என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • ஒரு தெருவில் மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன என்றார் கமல்ஹாசன்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:

    இந்தத் தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்க்கக் கூடாது. அனைவருக்கும் கடமை உள்ளது.

    ஒரு தெருவில் இருக்கவேண்டிய மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை செய்யலாம்.

    இதுபோன்ற விழிப்புணர்வு பதாகைகள் டாஸ்மாக் கடை அருகில் இருக்க வேண்டும்.

    மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளது.

    வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    விஷ சாராயம், கள்ளச்சாராயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில் படும்படி எடுத்துச்சொல்லும் அறிவுரைகள் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
    • ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.

    காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு - மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பயிற்சி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று புதுக்கோட்டையில் நடைப்பெற்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சேர்ந்த விவசாயிகளையும் இவ்விழா ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற இவ்விழாவை ராஜ்யசபா உறுப்பினர் அப்துல்லா அவர்கள் துவங்கி வைத்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் ஏற்பாடு செய்ப்பட்டு இருந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்து நூற்றுக்கணக்கான முக்கனி ரகங்களை கண்டு விவசாயிகளும், பொது மக்களும் அசந்துப் போயினர்.

     

    காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் முக்கனிகள் சார்ந்து உணவுக்காடு உற்பத்தி செய்வது குறித்து இவ்விழா நடத்தப்பட்டது.

     

     

    இவ்விழாவின் நோக்கம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் "தற்சமயம் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். குறிப்பாக இந்த ஆண்டு மாம்பழத்தில் வெறும் 30% மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. பலாவின் காய்ப்பு பாதியாக குறைந்து விட்டது, கணிக்க முடியாத சூறாவளிக் காற்று வீசினால் வாழை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த அனைத்திற்கும் தீர்வாக நம் பாரம்பரியத்தில் இருக்கும் பலப் பயிர், பல அடுக்கு முறையை பின்பற்ற வேண்டும். எனவே உணவுக்காடு வளர்ப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவவும், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கவும், ஆரோக்கியமான வாழ்வை பெறவும் முடியும். இதனை வலியுறுத்தும் விதமாகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது" எனப் பேசினார்.

     

    இவ்விழாவை துவங்கி வைத்த அப்துல்லா பேசுகையில், "ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டில் வெறும் 21% தான் வனமாக இருக்கிறது. ஒருப்பயிர் சாகுபடியில் சென்றதால் தான் இந்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈஷா அமைப்பிற்கும், மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்" எனப் பேசினார்.

    மேலும் இவ்விழாவில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் 'நோய்க்கு தீர்வு நல்ல உணவுக்கான தேடலே' என்ற தலைப்பிலான காணொளி உரை திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூழலியலாளர் ஏங்கல்ஸ் ராஜா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன், பெங்களூர் IIHR -இன் முதன்மை விஞ்ஞானி ஜி. கருணாகரன், கேரளா மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CTCRI) முதன்மை விஞ்ஞானி முத்துராஜ், இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப கழகத்தை (NIFTEM) சேர்ந்த முனைவர். வின்சென்ட் ஆகியோர் உணவுக்காடு குறித்த பல முக்கியத் தலைப்புகளில் பேசினர்.

     

    மேலும் அக்ரி.பி. ஹரிதாஸ், இயற்கை மருத்துவர் கோ. சித்தர், கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர், குருபிரசாத் ஆகிய உணவுக்காடு முன்னோடி விவசாயிகளும், வல்லுநர்களும் முக்கனி விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழைப்பழ ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று குறிப்பிட்ட சில வகை மா மற்றும் பலா கன்றுகளை வாங்கிச் சென்றனர். கேரளாவை சேர்ந்த சக்கை கூட்டம் அமைப்பினரின் பலாவை கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.

    காவேரி கூக்குரல் இயக்கம் இவ்விழாவை இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமத் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த எருமை மாடு ஒன்று திடீரென பொது மக்களை விரட்டி, விரட்டி முட்டிதள்ளியது.

    இதில் அதே பகுதி அம்சா தோட்டம், 2-வது தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மதுமதி (33) என்பவரையும் எருமை மாடு முட்டி தூக்கியது. அப்போது மாட்டின் கொம்பில் சேலை சிக்கிக் கொண்டதால் மது மதியை தரதரவென சாலையில் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மாடு இழுத்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது.

    எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மதுமதியின் காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் பெரிதானது. மேலும் தொடர்ந்து காயம் அதிகரித்ததால் தற்போது மதுமதியின் காலில் புண் இருந்த இடம் அழுக தொடங்கி இருக்கிறது. அதில் அறுவை சிசிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர். மதுமதிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அரசும், மாநகராட்சியும் உதவி செய்யவேண்டும் என்று மதுமதியின் கணவர் வினோத் கண்ணீர்மல்க தெரிவித்து உள்ளார்.

