என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய 3 பேர் அவர்கள் வகித்து வரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ளார்.
நீக்கப்பட்ட 3 பேரும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஆவர். குடவாசல் காவனூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் பா.ஜ.க.வில் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவர் ஓகை என்ற இடத்தில் அடகு கடை நடத்தி வந்த நிலை நிலையில் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாஸ்கர், செந்திலரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜமீனில் வெளியில் வந்தனர்.
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலை தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை.
- தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாகத்தான் இருக்கும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இப்படி போட்டி போட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் விஜய் கூட்டணி சேருவாரா? என்று ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-
விஜய்யும் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் தான். வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணிக்கு அழைத்ததாக அர்த்தம் இல்லை.
ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. தேர்தல் நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணிகளை கட்சி தலைமைதான் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் இந்த ஆட்சியின் அவலத்தை காட்டுகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை.
தவறு செய்தவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே விழுப்புரத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்ட போதும் இதே டயலாக்கைதான் சொன்னார்கள். ஆனால் அடக்க முடியவில்லை. அதற்கு பதிலாக குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் தான் இந்த அரசை அடக்கி வைத்துள்ளார்கள்.
தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்கட்சிகள் மீது இரும்புக்கரத்தை நீட்டுவதும், ஆனால் சாராய வியாபாரிகள் மீது கரும்பு கரத்தை நீட்டுவதும்தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது மு.க.ஸ்டாலின் வாயில் கருப்பு துணிகட்டி, கருப்பு உடையும் அணிந்த படி குடும்பத்தோடு மதுக்கடையை மூடுவோம் என்று கோஷம் எழுப்பினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக்கை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாகத்தான் இருக்கும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.
கள்ளச்சாராய சாவுகளுக்கு அதிகாரிகள் மீது பழிபோட்டு சஸ்பெண்டு செய்துள்ளார்கள். இந்த ஆட்சியை அடுத்து வரும் தேர்தலில் மக்கள் சஸ்பெண்டு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார்.
- காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 56 பேர் பலியாகினர். மேலும், கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கள்ளக்குறிச்சிக்கு இன்று வந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியானது துயரமான சம்பவமாகும். மேலும், பலி எண்ணிக்கை உயரும் அபாயமும் உள்ளது. பலியானவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள போது, கள்ளச்சாராய பலிக்கு இவ்வளவு தொகை அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக மாறி விடக்கூடாதென பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இதனையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தங்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியுமா என தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளே இதற்கு நிருபனமாக அமையும். தி.மு.க.வினருக்கும், கள்ளச்சாராயத்திற்கும் சம்மந்தமில்லை எனில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.
காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது என அனைத்து தரப்பு மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் பின்புறம் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதால் தான் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயனுக்கு தொடர்பு உள்ளதாக பொதுமக்களே பேசுகின்றனர். இதைத்தான் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
எனவே, இது தொடர்பாக சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் கள்ளச்சாராய வியாபாரிகளும், அதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளும் பிடிபடுவார்கள். இது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
- விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
தருமபுரி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 11-ந்தேதி தருமபுரி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் பார்வதி ஆகியோர் அந்த பள்ளியில் போதுமான இடம் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கவுதம், பிளாஸ்டிக் செல்வம், நவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
- ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக பெய்து வரும் கோடை மழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 55 முதல் 60 லாரிகளில் தக்காளி குவிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக 45 லாரிகளாக குறைந்ததால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.
கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.45-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது.
இதேபோல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ் விலை சற்று குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் அதன்பயன்பாட்டை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
- ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி இருந்து வருகிறார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அகோரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் மற்றும் சிலர் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
- மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.
ராயபுரம்:
தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.
கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.

இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.1200
வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200
கருப்பு வவ்வால் மீன்- ரூ.700
சங்கரா - ரூ.350
ஷீலா - ரூ.250
கிழங்கா - ரூ.300
டைகர் இறால் - ரூ.1000
இறால் - ரூ.300
கடமா - ரூ.300
நண்டு - ரூ.300
- பலருக்கு மாநிலம் விட்டு மாநிலம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
- நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை.
முதுநிலை நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பலருக்கு மாநிலம் விட்டு மாநிலம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் இரு நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு தேர்வு மையம் உள்ள ஊரில் தங்கியிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம்.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் அதை போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
பொன்னேரி:
சாலையில் சுற்றும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஹாயாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சாலையின் ஓரத்தில் படுத்துக் கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறக்கும் சம்பவமும், இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே பொன்னேரி, மீஞ்சூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
கள்ளக்குறிச்சி, கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்தும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 19-ந் தேதி முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் மது கடத்தல் மற்றும் மது விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண் கள் உட்பட 10 பேரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளச்சாராயம் பறி முதல் செய்யப்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழில் பேட்டையில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகளில் கும்மிடிப் பூண்டி, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கிரியாசக்தி, அழகேசன் தலைமையில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மெத்தனால் இருப்பு சரியாக உள்ளதா? என்றும் அவை பாது காப்பாக வைக்கப்பட்டுள்ள னவா? அவற்றின் காலக் கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மூடிய ஒரு தொழிற்சாலையில் மெத்தனால் உபயோகிக்கக்கூடிய தொட்டியை போலீசார் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மெத்தனால் பயன்படுத்தி மூடி உள்ள தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக நின்று, தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று காலை 6.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
- எஸ்.டி.ஏ.டி, ஜேப்பியார், எத்திராஜ் கல்லூரி ஆகியவை 2 முதல் 4-வது இடங்களை பிடித்தன.
- அதுல்யா மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 20-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை 8 நாட்கள் நடந்தது. இதில் 54 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. எஸ்.டி.ஏ.டி. 2-வது இடத்தையும், லயோலா கல்லூரி 3-ம் இடத்தையும், திண்டுக்கல் 4-வது இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார் முதல் இடத்தை பிடித்தது. எஸ்.டி.ஏ.டி, ஜேப்பியார், எத்திராஜ் கல்லூரி ஆகியவை 2 முதல் 4-வது இடங்களை பிடித்தன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். டாக்டர் ஏ.எம்.செல்வராஜ், கே.எத்திராஜ், ஜி.பி.எஸ். நாகேந்திரன், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கோபி, செயலாளர் எம்.கனக சுந்தரம், துணைத்தலைவர் எஸ்.எஸ். குமார், பொருளாளர் ரகுராம் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.






