search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Arrangement"

    • மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தமிழக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 90 கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுதவிர 13 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், மேலும் சில முக்கிய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் துப்பாக்கியை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

    இவர்களை தவிர 10 ஆயிரம் பேருக்கு இது தொடர்பாக உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றிய உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    ×