என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.
அதன்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று மாலை தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை வரும் எடப்பாடி பழனிசாமி, டவுன் வாகையடி முனையில் வைத்து நெல்லை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் காரில் கன்னியாகுமரி புறப்படுகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டவுன் வாகையடி முனையில் நடைபெறும் கூட்டத்திற்காக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகையையொட்டி டவுன் ரதவீதியில் மாலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரதவீதிகளில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.
- அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
- சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை நியமித்து பணியாற்றி யார்-யார் எந்த கட்சியை சார்ந்தவர் என பட்டியல் எடுத்து அதற்கேற்ப வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு தெருவிலும் யார் யார் உள்ளூர்காரர் யார் வெளியூர்காரர் என எங்கு ஓட்டு போடுவார்கள் என்பதை அறிந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொருவரும் சொந்த பணத்தை செலவு செய்து கலக்கத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் சேரும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்ததுடன், அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதன் காரணமாக உள்ளாட்சி பொறுப்பில் உள்ள பகுதி கழக, ஒன்றிய, நகர பேரூர் சட்டமன்ற கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். முக்கியமான பணிகளுக்கு மட்டுமே வேட்பாளர் பணம் கொடுப்பதால் மற்ற தேர்தல் செலவுகளுக்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகிகளே பணம் செலவு செய்வதை காண முடிகிறது.
- தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
- தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் 3 தொகுதி களுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உற்சாகமாக மனு தாக்கல் செய்தனர்.
பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்பதால் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி வரிசையாக அழைக்கப்பட்டனர்.
நேற்று நல்லநாளாக இருந்ததால் அரசியல் கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 3 தொகுதிகளிலும் சேர்த்து 52 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வடசென்னையில் தான் அதிகபட்சமாக 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் 21 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 16 பேரும், சுயேச்சைகள் 15 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வது முடி வடைவதால் இன்றும் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுவதை தொடர்ந்து சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
- திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
- நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.
- பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
- மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம்.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
இதனையொட்டி இன்று இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு அரசினர் தோட்டம் அல்லது சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் காரணமாக பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆன்லைனில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன ஆப், பேடிஎம் ஆப், போன்பே ஆப், வாட்ஸ் அப் போன்றவை மூலம் பயணச்சீட்டை பெறலாம். மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம்.
பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம்.
இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரெயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.
- தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னால் முடிந்தவரை திருச்சி தொகுதியில் மக்கள் பணியாற்றுவேன். தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் சகோதரர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், வாழ்த்துகளுடன் எனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.
நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாக சொல்கிறீர்கள். அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை.
அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.
இங்கு என்னுடன் வந்திருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் நான் பேசவில்லை.
மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
அப்போது வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பினார்.
என்னை அவர் தனது மகனாக பாவித்து வெற்றி பெற்று நல்லபடியாக வரவேண்டும் என வாழ்த்தினார்.
தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் எங்கள் கட்சிக்கு (ம.தி.மு.க.) முறையான சின்னம் ஒதுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பம்பரம் தவிர்த்து வேறு சின்னங்களும் கொடுத்துள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.
- தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்தார். சிந்தலக்கரை பிரசாரத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புறப்பட்டு செல்கிறார்.
இதேபோன்று தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஒரே நாளில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதால் தூத்துக்குடி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.
- ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்
- இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார்
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
- 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை நம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்து, வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் படித்துவிட்டு, முதலில் எளிதான கேள்விகளுடன் தொடங்கவும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பல சமயங்களில் ஒரு மனதைக் கொண்டு வரும்.
அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள்.
- பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் வாக்கு தான் ஜனவாயகத்தை காக்க உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
மணிப்பூர் மாநில மக்கள் அகதிகள் போல் உள்ளனர்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? அதற்கான நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.
புயல், வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாய் அமைச்சர்கள் இருந்தனர்.
பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்கிறார்.
நீதிமன்றத்தை நாடி வெள்ள நிவாரணத்தை பெறுவோம்.
ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது. பாஜகவிற்கு, தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம். ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது.
தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன ? பட்டியலிட்டு பிரதமர் பேச வேண்டும்.
எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும், எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை.
தமிழக மீனவர்கள் கைதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ?
எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பதையே, பிரதமர் செய்து வருகிறார். தமிழக மீனவர்கள் குறி்தது பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசினாரா?
இந்தியா சிறப்பாக இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பாஜகவுடன், அதிமுக மறைமுக கூட்டணியில் உள்ளது.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வாய்ப்பு இந்த தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளோம்.
பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக.
இவ்வாறு அவர் கூறினார்.
- அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்
- 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.
சம்பவம் நடந்தபோது வாட்ஸ் அப் இல் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.
இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 3 பேரில் 2 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில், 3 பேர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
- ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
- இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.
இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்






