என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
- வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
- தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.
- மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால் அடுத்து தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என்றார்
சென்னை:
தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 3 ஆண்டுகளில் பல முத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பயணம்; காலை உணவு திட்டம் என முத்திரை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.
10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வந்த முத்தான திட்டங்கள் என்னென்ன? புயல், வெள்ள பாதிப்பு நிதியை கூட பா.ஜ.க அரசு தரவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.
நான் அச்சமூட்டுவதாக நினைக்க வேண்டாம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. ஏன் நாவலிலும் கூட படித்ததில்லை என தெரிவித்தார்.
- நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
- சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ்.
கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
பாமக- பாஜகவுன் கூட்டணி சேர்வது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் 6 ஆண்டுகள் பாமக கூட்டணியில் இருந்தது.
திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை முதலமைச்சர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்.
நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
2014ம் ஆண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். எப்போதும் தர்மபுரி மக்களுக்கு உண்மையாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அப்போது கொண்டு வந்த திட்டங்கள் முழுமை அடையவில்லை. நிலுவையில் உள்ள திட்டங்களை சௌமியா அன்புமணி முடித்து வைப்பார்.
பிரச்சினையும், தீர்வும் நமக்கு நன்றாக தெரிகிறது. அதிகாரம் வந்தால் ஒரே நாளில் தர்மபுரியின் 90 சதவீத பிரச்சிவைகளையும் தீர்க்க முடியும்.
தர்மபுரி மக்களின் முன்னேற்றம் தான் எனக்கு முக்கிய வேலை. மேடைக்காக பேசவில்லை, உணர்வுப்பூர்வமாக பேசுகிறேன். திட்டங்கள் முழுமை அடையாததற்கு காரணம், முன்பு நீங்கள் தேர்வு செய்த எம்.பி.
பாமக நிறுவனர் ராமதாஸ் போராடியதால் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது.
முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தர்மபுரிக்கு என்ன செய்தனர் ?
பாஜகவுடன் திமுக ஏன் முன்பு கூட்டணிக்கு சென்றது? பல முறை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்துள்ளோம், புதிதாக சேரவில்லை.
சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ். எந்த கூட்டணியில் இருந்தாலும் சமூக நீதியில் சமரசம் கிடையாது.
யார் பிரதமராக இருந்தாலும் சமூக நீதியை நாங்கள் விட்டு கொடுத்ததில்லை. அதிமுகவிற்கு, பாமக துரோகம் செய்யவில்லை.
உழைத்து உழைத்து, மாறி மாறி உங்களை நாங்கள் முதல்வராக்கி வருகிறோம். வன்னியர்களுக்கு மனதார இட ஒதுக்கீடு அளித்ததா அதிமுக ? கடுமையாக போராட்டம் நடத்தினோம். அப்போதும் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் இட ஒதுக்கீட்டை அதிமுக அறிவித்தது. எனக்கு சீட்டு வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் என்றார் ராமதாஸ்.
இட ஒதுக்கீட்டை வைத்து பேரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு சமூக நீதி பற்றி கவலை கிடையாது. அரைகுறையாக சட்டம் வந்ததால்தான் நீதிமன்றம் ரத்து செய்தது.
நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி எப்போதோ முடிந்திருக்கும். நாங்கள் துரோகம் செய்யவில்லை, தியாகம் செய்தோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசினார்களா ? ஒரு அதிமுக எம்எல்ஏ-ஆவது பேசினாரா ?
பாமக துரோகம் செய்யவில்லை, துரோகம் செய்தது அதிமுக தான். என் மனதில் அவ்வளவு ஆதங்கம் இருக்கிறது.
காலம் முழுவதும் அதிமுகவுடன் இருப்போம் என ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்தோமா ? கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் கையெழுத்து போட்டிருப்பார்.
