என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
- அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாகர்கோவில்:
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அமித் ஷாவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் நேற்று மதுரையில் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்பு அவர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்று காலை வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுகு வந்து சேர்ந்தார். நாகர்கோவில் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
அங்கு மத்திய மந்திரி அமித ஷாவை பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து மத்திய மந்திரி அமித் ஷா கார் மூலமாக தக்கலைக்கு புறப்பட்டார்.

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
மத்திய மந்திரி ரோடு-ஷோ சென்ற பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் அமித் ஷாவை மலர் தூவி வர வேற்றனர். மேலும் தாமரை பூ சின்னத்தை காண்பித்து உற்சாகப்படுத்தினர்.
தக்கலையில் ரோடு-ஷோவை முடித்துக் கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலமாக மீண்டும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் ரோடு-ஷோ நடந்த பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் நாகர்கோவில்-தக்கலை இடையே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் அனைத்தும் தக்கலைக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டன.
- வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவின் கணவர் அன்பரசு தனது காரில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் பிரண்டு பாலசந்தர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தக் கார் எட்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
உடனே இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இது ரூ.1 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது.
பின்னர் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு முன்பும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முசிறி காவல் நிலையம் முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பரசு அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.
- விஜய் கட்சி தொடங்கி அவரது கட்சியில் இதுவரை 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளனர்.
- சில நாட்களுக்கு முன்பு விஜய் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என செய்திகள் வெளியானது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கட்சி தொடங்கியதை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கொள்கைகளாக தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம் என்று குறிப்பிட்டார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பதுதான் நமது இலக்கு என்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
விஜய் அரசியல் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கிடையே பரபரப்பையும் ரூ.200 கோடிக்கு மேல் சினிமாவில் சம்பளம் வாங்கும் விஜய் அதை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வருகிறாரே என பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு காட்டுத் தீயாக பற்றிக் கொண்டுள்ளது.
விஜய் கட்சி தொடங்கி அவரது கட்சியில் இதுவரை 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளனர். இத்தனை லட்சம் வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்பது அரசியல் கட்சிகள் மத்தியில் புரியாத புதிராக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு விஜய் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என செய்திகள் வெளியானது. இதையடுத்து அந்த அறிக்கை போலியானது என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேதி நெருங்கும் நிலையில் விஜய் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது பரபரப்பாக உள்ளது. இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்த போது பாராளுமன்ற தேர்தல் ஆதரவு பற்றி விஜய் ஏற்கனவே கட்சி தொடங்கிய போதே அறிவித்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளார்.
விஜய் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருக்கிறார். தேர்தலுக்கு 2 தினங்களுக்கு முன்பு வாக்களிப்பதற்காக சென்னை வருகிறார் என கூறினர்.
- கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
- 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது.
கோவை:
குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்தது. ஆறுகள், நீரோடைகள், சிறு ஆறுகள் உள்ளிட்டவையும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் 2-வது நாளாக மழை நீடித்தது.
குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் தேங்கியும் நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை இன்று காலை ஊழியர்கள் அகற்றினர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்த கோடைமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது.
கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பில்லூர் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்துவிட்டது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வர தொடங்கியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் 2 மாதங்களுக்கு பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
- போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோவில்பட்டி:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில் இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பகுதி மற்றும் முழு எந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
- அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
உசிலம்பட்டி:
மதுரை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகர பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதா வது:-
நல்லவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவைகளுக்கு நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப முடியும். உசிலம்பட்டிக்கு வந்தாலே நான் உணர்வு பூர்வமாக ஆகிவிடுகிறேன். நான் யாரையும் குறைகூறி பிரசாரம் செய்பவன் அல்ல. கச்சத்தீவை மீட்போம் என்று கூறினார்கள். ஆனால் இது வரைக்கும் என்ன செய்தீர்கள்? வெள்ளம் வந்தபோது தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தேனி பிரசாரத்தில் பேசியபோது தான் நடித்த 'அமரன்' படத்தில் சொந்தக் குரலில் பாடிய பாடலை பிரசாரத்திற்காக அதே மெட்டில் மாற்றி, 'அமரன்' பாட்ட கேட்டால் சோடா பாட்டில் அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் பறக்கும்' என அதே மெட்டில் பாடிக் காட்டினார். இதை கேட்டு அவரது ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகமடைந்த நடிகர் கார்த்திக்கும் மேலும் 2 வரியை பாடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
- 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.
காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.
மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- பொது விடுமுறை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிம்னறத்திற்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
- எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இவர் கடலாடி யூனியனில் பூக்குளம், மேல சிறுபோது, இளஞ்செம்பூர், குருவிகாத்தி, தேவர் குறிச்சி, பொதிகுளம், ஆப்பனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளர் பா.ஜெயபெருமாளுடன் கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலெட்சுமி முனியசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் என்.கே.முனியசாமி பாண்டியன் தேர்தல் பொறுப்பாளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி.எம்.எஸ்.நிறைகுளத்தான், சாமிநாதன் ஆகியோர் கடலாடி யூனியனில் வீடு, வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது மலேசியா எஸ்.பாண்டியா கூறுகையில், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடலாடி யூனியனில் கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு செல்லும் இடங்களிலெல்லாம் வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள். ஆகையால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்றார்.
- இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.
- விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் சிறப்புக்குரியது.
அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.
அதையொட்டி, இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.
நாளை முதல் வருகிற 23-ந் தேதி வரை தினமும் அருணாசலேஸ்வரருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு நேரத்தில் சாமிக்கு மண்டகபடியும் நடைபெறும்.
விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும். நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.
- உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன்.
- 1200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அய்யர்மலை என்ற இடத்தில், டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா, ஓ.பி.எஸ் அணி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் ராஜ்ஜியம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன் - தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் எம்பியாக தேர்வான பின்னர் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் பேசினார். வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்காமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
- தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்தை கடந்தது.
- சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்தை கடந்தது. மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 805-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.89,000-க்கு விற்பனையாகிறது.






