என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இணைய வழியில் 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
- 2 வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் ஆகிய விண்ணப்பங்களுக்கு தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு அவற்றின் மீது உரிய கால அளவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இணைய வழியில் 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இந்த சேவைகளை கூடுதலான வெளிப்படைத்தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 4.6.2024 முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறையில் 4.6.2024 முதல் 16.6.2024 வரை 15 ஆயிரத்து 484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
2 வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.
- சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!
இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி!
நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்!
கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்!
கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன்.
- தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை.
சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டனில் காவலர் குடியிருப்பில் கடந்த 3 நாட்களில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே குடியிருப்பில், நேற்று முன்தினம் போக்குவரத்து காவலர் முகமது ஜாவித் அலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவர்.
- பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு அவரது கணவர் தப்பியுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக, பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் டில்லி ராணி என்பவர் பட்டப்பகலில் சீருடையில் இருந்தபோதே அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
தனிப்பட்ட விரோதத்தால் கணவரே வெட்டியுள்ளதாக செய்திகள் வந்தாலும், உண்மைக் காரணம் என்னவென்பதை காவல்துறை தீர விசாரித்து தொடர்புள்ளோரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காரணம் எதுவாக இருப்பினும், சீருடையில் உள்ள ஒரு காவலரே பட்டப்பகலில் அரிவாளால் தாக்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம். இதற்கு காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
தான் சிறப்பாக சட்டம் ஒழுங்கை காத்து வருவதாக கூறி வரும் விடியா திமுக அரசின் முதல்வர், இனியாவது அந்த மாய உலகிலிருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
- பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.
பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
- எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருவொற்றியூர் சோமசுந்தர் நகரைச் சேர்ந்தவர் மதுமதி (38). இவர் அதே பகுதியில் உள்ள தனது நாத்தனார் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த எருமை மாடு அவரை முட்டியுள்ளது. இதில் அவரது ஆடை மாட்டின் கொம்பில் சிக்கிக்கொண்டது. அந்த பெண்ணை எருமை மாடு அந்தரத்தில் தூக்கி சுற்றியது.
மேலும், மாடு மதுமதியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த மதுமதிக்கு மருத்துவர்கள் 40 தையல் போட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பெண்ணை முட்டிய எருமை பிடிக்க தீவிர காட்டி வந்தனர். அதை தொடர்ந்து எருமை மாட்டை பிடித்தனர். எருமை மாடு குறித்து இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.
எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையின் மாட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "திருவொற்றியூர் பகுதியில் பெரும்பாலானோர் மாடு வளர்க்கின்றனர். அவர்களுக்கு மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பிலும், சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடயை மாட்டை பிடித்துவிட்டோம். அதை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் பராமரித்து வருகிறோம். அதன் உரிமையாளரை தேடி வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
- சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து.
- தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது
சங்கீதா - பாலமுருகன் தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய் சங்கீதா குழந்தையை தூக்கி கொண்டு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை. பின்னர் குழந்தையை தேடியதில் வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூடநம்பிக்கையால் தாத்தா வீரமுத்துவே பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து எனவும் குடும்பத்திற்க்கு கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால் தண்ணீர் பேரலில் போட்டு குழந்தையை அவரது தாத்தாவான வீரமுத்து கொலை செய்தது நாடகம் ஆடியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து வீர முத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொல்லப்பட்டார்.
- மணல் கொள்ளையை தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது.
இதில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.
ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி சமூக அமைதிக்கும் மிகப்பெரிய ஆபத்து ஆகும்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதை படம் பிடித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உமாபதி ஆகியோர் மீது கொலை முயற்சி நடந்துள்ளது.
முறப்ப நாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையை தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.
- அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
மதுரை:
மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
52 ஆண்டுகள் மிகப்பெரிய வரலாறு கொண்ட மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம், முதல் ஆளாக நின்று மக்கள் தொண்டாற்றிய இயக்கம் என்றால் அது அ.தி.மு.க. தான்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சாதகமாக நடைபெறாது என்று புறக்கணித்த காரணத்தை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளார். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 21 சதவீதம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்ற அடிப்படையில் அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த இடைத்தேர்தலால் எந்த மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு பிரதான எதிர்க்கட்சி ஏன் புறக்கணிக்கிறது என்று மக்கள் விவாதிக்கிறபோது இப்போது தி.மு.க. தேர்தலை அணுகுகிற படைபலம், பணபலம், அதிகார பலம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டில் ஜெயலலிதா இளையான் குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும், அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையை உருவாக்கினார்.
அன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்த அளவுக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.
மக்களை சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தடையாக தி.மு.க. அரசு தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாடுகளை மீறி, வரம்பு மீறி செயல்படுவார்கள் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிற முடிவை அறிவித்த உடனே எங்கள் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வும் புறக்கணித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார். அது பகல் கனவு, அது நிச்சயமாக ஒரு நாளும் நடக்காது. மக்கள் தி.மு.க.வுக்கு அது போன்ற ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.
அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அ.தி.மு.க. பெற்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க. 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று தி.மு.க.விற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற கட்சிகளை வரவேற்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் உரிமையை மீட்க, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவார், தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை, எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகின்றார்.
எங்களை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை களத்தில் நிறுத்தி நாங்கள் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.
- கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தமாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.

குவைத்தில் இருந்து கேளரா கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாரியப்பனின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
- பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
- 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.
ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.
ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.
சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.
தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.
அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.
எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.
ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.
காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.
குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?
ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.
எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.
தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.
வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
- மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
- வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக, 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்போது பால்வளத் துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு சரித்திர சாதனை படைத்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களை மின்ணணு வாயிலாக ரூ.590/-கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்திற்கு இந்திய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