நமது நோக்கம் தர்மபுரியின் வளர்ச்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு மத்தியில் பேசும்போது, நீலகிரியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது தி.மு.க நிர்வாகிகள், உதயசூரியன் சின்னம் என்பதை நினைவுபடுத்தினர். பின்னர் சுதாரித்து கொண்ட செல்வப்பெருந்தகை, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களுக்கு மத்தியில் பேசியதாவது:-
இந்த நாட்டில் அமைதி நிலவவும், ஜாதி-மத கலவரத்தை தடுத்து நிறுத்தவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பொறுப்பு உண்டு. அவற்றை எல்லாம் நீங்கள் தடுத்து நிறுத்தி நாட்டை மேன்மைப்படுத்த வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரோ, அதைவிட 2 மடங்கு அதிகம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
மேலும் உங்கள் பகுதிக்கு ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வரஉள்ளார். கொடுப்பவர்களுக்கும், எடுப்பவர்களுக்குமான தேர்தலில் கொடுப்பவராக ராகுல்காந்தியும், எடுப்பவராக மோடியும் உள்ளனர். எனவே திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது.
- கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.
பனைக்குளம்:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார். எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே தெரியும்.
கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவை மீட்க 2011-ல் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்தபோது இங்கு இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அங்கு சமர்ப்பிப்பட்டு உள்ளது. கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.
இந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பயிற்சி வகுப்புகள் தொடங் கப்படும். கனிமவளம் பாதிக்காத வகையில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். நானும் ராமநாதபுரத்தை சேர்ந்தவன் தான். பழைய பிரிக்கப்படாத ராமநாதபுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் சொந்த ஊர்.
அ.தி.மு.க.வில் தற்போது யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கட்சியின் நிலை கீழே சென்று உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க.
- அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம்.
ஊட்டி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. வேட்பாளரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா. அவர் ஊட்டிக்கு வரும் போதெல்லாம் மலைவாழ் மக்களை சந்தித்து செல்வார். நீலகிரி மாவட்ட மக்களை ஜெயலலிதா மிகவும் நேசித்தார். நீலகிரிக்கு அதிக முறை வந்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை.
நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை. அவர் தலைக்கணம் பிடித்தவராக பார்க்கப்படுகிறார். பெரியவர்களை மதிப்பதில்லை. நாட்டுக்காக பாடுபட்டவர்களை, மக்களை மதிப்பதில்லை.
அவர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் தான் தி.மு.க. வேட்பாளர். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் புரிகிற கட்சி தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணும் கட்சியும் தி.மு.க.
நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க. 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்தது நாம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் மீண்டும் வர உள்ளது. ஆகவே அவர் இங்கே இருப்பாரா எங்கே இருப்பார் என்பது விரைவில் தெரிய வரும். தி.மு.க.வில் ஒவ்வொருவராக ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆ.ராசாவும் ஜெயிலுக்கு செல்வார்.
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது தி.மு.க. அரசு தான். தரைப்பகுதியில் இருந்து மலைப்பகுதி வரை போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதனை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
தி.மு.க.வினரே போதைப்பொருளை விற்கும்போது எப்படி அதனை தடுக்க முடியும். தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் ஒருவர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இன்னும் பலர் போக உள்ளனர்.
ஊர் ஊராக சென்று ஒருவர் என்னையும், கட்சியையும் விமர்சித்து கொண்டிருக்கிறார். அவரும் செல்வார் என பரவலாக தகவல்.
3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அதனால் அவர்களால் மக்களிடம் போய் பேச முடியாது. பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் தான் எங்கு சென்றாலும் என்னையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம். அதனால் நாங்கள் உரிமையோடு வந்து ஓட்டு கேட்கிறோம். ஆனால் நீங்கள் இந்த மாவட்டத்திற்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஒன்றும் இல்லை. எனவே மக்களாகிய உங்கள் ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி மலரும். ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா உங்களுடன் இருந்ததை போன்று எங்கள் அரசும் ஒன்றாக இருந்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம்.
