search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய மந்திரி அமித் ஷா தக்கலையில் ரோடு-ஷோ
    X

    மத்திய மந்திரி அமித் ஷா தக்கலையில் ரோடு-ஷோ

    • மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
    • அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அமித் ஷாவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    அவர் நேற்று மதுரையில் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்பு அவர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்று காலை வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுகு வந்து சேர்ந்தார். நாகர்கோவில் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

    அங்கு மத்திய மந்திரி அமித ஷாவை பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து மத்திய மந்திரி அமித் ஷா கார் மூலமாக தக்கலைக்கு புறப்பட்டார்.


    தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

    மத்திய மந்திரி ரோடு-ஷோ சென்ற பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் அமித் ஷாவை மலர் தூவி வர வேற்றனர். மேலும் தாமரை பூ சின்னத்தை காண்பித்து உற்சாகப்படுத்தினர்.

    தக்கலையில் ரோடு-ஷோவை முடித்துக் கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலமாக மீண்டும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் ரோடு-ஷோ நடந்த பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும் நாகர்கோவில்-தக்கலை இடையே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் அனைத்தும் தக்கலைக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டன.

    Next Story
    ×