என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
    • தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

    இவர் தொகுதி மக்களை சரிவர சந்திக்க வில்லை என்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர் சுப்பராயனிடம் , தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், ஒரு கோடி ரூபாயுடன் என் எம்.பி., அலுவலகத்திற்கு வந்தால், திருப்பூர் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்.எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

    • தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.
    • சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

    * தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.

    * சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.

    * தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * வாக்குப்பதிவு தினத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். த.மா.கா. சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

    • பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
    • பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடுபாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது.

    பஸ்சை கார்த்திக் என்பவர் ஓட்டினார். நடுப்பாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி விட்டு, பட்டணம் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றுவதற்காக கார்த்திக் பஸ்சை அங்கு ஓட்டி சென்றார்.

    அப்போது ஜே.ஜே.நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் கார்த்திக், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது. இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.

    அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பலரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உடுமலையை சேர்ந்த பெஞ்சமின் பிரபாகரன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து நூதன முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இந்த நாணயங்களை அனைவரும்வாங்க வேண்டும். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாணயங்களாக கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேப்போல் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை வெளியில் நிறுத்தக்கூடாது தங்களுக்கு வியாபாரம் செய்ய சிரமமாக இருப்பதாக கூறி வெளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் உழவர் சந்தை விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சந்தைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும், வெளியில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். 

    • விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது.

    இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.

    இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அறித்துள்ளனர்.

    ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவரை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • ஆற்றல் அசோக் குமார் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3 கட்சிகளின் தலைமையில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.

    தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது.

    இதற்கிடையே வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 39 தொகுதியில் 326 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என தெரிய வந்துள்ளது. வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவர் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுவரை 412 ஆண் வேட்பாளர்கள், 67 பெண் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    • ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
    • 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.

    அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

    பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

    பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • ஆரணி தொகுதி விஷ்ணு பிரசாத்திற்கு கிடைக்காததால் அவர் கடலூர் தொகுதியை பெற்றுள்ளார்.
    • பா.ம.க. மற்றும் த.மா.கா. இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் நீடித்தது.

    சென்னை:

    தேர்தல் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட ருசிகர சம்பவம் வெளியாகியுள்ளது.

    இன்னும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பட்டியல் இல்லை. இதுதொடர்பாக விசாரித்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கடலூர் தொகுதியை ஒதுக்கிய நிலையில் அந்த தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்குவதாக பேசி இருக்கிறார்கள். அந்த தொகுதியில் பா.ம.க.வின் நட்சத்திர வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை களமிறக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆரணி தொகுதி விஷ்ணு பிரசாத்திற்கு கிடைக்காததால் அவர் கடலூர் தொகுதியை பெற்றுள்ளார்.

    விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும் பா.ம.க. தலைவர் அன்புமணியின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    எனவே அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த பா.ம.க. தயங்கியது. அதனால் தான் கடைசி நேரத்தில் பா.ம.க. மயிலாடுதுறை தொகுதியை கேட்டது.

    அந்த தொகுதி த.மா.கா.விற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால், பா.ம.க. மற்றும் த.மா.கா. இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் நீடித்தது. கடைசியில் மயிலாடுதுறை தொகுதி பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளால் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட முடியாமல் போனது.

    ஏற்கனவே மற்ற தொகுதிகளுக்கு தொகுதி முடிவாகி போனதால் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

    • திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

     திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்.

    நல்லா இருக்கீங்களா? உங்கள் எழுச்சி ஆரவாரம் எனக்கு உற்சாகத்தை தருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி எப்போது வரும் என நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதிலும் தாய்மார்கள் முடிவெடுத்துவிட்டால் யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

    முதல்அமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆட்சியின் பயன்கள் பெண்களுக்கு தான் நன்றாக தெரியும். கட்டணம் இல்லாத இலவச பஸ்களை இப்போது பெண்கள் செல்லமாக ஸ்டாலின் பஸ் என சொல்கிறார்கள். ஸ்டாலின் பஸ் வருகிறது என்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

    தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பெற்றோர் மனமுவந்து பாராட்டி தைரியமா வயக்காட்டு வேலைக்கு போறாங்க. அதே போல் 1.65 கோடி பெண்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.


    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்று சொல்லி நானாவது ஊருக்கு ஊர் செங்கல்லை தூக்கி காட்டுகிறேன். ஆனால் 2019 ஜனவரி 27-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய போது மோடியுடன் நின்ற பழனிசாமி ஆட்சி முடிகிற வரைக்கும் அதே மாதிரி தானே பல்லை காட்டி நின்றார்.

    புயல் மழை வெள்ளத்துக்கு தமிழகம் வராத பிரதமர் தேர்தல் ஜுரத்தில் இப்போது தமிழகத்தில் வலம் வருகிறார். பா.ஜ.க. ஆட்சியால் அதானி கொடிதான் பறக்குது. இதற்கெல்லாம் ஏப்ரல் 19 தான் பதில் சொல்லும்.

    இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகுது.பாஜகவை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலை யொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி சென்றார். நேற்று இரவு சத்யா ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலையில் அங்குள்ள சாலைகளில் நடைபயிற்சி செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 7.35 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டார்.

    தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள ராஜாஜி பூங்காவையொட்டிய சாலைகள் வழியாக சென்று தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

    தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்றார். அப்போது ஒவ்வொரு கடைகளாக சென்று வியாபாரிகளிடம் நலம் விசாரித்து தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். மேலும் காய்கறி வாங்க வந்து பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.

    அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு அவர்கள் கனிமொழி எம்.பி. எனவும், தொகுதி வளர்ச்சிக்கு நன்றாக செயல்படுவதாகவும் கூறினர்.

    அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர். அப்போது மறக்காமல் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து அவர் நடைபயணமாக மார்க்கெட் முழுவதும் சென்று பின்னர் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு நின்றிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் முதலமைச்சருக்கு கை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தவுடன் ஏராளமான பொதுமக்களும், வாலிபர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

    அப்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர். 

    ×