search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action Investigation"

    • வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது 58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தாணுமூர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் தாணு மூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சார்பதிவாளர் தாணுமூர்த்தி மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டிற்கு இன்று காலை 7.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்றனர். வீட்டில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களையும், சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் திங்கள்நகர் காந்திநகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. வீட்டில் இருந்த தாணு மூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×