தி.மு.க. ஆட்சியில் குன்னூர், ஊட்டியில் கடை வாடகைகளை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி ஆட்சி இருண்ட ஆட்சி என்று கூறுகிறார். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது? ஊட்டிக்கு வாங்க கண்ணை திறந்து பாருங்கள் நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டியில் பிரசார கூட்டம் முடிந்ததும் இன்று மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதன்பின்னர் அவர் இரவு 7 மணிக்கு கோவை நகருக்கு வருகை தருகிறார்.
கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
- சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முகூர்த்த நாளான நாளை (வெள்ளிக்கிழமை), வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 925 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
- துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி இன்று (4-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது.
மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.
அதன்படி தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்த திருச்சி சாலையில் வசித்து வரும் 86 வயதான முன்னாள் ஆசிரியை ஜெகதாம்பாள் தனது வாக்கினை அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் பதிவு செய்தார்.
வீட்டில் இருந்தபடியே வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்தலின்போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.
- கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.
- 76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை.
ஈரோடு:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் 2024-ம் ஆண்டு பாரளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல். பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள்.
2014-ம் ஆண்டு 283, 2019-ம் ஆண்டு 303 எம்.பி.க்கள் வந்த நிலையில் இந்த முறை 300 எம்.பி.க்கள் தாண்டி வர வேண்டும் என்று பாஜக உழைக்கிறது. நமது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது இந்த தொகுதியின் அடையாளமான ஜமுக்காலத்தை போர்த்திக் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார். 100 வாக்குறுதியை வேட்பாளர் கையேடு உருவாக்கி உள்ளார்.
உலகத்தில் யாருக்கு புரோஜனம் இல்லாமல் அரசியலில் இருப்பது கம்யூனிஸ்டு கட்சிகாரர்கள் தான்.

தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் தான் உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பா.ம.க., அ.ம.மு.க. ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கு உழைக்க வேண்டும். வீடு தோறும் சென்று மோடி 3-வது முறையாக வருவார் என்று சொல்ல வேண்டும்.
வாக்காளர்கள் எது கேட்டாலும் 10 தகவல்களை சொல்ல வேண்டும். அதில் இந்திய பொருளாதார உயர்வு, 2014-ம் ஆண்டில் உலகத்தில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது.
இந்திய கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும். 76 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள், 12 பட்டியிலினவர்கள், 27 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியோர் அமைச்சராக உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 35 பேரில் 2 பெண்கள். 2 பேர் பட்டியலின பெண்கள். அவர்கள் குடும்ப கோட்டா அடிப்படையில் வந்து இருப்பார்கள். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே சமூக நீதி பின்பற்றப்படுகிறது. ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் தான் மோடி நம்புகிறார்.
48 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 89,490 விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.
பவானியில் அரசு கல்லூரி ஏன் இல்லை. ஏனென்றால் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் தனியார் கல்லூரி நடத்துவதால் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.
பொருளாதாரம் சமூக நீதி அனைத்து மக்களின் வளர்ச்சி பெற மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வரும் 25 ஆண்டுகளுக்கு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல்.
2019-ம் ஆண்டு தேர்தலில் 295 தேர்தல் அறிக்கை பா.ஜ.க. கொடுத்தது. இதில் 295 அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியோடு தி.மு.க. கம்யூனிஸ்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பேச நேருக்கு நேர் தயார்.
தி.மு.க.வை பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று வளர்ச்சி நினைக்கிறார்கள். அதனால் வளர்ச்சி தேவை வீக்கம் தேவை இல்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. துபாய், ஸ்பெயின் போன்ற வெளிநாட்டுக்கு முதல்- அமைச்சர் சென்ற நிலையில் முதலீடு வரவில்லை.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு இதனால் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். எல்லா பக்கமும் மின் கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது
விடியல் தருகிறேன் என்று சுடுகாட்டிற்கு பாதை அமைத்து நம்மை அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்.
வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை. குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக நடக்கவில்லை. ஹெல்மெட் போட்டு கொண்டு செல்கிறார். இதன் மூலம் கூலிப்படை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சட்டசபையில் சட்ட ஒழுங்கு சிரிக்கிறது.
