என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு
- 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர்.
- பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர்.
கரூர்:
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி, கரூர் எஸ்.பி. ஜோஸ் தங்கையா இடம் பெற்றனர். தற்போது இந்த குழுவில் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், 4 டி.எஸ்.பி.க்கள், ஒரு தடயவியல் நிபுணர் ஆகிய 8 அதிகாரிகள் கூடுதலாக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் ஏ.டி.எஸ்.பி. பிரேம்ஆனந்தன் கரூரில் இருந்து சென்னை புறப்பட்டு சென்று ஐஜி அஸ்ரா கார்க்கிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார்.
இதை தொடர்ந்து ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு 27-ந்தேதி சம்பவத்தின்போது நடந்த விவரங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் மற்றும் குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள், கூட்டம் நடைபெற்ற இடத்தில் எத்தனை பேர் நிற்கலாம், விஜய் பிரசாரத்தின்போது எவ்வளவு மக்கள் பங்கேற்றனர் உள்ளிட்டவற்றை ஆராய்கின்றனர்.
பின்னர் பிரசார வேன் நின்ற இடம், ஜெனரேட்டர் அறை, தொண்டர்கள் ஏறி நின்ற கட்டிடங்கள் போன்றவற்றை பார்வையிடுகின்றனர். பிரசாரத்தின்போது தொண்டர்கள், பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்று கேட்டறிகின்றனர்.
அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரபடுத்த உள்ளனர்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






