என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார்.
    • போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருமங்கலம்:

    கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருமங்கலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இன்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அது தோல்வியில் முடிந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் சுங்கச்சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதியில் கிராமப்புறம் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டாலும், அவை எளிதில் தப்பித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றைக்கரடி குன்னூர் ஆர்செடின் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள சின்னப்பன் என்பவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றது.

    தொடர்ந்து சமையலறையில் இருந்த உணவுகளை தின்று ருசிபார்த்தது. பின்னர் அங்கிருந்த சமையல் பொருட்களை சூறையாடியது.

    இதற்கிடையே வீட்டில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த சின்னப்பன் உடனடியாக சமையலறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு கரடி நின்றுகொண்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அண்டை வீட்டாரிடம் நடந்த விஷயங்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டுக்குள் நின்ற கரடியை தீப்பந்தங்கள் காட்டி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்கு விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.
    • மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடந்து வருகிறது. இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் இந்த வாரச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

    இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன் ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை 60 ஆண்டுகளாக நமது அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் 720 வியாபாரிகள் பயன் பெற்று வந்தனர். 2018-ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய போது வாரச்சந்தை வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனி மார்க்கெட் வணிக வளாக காலி இடத்தில் மீண்டும் வாரச் ச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

    ஆனால் இதுவரை வாரச் சந்தை அமைக்கப்பட வில்லை. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச் சந்தையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்பதில்லை.

    எனவே மாநகரத்தின் மையப் பகுதியான கனி மார்க்கெட்டில் மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால் அதை நம்பியுள்ள 720 வியாபாரிகளும் பயன்பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.
    • போலீசார் ராகேசை கைது செய்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹபீஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது35). அதே பகுதியில் கணவர், மகனை இழந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மதியம் ராகேஷ் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் உறவுக்கார பெண் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் இதைப்பார்த்ததும் சத்தம் போட்டார். உடனே ராகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராகேசை கைது செய்தனர்.

    • தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.
    • ஆசிரியர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை, டி.பி.ஐ. வளாகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது,

    அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை பெரும்பாலும் குறைந்து விற்பனையாகி வருகிறது.

    அந்த வகையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.51,080-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    • மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சுவர் இடிந்து விழுந்து சிக்கி இருவர் உயிரிழந்தனர். 

    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.


    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அம்மன், சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார்.

    காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டே குண்டம் இறங்கினர்.


    தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
    • போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் செயலற்ற ஆட்சியாக இருப்பதற்கு கண்டனம்.

    தமிழகத்தில் தொடர்ச்சியாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக போதை பொருள் பறிமுதல் செய்யப்படுவது, போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதை காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன."

    "சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் திரு. முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்."

    "தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • 15-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வழக்கில் முதலில் கைதான 4 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ்.ஆர் சேகர், நீல முரளியாதவ், தொழிலபதிர் முருகன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. தனது உதவியாளர் மூலம் பணத்தை நகைக்கடை உரிமையாளர் கொடுத்தாக கூறப்படும் நிலையில், நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதனிடையே, தாம்பரம் ரெயில்வே கேண்டீன் உரிமையாளர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    • நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.
    • ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.250ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

    நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.

    ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
    • ஜாமின் கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    பிறகு, சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில், ஜாமின் வழங்க கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    ×