76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை. ஆனால் தமிழகத்தில் வேட்டி வாங்குவதில் முறைகேடு. குண்டூசி கூட விடாமல் தமிழகத்தில் ஊழல் உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29 பைசா என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் உதயநிதி கஞ்சா உதயநிதி என்று சொல்லலாமா, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க சென்றால் அறிவாலயம் வாசலில் வரிசையாக நிற்கிறார்கள். கஞ்சா விற்பனை கிராம தோறும் அதிகரித்து உள்ளது.
முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு கொடுத்தால் தான் கணக்கில் கொள்வோம் என்றார். ஆனால் மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணம் கணக்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கோபாலபுரம் அனுப்பினால் தான் கணக்கு என்று சொல்கிறார்கள்.
அரசியலை மோடி மக்கள் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.
மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார். மேலும் சாமானிய மக்களை கண்டறிந்து கவுரவிப்பதற்காக பத்மா விருது வழங்கப்படுகிறது. மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானிய மக்கள் பற்றி மோடி பேசி வருகிறார். சாமானிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்.
பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, லல்லு பிரசாத் மகன் ஆகியோர் நான் தான் பிரதமர் என்று சொல்லி வருகிறார்கள்.
நாட்டை ஆட்டை அறுப்பது போல நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனால் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது.
ஒவ்வொரு வாக்குகளும் பாரத பிரதமர் மோடியை வலுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
- அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது,
அண்ணாமலைக்கு எதிராக ஆதரவு திரட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி வருகிற 12ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நெல்லையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து பேசும் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து 12ம் தேதி மாலையில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கோவையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அண்ணா மலைக்கு எதிராகவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் பேச உள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., இணைந்து வருகிற 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 6-வது முறையாக வருகை தரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரபல தலைவர்கள் யாருமே பிரசாரத்துக்கு வராமலேயே இருந்தனர்.
இந்த நிலையில் தான் ராகுல்காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ராகுல்காந்தி வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
- விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
விழுப்புரம்:
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.
இதற்காக வி.சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இக்கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் வருகை தரும் வழிநெடுகிலும் என 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழுப்புரம் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு தங்கும் அவர், மறுநாள் 6-ந் தே தி (சனிக்கிழமை) சிதம்பரம் லால்புரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
- குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
ஆலந்தூர்:
கோடை வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளன. மேலும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல சென்னை மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கான விமான பயண திட்டங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அவர்கள், பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் சுற்றுலா பயணம் செல்ல மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை தங்களுடைய பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன.
நீண்டநாட்கள் சுற்றுலா பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் செர்ரி பூக்கள் பூக்கும் மாதம் என்பதால் ஜப்பான், தென்கொரியாவுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதே போல் சவுதி அரேபியா செல்லவும் அதிகமானோர் விரும்புகிறார்கள்.
குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவிற்குள் அந்த மான், ஸ்ரீநகர், மணாலி, டார்ஜிலிங், கோவா, பூரி, ரிஷிகேஷ், கொடைக்கானல், முசோரி, லட்சத்தீவு மற்றும் ஆகிய இடங்களுக்கும் செல்ல அதிகமான பயணிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் விமான கட்டணம் மே மாத மத்தியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கைக்கு ரூ.14ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வைரையும், பாங்காங்-ரூ.25ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை, சிங்கப்பூர்-ரூ.20ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை, துபாய்-ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்து 800 வரை, டெல்லி-ரூ.13ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை, கோவா-ரூ.7900 முதல் ரூ.26 ஆயிரம் வரை, லட்சத்தீவு-ரூ.23, 500, அந்தமான்-ரூ.13ஆயிரம் முதல் ரூ.15,800 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.
இதுகுறித்து சுற்றுலா விமானடிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கோடைகால விடுமுறை பயணத்திட்டங்களை சற்று தள்ளி வைத்து உள்ளனர். மே மாத முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் 2-வது வாரம் வரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் தினமும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
மேலும் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல, பலர் விமான டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளன.






