search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டு- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
    X

    இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டு- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

    • கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
    • சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.

    இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.


    திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.

    2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.

    முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×