search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா கூட்டணியில் ஓ.பி.எஸ். உள்பட கூட்டணி கட்சிகளுக்கு நாளை மறுநாள் தொகுதிகள் ஒதுக்கீடு
    X

    பா.ஜனதா கூட்டணியில் ஓ.பி.எஸ். உள்பட கூட்டணி கட்சிகளுக்கு நாளை மறுநாள் தொகுதிகள் ஒதுக்கீடு

    • டி.டி.வி.தினகரனுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளது.
    • பிற கட்சிகளுக்கும் தாமரை சின்னத்தில் ஒவ்வொரு தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. நீண்ட நாட்கள் பேச்சுவார்தைக்கு பிறகு பா.ஜ.க.-பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 10 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

    பா.ம.க.விற்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டவர்களுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் சேலத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கைகோர்க்கின்றனர். பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது போன்றவை இறுதி செய்யப்படாமல் உள்ளன.

    பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் இன்று முடிவடைவதால் நாளை மறுநாள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்தில் நிற்க பா.ஜ.க. வலியுறுத்துகிறது. ஆனால் அவர் தனிச்சின்னத்தில் நிற்பதில் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.க. சின்னத்தில் நின்றால் 4 தொகுதிகள் வரை தர சம்மதிப்பதாகவும், தனி சின்னத்தில் நிற்க முன்வந்தால் 2 தொகுதிகள் கொடுக்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளது. பிற கட்சிகளுக்கும் தாமரை சின்னத்தில் ஒவ்வொரு தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்படாமல் இருப்பதால் அதனை பேசி நாளை முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டதால் ஓரிரு நாட்களில் தொகுதிகளை ஒதுக்கி விட்டு களத்தில் இறங்க பா.ஜ.க. தீவிரமாகி விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×