என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம்.

    சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது. இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இதில் இடம் பெறுகிறது.

    ஆம்னி பஸ்களுக்கு இணையாக வாங்கப்பட்டு உள்ள வால்வோ பஸ் பொங்கலுக்கு பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் மற்ற பகுதிகளை விட தி.நகர் பகுதியில் தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அங்கு தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் மற்றும் அருகிலுள்ள இன்னொரு சாலையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தி.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.நகரில் மட்டும் 80 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா காட்சிகளின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் சில தினங்களில் கமிஷனர் அருண் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

    மாதத்தின் தொடக்க நாளாகவும் ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப்பதால் இன்று மாலையில் தி.நகர் பகுதியில் பலர் ஜவுளி எடுக்க அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோன்று பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் தீபாவளியையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

    அனைத்து பகுதிகளிலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென கமிஷனர் அருண் அறிவுறுத்தி இருக்கிறார்.

    இதன்படி இணை கமிஷனர்கள் துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

    • பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, டி.டி.கே சாலை ஆழ்வார்பேட்டை யில் மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, 200 மீட்டர் நீளத்திற்கு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    வீனஸ் காலனி 1வது தெரு, 2வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1-வது தெரு, சேஷாத்திரி தெரு மற்றும் முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் மேற்குறிப்பிட்ட தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காவண்ணம், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கட ரத்தினம் சாலை, ராஜ கிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜ புரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டி.டி.கே. சாலை ஆகிய 10 தெருக்களில் மழை நீர் வடிகால்கள் சுமார் 2.16 கிமீ நீளத்திற்கு 8.21 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது, அமைச்சர் மா. சுப்பிரமணியன், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, ஆணையர் குமரகுருபரன், குடிநீர் வாரிய இயக்குநர் வினய் உடனிருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய "சக்தி" தீவிர புயல், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 10, 11-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர்.
    • பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர்.

    கரூர்:

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி, கரூர் எஸ்.பி. ஜோஸ் தங்கையா இடம் பெற்றனர். தற்போது இந்த குழுவில் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், 4 டி.எஸ்.பி.க்கள், ஒரு தடயவியல் நிபுணர் ஆகிய 8 அதிகாரிகள் கூடுதலாக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    முன்னதாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் ஏ.டி.எஸ்.பி. பிரேம்ஆனந்தன் கரூரில் இருந்து சென்னை புறப்பட்டு சென்று ஐஜி அஸ்ரா கார்க்கிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார்.

    இதை தொடர்ந்து ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் மற்றும் குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள், கூட்டம் நடைபெற்ற இடத்தில் எத்தனை பேர் நிற்கலாம், விஜய் பிரசாரத்தின்போது எவ்வளவு மக்கள் பங்கேற்றனர் உள்ளிட்டவற்றை ஆராய்கின்றனர்.

    பின்னர் பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர். பிரசாரத்தின்போது தொண்டர்கள், பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்று கேட்டறிகின்றனர்.

    அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார்.
    • தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    வள்ளலாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி.

    ஆனால் தமிழகத்தின் நிலை வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்திற்கான உரிமை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. அறிவிருக்கும் சமுதாயம் எப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்க முடியும். வள்ளலார் கூறியதுதான் தமக்கு நினைவுக்கு வருகிறது.

    தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசும்போது தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், வென்று காட்டுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் வகையில் தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

    இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    • நெல்லையில் இருந்து இன்று மாலை புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
    • மதுரையில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை இயக்கப்படுகிறது.

    ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06014) நெல்லையில் இருந்து இன்று (அக்டோபர் 5ம் தேதி) மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    மேலும் இந்த சிறப்பு ரெயிலானது நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 17 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் செல்கிறது.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தன், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேலும், மதுரையில் இருந்து இன்று (அக்டோபர்-05) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.


    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது. 

    • உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.
    • முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கண்டனம் தெரிவித்து சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    சுயநலத்தில் உண்மை முகம் வெட்டு வெளிச்சமாகியுள்ளது. எப்போது ஒருவர் திமுகவையும், ஸ்டாலினையும் பாராட்டி புகழ்ந்து பேசுகிறாரோ, அப்போதே அவர் அதிமுக பற்றி பேச தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது இதுதான் தொண்டர்கள் மக்களின் தீர்ப்பாகும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்று தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, மக்களின் நம்பிக்கை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தனிநபர் கருத்தை யாரும் பொருப்படுத்த அவசியம் இல்லை.

