search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deputy registrar"

    • வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது 58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தாணுமூர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் தாணு மூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சார்பதிவாளர் தாணுமூர்த்தி மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டிற்கு இன்று காலை 7.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்றனர். வீட்டில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களையும், சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் திங்கள்நகர் காந்திநகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. வீட்டில் இருந்த தாணு மூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அர்த்தனாரீஸ்வரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படும் அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் இருந்து 31-12-2013-க்கு முன்னர் கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியதில் தவணை தவறிய கடன்தாரர்களுக்கு அர–சாணை எண் 40 வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சி நாள் 16-3-2015 படி தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி செலுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை பெற்று பயனடையலாம்.இந்த தள்ளுபடி சலுகை அரசாணை எண் 31 வீட்டு வசதி மற்றும் நகர் வளர்ச்சி 3-3-2023-ன் படி 6 மாதங்கள் அதாவது 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 31-12-2013-க்கு முன் இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் இருந்து கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்தி செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை மட்–டும் செலுத்தி தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கஜா புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #gajacyclone

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் அருகே உள்ள வெட்டாறு கரையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் உள்ளன. கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியபோது, தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வெட்டாற்றங்கரையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த மரங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

    இதுதொடர்பாக நீலக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழக காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், பிளம்பர் தீனதயாளன், டிரைவர் கண்ணையன் ஆகிய 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்கள் நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரிடம் இருந்த 5 பொறுப்புகள் பறிக்கப்பட்டு உள்ளன.

    துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதன் பின்னணியில் பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? தேக்கு மரங்கள் யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தது? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் சிலர் சிக்கலாம் என்று தெரிகிறது.

    இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி கூறியதாவது:-

    தேக்கு மரங்கள் கடத்தல் விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone

    ×