என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.
- மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தென்காசி:
தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலம் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் அதில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால், வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- பவுர்ணமி என்பதால் நேற்று பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம்.
- வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை)விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் நேற்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனால் நேற்றை விட இன்று கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்ட போதிலும் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
- ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
- இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது அத்துமீறிய செயலாகும்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்துவிட்டு அதிகாலையில் கரைக்கு திரும்பிய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது அத்துமீறிய செயலாகும்.
தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைப்பிடிக்கப்பட்டதால் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் இது போன்ற தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 18 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தண்ணீரில் கலந்து விற்கப்பட்டு தான் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இது பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வந்தது தெரிந்ததை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதுடன், 6 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பண்ருட்டியில் ஜோதி சிப்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். தன்னுடைய ஜி.எஸ்.டி. பில்லை மாதேஷ் பயன்படுத்த அனுமதி அளித்ததால் கைது செய்யப்பட்டார். சக்திவேலின் ஜி.எஸ்.டி. பில்லை தான் பயன்படுத்தி மாதேஷ் 'மினரல் டர்பன்டன் ஆயில்'என்ற பொருளை வாங்கியுள்ளார். இதை தண்ணீரில் கலந்து விற்கப்பட்டு தான் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூரை அடுத்து உள்ளது நடுப்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 67) இவர் தனது மகன் தேவராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தேவராஜ் மற்றும் அவரது மனைவி அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் திருமுருகன் என்ற மகன் உள்ளார். உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்த சிறுவன் திருமுருகன் (15) வீட்டில் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்தார். அது பழங்கால சுவிட்சாக இருந்ததால் அதில் மின்சாரம் கசிவு இருந்ததை திருமுருகன் அறியவில்லை. இதனால் திருமுருகனை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறிய சிறுவனை பார்த்து அவரது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயன்றார்.
இதில் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அந்த பகுதி மக்கள் 2 பேரையும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் 2 பேரும் இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான சீனிவாசன், திருமுருகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன.
- கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் 4 மாவட்டங்களுக்கு தலைவர் பதவி காலியாக உள்ளது.
வழக்கமாக புதிய மாநில தலைவர் பதவிக்கு வந்ததும் தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக நியமிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை 40 மாவட்ட தலைவர்கள் வரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.
இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்றார். இன்னும் பல மாவட்டங்களுக்கு செல்லவில்லை. அடுத்த வாரம் முதல் மீண்டும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணம் முடிந்ததும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் கட்சி பணியை தீவிரப்படுத்த மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
அதாவது 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் 117 மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் கூடுதலான 45 புதிய மாவட்டங்கள் உருவாகும். நிர்வாகிகள் பலருக்கு இதன் மூலம் புதிய பதவிகளும் கிடைக்கும்.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் புதிய மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள்.
இதில் 10 பேர் வரை பெண்களாகவும், சிறுபான்மையினர், இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் 3 பிரிவுகளிலும், கோவையில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார்.
விக்கிரவாண்டி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது40), சுப்பிரமணி (60) ஆகியோர் ஏற்கனவே தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின் (21), ஜெகதீஸ்வரன் (24) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே உள்ள ஆரியரில் நடந்த ஒரு விசேஷத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளனர் .
அப்போது தேவபாண்டலத்தில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர்சொந்த ஊருக்கு வந்து விட்டனர். அன்றில் இருந்து வாந்தி, மயக்கத்தில் இருவரும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை கண்எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனே முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
தேசிய ஆதி திராவிடர் நல ஆணையர் ரவி வர்மன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது விழுப்புரம் ஆர்டிஓ., ஷாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கூறும்போது, `நாங்கள் நண்பர்களுடன் உறவினரின் விசேஷத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள அரியூர் சென்று விட்டு அங்கு தேவ மண்டலம் என்ற இடத்தில் சாராயம் வாங்கி குடித்தோம்.
பின்னர் ஊருக்கு வந்தவுடன் அன்று இரவில் இருந்தே வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம் என கூறினார்.
- இளையராஜாவுக்கும், சண்முக சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை அடுத்த பாலாறுபட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 57). விவசாயி. இவர் கல்மேடு பகுதி நீர்பாசன சங்க தலைவராக இருந்தார்.
நேற்று அவர் பாலாறு பட்டி அருகே உள்ள கல்மேடு செல்லும் கடற்கரையை ஒட்டிய பாதையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து தருவைகுளம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடினார். அப்போது முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான இளையராஜா (47) என்பவர், கம்பால் தாக்கி சண்முக சுந்தரத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாலாறுபட்டியையும், பட்டின மருதூரையும் இடையில் ஒரு சாலை மட்டுமே பிரிக்கிறது. இந்த 2 கிராமத்திலும் உள்ள விவசாய நிலங்களிலும் அடிக்கடி 2 தரப்பையும் சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக நீர்பாசன சங்க தலைவர் என்ற முறையில் சண்முக சுந்தரம் அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். விவசாயிகளுடன் சமரசம் பேசுவது போன்ற செயல்களையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடு, மாடு மேய்ந்த தகராறில் இளையராஜாவுக்கும், சண்முக சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற தனது கன்றுக்குட்டி காணாமல் போனதால் அதனை தேடி சண்முகசுந்தரம் சென்றுள்ளார். அப்போது வழியில் நின்ற இளையராஜா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், ஆத்திரத்தில் கம்பால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இளைய ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலு மாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெங்களூக்கு சென்று செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இன்று தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது.
இதில் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் என்பவரது மனைவி நட்டார் சாந்தி (வயது45), ராஜ்குமார் என்பவரின் மனைவி பார்வதி (40), சித்திரவேல் என்பவரது மனைவி அமராவதி (59) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சுந்தரம் என்பவரது மனைவி சண்முகத்தாய் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கார் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் எப்போதுமே வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சாலையின் இருபுறமும் தெருக்கள் உள்ளன. எனவே நாங்கள் அடிக்கடி சாலையை கடக்கும் போது அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 4 இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த விபத்தில் பலியான பார்வதியின் கணவர் ராஜ்குமார் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-1 வகுப்பும், மகன் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த 3 பெண்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
- காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.தொடா் விடுமுறை, வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து இருந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 700 கன அடியாக குறைவாக வந்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
காவிரி ஆற்றில் பரிசல் பயணம்தனியார் ஒப்பந்தம் முடிந்த நிலையில் தமிழக அரசே படகு சவாரி இயக்கி வருகிறது.
இந்த படகு சவாரி பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்து கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து தொம்பச்சி கல் வழியாக பெரிய பாணி, மணல் மேடு வரை காவிரி ஆற்றின் பாறைகளுக்கு இடையே உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். ஒரு சில படகோட்டிகள் பாதுகாப்பு உடை இல்லாமலேயே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைப்பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.
மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான் , பாப்புலேட் உள்ளிட்ட வகை மீன்களின் விலை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விலை கொடுத்து வாங்கி சமைத்து குடும்பத்துடன் ருசித்து ரசித்து உணவருந்தினர்.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை போலீஸ் நிலையம், பஸ் நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிற்கும் இடம், சத்திரம் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தியிருந்தனா்.
அதிக கூட்டம் நெரிசலால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்
- மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
யூஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.
இந்த முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோர்ப்போம்.
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.






