என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாடி மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அரியானா மாநிலம் பதிவு எண்கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தன. லாரியில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தினர். இன்று காலை ஏராளமான தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டெய்னர் பெட்டியை திறந்து சோதனை செய்த போது முதலில் இருந்த சில மூட்டைகளில் பா.ஜனதா கட்சியின் கொடி, தொப்பிகள் இருந்தன. பின்னர் இருந்த அட்டை பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் கண்டெய்னர் பெட்டியை பூட்டினர்.

    மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணம் பிடிபட்டு இருப்பதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்ட இடத்திற்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் கண்டெய்னர் லாரியை பலத்த பாதுகாப்புடன் பள்ளி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கண்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது அதில் இருந்த பொருட்கள் பற்றிய விபரங்களை தேர்தல் அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர். இதனால் கண்டெய்னர் லாரி பற்றிய பரபரப்பு நீடித்து வருகிறது.

    இதுகுறித்து கண்டெய்னர் லாரியை சோதனை செய்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றார். இதற்கிடையே லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
    • பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
    • நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

    பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

    தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

    தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

    இந்நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

    • மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
    • காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.


    கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கனிமொழி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.

    • ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கிராமம் புதிய மாரியம்மன் கோவில் தெருவை திலீப்குமார் மகன் சதீஷ்குமார் (வயது 20). புதிய காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பழனி (20) புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடேசன் மகன் வெங்கடேசன்( 20).

    இவர்கள் 3 பேரும் நண்பர்கள் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக பாசார் கிராமத்திலிருந்து ராமநத்தம் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பாசார் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாசார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆவட்டி கூட்டு ரோடு பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரே வந்த போது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் அந்த குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலில் நெல்லை, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக தூத்துக்குடிக்கு சென்று சத்யா ரிசார்ட்டில் இரவு தங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலை அங்குள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்தும், சாலையோர டீக்கடைகளில் டீ குடித்தவாறும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பது வழக்கம்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரிக்கிறார். இதற்காக பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் அருகே அரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    அந்த கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடிகள், தொப்பிகளை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதனை அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வடசென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்களுக்காகவும் மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காக இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டது என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
    • இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக பூர்வீக குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஜவ்வாது மலை சென்று ஆய்வு செய்தனர்.

    மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

    7.5 மீட்டர் அகலம் 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த கற்கால புதை குழிகளை இறந்தவர்கள் உடல்களை புதைக்க பயன்படுத்தி உள்ளனர். மேலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் சேர்த்து அதில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    ஒவ்வொரு புதை குழியிலும் அந்த காலத்தில் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இருந்தன. பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.

    இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    இதன் மூலம் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூர்வீக குடிமக்கள் இருந்திருக்க வேண்டும் என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புதைகுழிகள் மூலம் ஜவ்வாது மலையில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளோம் என அவர்கள் கூறினர். 

    • வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராயபுரம் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குவாதத்தில் இறுதியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, தேர்தல் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- எங்களுக்கு 12- 12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள். 12.15 மணிக்கு தான் நாங்கள் வந்தோம். எங்களது வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால் வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவாக, திமுக வேட்பாளர் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

    இதனிடையே, வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். அங்கேயும் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, வாக்குவாதம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறினார்கள். நாங்கள் தான் முதலில் வந்தோம். 11.49 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம், கேமராவிலும் அது பதிவாகி உள்ளது. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான போது, திடீரென தி.மு.க.வினர் வந்தனர். மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் வந்தவர்கள் என்று பார்த்தால், எங்களை தான் அனுமதித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் செல்லாமல் வாக்குவாதம் செய்தனர். பிரச்சனையை காவல்துறை சரியாக கையாளவில்லை. திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்களின் டோக்கன் எண் 7 என்றார்.

    • உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று சின்னையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை தருமபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ரஞ்சித் தலைமையில் நிலையான கண்காணிப்பு குழு பறக்கும் படையினர் இன்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

    உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் அந்த நபர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சின்னையா என்பதும், அவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வெள்ளை பன்றிகளை ஏற்றி வந்து சேலத்தில் விற்பனை செய்து விட்டு ஆவணங்கள் இன்றி ரூ.4.50 லட்சத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.

    உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்பதால் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர். இதற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று சின்னையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை தருமபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை தருமபுரியில் ரூ.17 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
    • பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.

    தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.

    தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×