search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்
    X

    கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

    • பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலை யொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி சென்றார். நேற்று இரவு சத்யா ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலையில் அங்குள்ள சாலைகளில் நடைபயிற்சி செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 7.35 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டார்.

    தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள ராஜாஜி பூங்காவையொட்டிய சாலைகள் வழியாக சென்று தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்றார். அப்போது ஒவ்வொரு கடைகளாக சென்று வியாபாரிகளிடம் நலம் விசாரித்து தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். மேலும் காய்கறி வாங்க வந்து பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.

    அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு அவர்கள் கனிமொழி எம்.பி. எனவும், தொகுதி வளர்ச்சிக்கு நன்றாக செயல்படுவதாகவும் கூறினர்.

    அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர். அப்போது மறக்காமல் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து அவர் நடைபயணமாக மார்க்கெட் முழுவதும் சென்று பின்னர் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு நின்றிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் முதலமைச்சருக்கு கை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தவுடன் ஏராளமான பொதுமக்களும், வாலிபர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

    அப்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×