குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு
Published on

குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூரை அடுத்து உள்ளது நடுப்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 67) இவர் தனது மகன் தேவராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தேவராஜ் மற்றும் அவரது மனைவி அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் திருமுருகன் என்ற மகன் உள்ளார். உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை வீட்டில் இருந்த சிறுவன் திருமுருகன் (15) வீட்டில் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்தார். அது பழங்கால சுவிட்சாக இருந்ததால் அதில் மின்சாரம் கசிவு இருந்ததை திருமுருகன் அறியவில்லை. இதனால் திருமுருகனை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறிய சிறுவனை பார்த்து அவரது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயன்றார்.

இதில் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அந்த பகுதி மக்கள் 2 பேரையும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் 2 பேரும் இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான சீனிவாசன், திருமுருகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com