search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வின் டிஜிட்டல் மனசாட்சி
    X

    தி.மு.க.வின் டிஜிட்டல் மனசாட்சி

    • தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
    • தி.மு.க.வின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டுவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அதாவது இந்த வாக்காளர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அதிலும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

    இந்த இளம் வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக பெற வேண்டும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சிகள் இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இளம் வாக்காளர்களில் சுமார் ஒரு கோடி பேரை வாக்களிக்க செய்து விடவேண்டும் என்பதில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக இருக்கிறது.

    இதை கருத்தில் கொண்டு 4 கட்சிகளும் இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்கள் மூலம் இந்த இளைஞர்களை கட்சிகள் தினமும் ஏதாவது ஒரு வகையில் நெருங்கியபடி உள்ளன.

    ஒரு கோடி இளம் வாக்காளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப சமூக வலைதள பக்கங்களில் இந்த 4 கட்சிகளும் பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் மிக பிரமாண்டமான விளையாட்டு ஸ்டேடியம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன் பின்னணியில் இளம் வாக்காளர்களை கவருவதற்கான வியூகம் இருப்பதாக தகவல் வெளியானது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவை இளைஞர்களுக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருப்பதால் நவீன ஸ்டேடியம் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். அந்த பதிவை கண்ட சில மணி நேரத்துக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதை பார்த்த அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும், பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையும் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இளம் வாக்காளர்களில் சுமார் 56 லட்சம் பேர் ஆண்கள், சுமார் 54 லட்சம் பேர் பெண்கள். இதையும் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இளைஞர்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

    இதில் முன்னணியில் இருப்பது தி.மு.க.தான். தி.மு.க.வில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் எளிமையான நடையில் தகவல்களை வெளியிடுகிறார்கள். அந்த ஒவ்வொரு தகவலும் திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் வகையில் உள்ளன.

    அதிலும் குறிப்பாக தி.மு.க. நடத்தும் "எல்லோரும் நம்முடன்" என்ற சமூக வலைதள பக்கம் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரை கவர்ந்துள்ளது. இந்த பக்கத்தை சுமார் 50 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். அதாவது தினமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஸ்டாலினின் குரல் சென்று அடைகிறது.

    இதில் தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. 71 ஆயிரத்து 500 பேர் இந்த பக்கத்தை பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல தி.மு.க.வின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டுவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள். தி.மு.க.வின் யூடியூப்பை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். தி.மு.க.வின் இந்த சமூக வலைதள பக்கங்கள் அனைத்துமே இளைஞர்களை குறி வைத்தே தினசரி பதிவுகளை வெளியிட்டு வருகிறது.

    இந்த சமூக வலைதள பக்கங்களில் ஆடியோ, வீடியோ வசதிகளும் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவதால் தி.மு.க. சமூக வலைதள பக்கங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் தி.முக..வின் டிஜிட்டல் மனசாட்சியாக இந்த சமூக வலைதள பக்கங்கள் கருதப்படுகின்றன.

    Next Story
    ×