என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
- எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது.
தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழக உரிமைகளை காவுகொடுத்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டி.டி.வி. தினகரனை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போதிலிருந்தே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த அணை பிரச்சினையில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்த போவதாக கூறினார்.
ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் ரமேஷ் போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததால் அமைதியாகிவிட்டார். இதேபோல் பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றார். இதுவரை எந்த குடும்பத்திற்காவது அவர் பணம் கொடுத்தாரா?. ஆனால் தேர்தலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுக்க தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது வாக்காளர்களாகிய நீங்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு வேண்டாம் என கூறவேண்டும்.
தி.மு.க. மீண்டும் பழைய புராணத்தை பாடி வருகிறது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்கிறார்கள். 50 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ்தான் இதற்கு காரணம். தற்போது அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் சிலிண்டருக்கு மானியம், முத்ரா கடன் திட்டம், ஆவாஜி யோசனா திட்டம் மூலம் குடும்பத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்து வருகிறது. அந்த நிதியை தி.மு.க. அரசு எங்களுக்கு தெரியாமல் எப்படி கொடுக்கலாம் என தடுக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு 15 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம். இதையெல்லாம் மக்களிடமிருந்து மறைத்து தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.
எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது. யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களிடம் தமிழக உரிமையை வலியுறுத்துவதாக கூறுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. கான்ட்ராக்டர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தான் சீட் வழங்கப்படுகிறது. அவர் கட்சி நடத்துவதே கான்ட்ராக்டர்களுக்காக தான். ஜூன் 4ம் தேதி டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இவரது பின்னால் வருவார்கள்.
தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் அனைவரும் போட்டிபோட்டு லஞ்சம் வாங்கி அதனை கப்பம்கட்டி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை வைத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். யார் பிரதமர் என்பதே தெரியாமல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன்சிங் என்ற பொம்மை பிரதமரை அமர்த்தி ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்ததை போல மீண்டும் ஒரு கொள்ளையை அரங்கேற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ் புத்தாண்டான நாளை தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளார்கள்.
- ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டைதயாராகி உள்ளது.
அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில்,
"இந்த குரோதி வருட புத்தாண்டில்
புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்"
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு வீடாக தமிழ் புத்தாண்டான நாளை தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- நாளை மறுநாள் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகை தருகிறார்.
- முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
- தி.மு.க.வின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டுவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அதாவது இந்த வாக்காளர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அதிலும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இந்த இளம் வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக பெற வேண்டும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சிகள் இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இளம் வாக்காளர்களில் சுமார் ஒரு கோடி பேரை வாக்களிக்க செய்து விடவேண்டும் என்பதில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு 4 கட்சிகளும் இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்கள் மூலம் இந்த இளைஞர்களை கட்சிகள் தினமும் ஏதாவது ஒரு வகையில் நெருங்கியபடி உள்ளன.
ஒரு கோடி இளம் வாக்காளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப சமூக வலைதள பக்கங்களில் இந்த 4 கட்சிகளும் பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் மிக பிரமாண்டமான விளையாட்டு ஸ்டேடியம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன் பின்னணியில் இளம் வாக்காளர்களை கவருவதற்கான வியூகம் இருப்பதாக தகவல் வெளியானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவை இளைஞர்களுக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருப்பதால் நவீன ஸ்டேடியம் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். அந்த பதிவை கண்ட சில மணி நேரத்துக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதை பார்த்த அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும், பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையும் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இளம் வாக்காளர்களில் சுமார் 56 லட்சம் பேர் ஆண்கள், சுமார் 54 லட்சம் பேர் பெண்கள். இதையும் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இளைஞர்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதில் முன்னணியில் இருப்பது தி.மு.க.தான். தி.மு.க.வில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் எளிமையான நடையில் தகவல்களை வெளியிடுகிறார்கள். அந்த ஒவ்வொரு தகவலும் திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் வகையில் உள்ளன.
அதிலும் குறிப்பாக தி.மு.க. நடத்தும் "எல்லோரும் நம்முடன்" என்ற சமூக வலைதள பக்கம் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரை கவர்ந்துள்ளது. இந்த பக்கத்தை சுமார் 50 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். அதாவது தினமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஸ்டாலினின் குரல் சென்று அடைகிறது.
இதில் தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. 71 ஆயிரத்து 500 பேர் இந்த பக்கத்தை பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல தி.மு.க.வின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டுவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள். தி.மு.க.வின் யூடியூப்பை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். தி.மு.க.வின் இந்த சமூக வலைதள பக்கங்கள் அனைத்துமே இளைஞர்களை குறி வைத்தே தினசரி பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்த சமூக வலைதள பக்கங்களில் ஆடியோ, வீடியோ வசதிகளும் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவதால் தி.மு.க. சமூக வலைதள பக்கங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் தி.முக..வின் டிஜிட்டல் மனசாட்சியாக இந்த சமூக வலைதள பக்கங்கள் கருதப்படுகின்றன.
- அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது.
- நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது
சென்னை:
சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-
சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எதிர்க்கட்சிகளை விட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 12 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
- ராமர் கோவில் கட்டி இருப்பதால் மோடியின் மீது 23 சதவீதம் பேர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக கருதப்படுகிறது.
இந்த தடவை பிரதமர் மோடிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பது அனைவரது மனதிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதை மோடி லட்சியமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த இடத்தை எட்ட வேண்டுமானால் வாக்களிப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆதரவை பிரதமர் மோடி பெற்றாக வேண்டும். அந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதா? என்பது பற்றி தி இந்து ஆங்கில நாளிதழ் மிக பிரமாண்டமான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.
19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டன. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.
அதில் பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களிடம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கணிசமான அளவுக்கு திருப்தி நிலவுவதை அந்த ஆய்வில் தெரிந்து கொள்ள முடிகிறது.
எதிர்க்கட்சிகளை விட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 12 சதவீத வாக்குகள் கிடைக்கும். பிரதமர் மோடி ஆட்சி சிறப்பாக இருப்பதாக 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நலத்திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்படுவதாக கூறியுள்ளனர்.
அதே சமயத்தில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக 32 சதவீதம் பேரும், விலை உயர்ந்து விட்டதாக 20 சதவீதம் பேரும், வருமானம் குறைந்து விட்டதாக 12 சதவீத பேரும் கூறியுள்ளனர்.
பிரதமர் பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாக பதில் அளித்துள்ளனர். ராகுலுக்கு 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் மோடிக்கு அதிக ஆதரவு இருப்பதை கருத்துக் கணிப்பில் காண முடிந்தது. ராமர் கோவில் கட்டி இருப்பதால் மோடியின் மீது 23 சதவீதம் பேர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் அதிக வெற்றிகளுடன் பா.ஜ.க. ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பது பல்வேறு அம்சங்கள் மூலம் கருத்துக் கணிப்பில் தெரிகிறது.
- தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
- மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.
தருமபுரி:
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 108 ஆம்புலன்ஸ் என்றால் உலகத்திலேயே இந்தியா அதற்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ராமதாஸ் .
தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான பொய் வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது. ரூ.1,000 மகளிருக்கு தருவதாகக் சொன்னார்கள். ஆனால், இந்த தொகை சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.
ஒருபுறம் உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் வழங்கும் இந்த அரசு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அந்த பணத்தை பறித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திட்டங்களையும், வாக்குறுதிகளையும் செயல் படுத்துவதில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளது என விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் முதலிடம் பிடித்த அரசாகத் திகழ்கிறது.
மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க-வுக்கோ வாக்களிக்கக்கூடாது. அப்படி தவறுதலாக உங்கள் வாக்கை போட்டால் உங்களது வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம். என்றார்.
பின்னர் வேட்பாளர் சவுமியா அன்புமணி உடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது.
- அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நாகர்கோவில்:
மத்திய மந்திரி அமித்ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு-ஷோவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
நான் கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் பொன்.ராதா கிருஷ்ணன், விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினி ஆகியோருக்கு வாக்குகளை சேகரிக்க வந்த எனக்கு மிகச்சிறப்பான வரவேற்பை தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேர்தல் தேசம் முழுவதும் நடக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியினர் மோடிக்காக சிறப்பாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. 3,4 நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டுக் கொளவது ஒன்றுதான். அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க. சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தி உள்ளனர். நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறேன். 3-வது முறையாக மோடி பிரதமராக வரும்போது 3-வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள். 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும். அது பொன்னாரையும் சேர்த்து தான் இருக்க வேண்டும்.
நீங்கள் பொன்னாருக்கு வாக்களிப்பீர்களா... தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துவீர்களா...? விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
- சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.
இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.
2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.
ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.
முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை:
டெல்லியில் கடந்த பிப்.15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இதையடுத்து தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மார்ச்.9-ந்தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்.9-ந்தேதி சோதனை நடத்தினர். ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து ராமநாதபுரம் பயணம்.
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஐ ஆதரித்து பிரசாரம்.
ராமநாதபுரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலை ராமநாதபுரம் வருகை தந்தார்.
இந்நிலையில், அண்ணாலை பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
- கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
- இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மண்னச்சநல்லூரி தேர்தல் பிரசாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:-
பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
கப்பல் துறை தனியார், போக்குவரத்து துறை தனியார், கல்வி துறை தனியார் மருத்துவத்துறை தனியார் விமானத்துறை சாலை பொருள் தனியார், ரெயில்வே துறைகளை தனியாருக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன?
கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது.
விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






