்டது.
முதற்கட்டமாக இந்த பட்டாசு பெட்டிகள் ஆந்திராவில் தேர்தல் காலத்தில் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டதா? யார் அனுப்பியது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவில் கட்டுகட்டாக ரொக்க பணம், கண்டெய்னர் லாரியில் பெட்டி பெட்டியாக பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணலாம்.