    வேன்டிரைவராக வேலைபார்த்து வரும் வினோத் மனைவியை கவனித்து வருவதால் அவரும் வேலைக்கு செல்லமுடியாமல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மாடு முட்டியதில் காயம் அடைந்த மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது காலில் உள்ள காயம் தற்போது அழுகும் நிலையில் உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இதுவரை ரூ.1 லட்சத்துக்கும்மேல் செலவு செய்து விட்டேன். என்னிடம் மேலும் வசதி இல்லாததால் மேல் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறேன். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மதுமதி சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, மாட்டின் கொம்பு மதுமதியின் காலில் குத்தி கிழித்து உள்ளது. இதனால் அவரது காலில் 12 செ.மீட்டர் அளவுக்கு சதை கிழிந்தது. அந்த இடத்தில் சதை அழுகி சேதம் அடைந்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும். காலில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது என்றார்.

    • கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது.
    • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் காசி (வயது 55). லாரி டிரைவர். இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக திருவொற்றியூர் டோல்கேட்டில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை அவரது மகன் யோகராஜ் (22) அங்கிருந்து ஓட்டி வந்தார்.

    தண்டையார்பேட்டை கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த யோகராஜ் காரை நிறுத்திவிட்டு உடனே வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென்று தீ பரவியது. அப்போது அதே பகுதியில் உள்ள விநாயகபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் (41) என்பவர் ஏற்கனவே அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து வீரப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயில் 2 கார்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யோகராஜ் புகை வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்ததால் தப்பினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    25-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
    • சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

    • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

    இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு தி.மு.க.வினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
    • பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு தி.மு.க.வினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பா.ம.க.வினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்த வார இறுதியில் இருந்து தேர்தல் களம் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி முடிவடைந்த பின்னர் அடுத்த வாரம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை மறுநாளில் இருந்து விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க. அரசை கண்டித்து அவர் தொடர்ந்து அங்கு பிரசாரம் செய்ய உள்ளார்.

    மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அந்த கட்சி விக்கிரவாண்டி தொகுதியில் எவ்வளவு ஓட்டுகளை பெற உள்ளது என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து மேலப்பாளையம், சேரன்மகாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக சேரன்மகாதேவி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிக்காக இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் சுமார் 20 அடிக்கும் மேல் இருந்த மண் உச்சியில் இருந்து உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பொக்லைன் ஆபரேட்டரான நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திரன் அதன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடனடியாக அங்கு பணிபுரிந்த சக தொழிலாளர்கள் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் அங்கே விரைந்து சென்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலமாக பொக்லைன் எந்திரத்தை அப்புறப்படுத்தி பலியான மகேந்திரன் உடலை மீட்டனர். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும்.
    • புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்தனி கூட்டணியை ஏற்படுத்தி உள்ள நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சீமானுடன் விஜய் கைகோர்க்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இப்படி இருவரும் கை கோர்க்க இருக்கும் புதிய கூட்டணி தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சீமானுடன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்க்கும் முக்கிய கட்சிகள் பலவும் கை கோர்க்க இருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சிகளோடும், சிறிய கட்சிகள் சிலவற்றுடனும் கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நாம் தமிழர் கட்சி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சி 8 சதவீத ஓட்டுகளை எட்டிப்பிடித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நிலையில் விஜயும் கைகோர்க்கிறார்.

    அதுபோன்ற சூழலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைப்பதால் நிச்சயம் பெற்றி பெற முடியும் என்பதே புதிய கூட்டணியின் கணக்காக உள்ளது.

    இதுபற்றி அரசியல் நிபுணர் ஒருவர் கூறும்போது, 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. சீமானின் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி இருப்பதும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குவதுமே அதற்கு முக்கிய காரணமாகும்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தாலே அது திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும். இவர்களோடு மற்ற கட்சிகளும் சேரும்பட்சத்தில் புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அது போன்று ஒரு கூட்டணி உருவானால் நிச்சயம் அது 2 திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் வகையிலேயே அமையும் என்றார்.

    • மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய 3 பேர் அவர்கள் வகித்து வரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ளார்.

    நீக்கப்பட்ட 3 பேரும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஆவர். குடவாசல் காவனூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் பா.ஜ.க.வில் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவர் ஓகை என்ற இடத்தில் அடகு கடை நடத்தி வந்த நிலை நிலையில் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாஸ்கர், செந்திலரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜமீனில் வெளியில் வந்தனர்.

    தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலை தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×