    தமிழகத்தில் தன்னுடைய ஆளுமை தோல்வினாலும், தன்னுடைய தொடர் இயலாமையினாலும், தான் வகுக்கும் திட்டம் தோல்வியாலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு அது பொறாமையாக மாறி இன்றைக்கு இன்றைக்கு ஒரு தனிநபர் அரசியல் காழ்புணர்ச்சியால், பொறாமையால், இயலாமையால் பேசி வருவதை யாரும் பொருப்படுத்தவில்லை.

    இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் வழியில், திமுக உண்மை முகத்தை, குடும்ப வாரிசை, மன்னராட்சியை அழிந்து மீண்டும் ஜனநாயகத்தை மலர செய்யும் வகையில், மக்களாட்சி மலர வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக இன்றைக்கு எடப்பாடியார் இயக்கத்தை மீட்டு, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார்.

    இன்றைக்கு அந்த லட்சியத்தை விலக்கி, பொதுநலன், மக்கள் நலம், தொண்டர் நலன் மறந்து, சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக (தினகரன்) கருத்து சொல்லி உள்ளார். தமிழகத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பே, மகேஷ் தீர்ப்பு என்பதுதான் ஜனநாயகம்.

    மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட தனிநபர் விருப்பம் மக்களிடம் பிரதிபலிக்காது இதுதான் கடந்த கால வரலாறு. இன்றைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழை நிலைநிறுத்த எடப்பாடியார் மக்கள் பணியாற்று வருகிறார் .

    குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து குடிமராமத்து திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 11 மருத்துவக் கல்லூரிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை செய்தார்.

    ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்ணை மூடிக்கொண்டு கருத்து கந்தசாமி பேசிவரும் அவருக்கு சில வரலாறை நான் கூற கடமைப்பட்டுள்ளேன்.

    இன்றைக்கு வரலாற்று சாதனை மூலம் மக்களிடத்தில் மனதில் எடப்பாடியார் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி, மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆட்சியை நிச்சயம் மலர செய்வார். அதற்கு உங்களுக்கு எந்த சந்தேகம் வேண்டாம், உங்களுக்கு கவலை வேண்டாம்.

    இன்றைக்கு அதிமுகவின் உண்மை விசுவாசிகள், விசுவாசத் தொண்டர்கள், மக்கள், வாக்காளர்கள் என அனைவரும் உங்கள் உண்மை முகத்தை புரிந்து கொண்டார்கள், எங்களின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை.

    இன்றைக்கு உங்களை புரிந்து கொண்டவர்கள் விலகிச் சென்றார்கள், புரிந்து கொண்டவர்கள் தற்போது விலகி சென்று கொண்டிருக்கிறார்கள், புரியாதவர்கள் புரிந்து இனிமேல் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்ல வேண்டும், பொதுநல மறந்து, சுயநலத்தோடு செல்பவர்கள் அரசியல் பாதையை வகுக்க முடியாது.

    அவரை நம்பிவர்களெல்லாம் திமுகவிற்கு வழி அனுப்பி வைத்தார் , முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. மேலும் அவர் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்ட பல பேர் இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளனர்.

    தஞ்சையில் கருத்து கந்தசாமியாக, கண்ணை மூடிக்கொண்டு பேசிய நபருக்கு சில கேள்விகளை வைக்கின்றேன். உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.

    உங்கள் நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள் அவர்களை அரசியல் அனாதையாகி விட்டார்கள் அவர்கள் எதிர்காலம் என்ன பதில் சொல்லுங்கள்?

    அதேபோல உங்களது தளபதியாக இருந்தவர்கள் இன்றைக்கு ஸ்டாலினுக்கு தளபதியாக மாறிவிட்டார்கள் அதற்கு பதிலை சொல்லுங்கள்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வைகோவுக்கு நேற்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேற்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இன்று அல்லது நாளை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

    • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
    • உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.

    முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.

    ×