என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
- தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவர்கள், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், தவளை மலைஅருகே, மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
இதனால், ஊட்டி-கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வனப்பகுதி என்பதால், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் வாயிலாக மண்ணை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது. சூறாவளி காற்றுக்கு குன்னூரில் உள்ள டிம்பர் டாப்ஸ் செல்லும் நடைபாதையில் மரங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.
இதனால் அந்த வழியாக செல்வதற்கு மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகரட்டி, மேலும், குன்னக்கம்பை, கோட்டக்கல் பகுதிகளில் மரங்களும், கேத்தி, மணியபுரம் பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.
வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததாலும், விடிய, விடிய கனமழை பெய்ததாலும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றன.
தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர்.
- சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நகை மற்றும் சொத்துக்களுக்கான வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது அவரது போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான பொருட்களை கைப்பற்றியதோடு வங்கிகளில் உள்ள பணம் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 டிரங்பெட்டி நகைகள், 1562 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் வங்கிப் பணம் ஆகியவை கர்நாடக கோர்ட்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்து போனார். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு தண்டனை உறுதியானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் தண்டனை அனுபவித்து விடுதலையானார்கள்.
இந்த நிலையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள நகை மற்றும் சொத்துக்களை ஏலம் விட சொல்லி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் வழக்கு போட்டார்.
இதையடுத்து வழக்கறிஞர் கிரண்ஜவாரி என்பவரை கோர்ட்டு நியமித்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
மேலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் ஏலம் விட்டு வழக்குக்காக கர்நாடக அரசு செலவிட்ட ரூ.5 கோடியை தமிழக அரசு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர். அதில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் நாங்கள் தான். எனவே நகை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் தான் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இன்னும் மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கும் நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றை உடனடியாக ஏலம் விட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏராளமான பணம் கிடைக்கும் அதன் மூலம் ஏழைகளின் நல்வாழ்விற்கு செலவிட முடியும்.
இந்த வழக்கில் தீபா, தீபக்குக்கு எந்த ரோலும் கிடையாது. அவர்களின் மனு தள்ளுபடியாகி விட்டது. இதை ஐகோர்ட்டில் விளக்கிடும் வகையில் அதற்கு ஏதுவான மனுவை கிரண்ஜவாரி தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்.
- வால்பாறை, பொள்ளாச்சியில் மழைக்கு 3 பேர் பலி.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (வயது 57) மற்றும் தனப்பிரியா (வயது 15) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான ஓட்டுவீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று இரவு பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும்.
- விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
சென்னை:
மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.
தலைவாசலில் அமைந்து உள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.
இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், 2021-ல் கழக ஆட்சி பொறுப்பேற்ற போது 50 சதவிகித பணிகள் கூட முடிவடையாத நிலையே இருந்தது.
உலகத் தரத்தில் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடம் அதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்த ஆராய்ச்சி முதலில் நடைபெற்றிருக்க வேண்டும்.
அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சரியான திட்டமிடுதல் இல்லாமல், அவசர கதியில், மக்களின் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தை தொடங்கி உள்ளார்கள்.
கால்நடை பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். தினசரி 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் ஒரு நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்தது எந்த வகையான திட்டமிடல் எனத் தெரியவில்லை.
எனினும், கடந்த 7.5. 2021-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சி அமைந்த பிறகு இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து கால்நடை வளர்ப்போர் உண்மையாகவே பயன் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று, 2023-ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை காரணமாக ஜனவரி 2024-ல் முடிக்கப்படவேண்டிய பணிகள் சிறிது தாமதமாக முடிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்
வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லபட்டது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு சார்ந்த மீட்பு பணிகளில் உதவ தமிழக பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
நிவாரண பணி தடையில்லாமல் நடைப்பெற மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு தரப்படும். தமிழ்நாடு பாஜக சார்பில் நிவாரண பொருட்களை வயநாடு மக்களுக்கு தர 5 நபர் கொண்ட குழு திரு ஏ.பி முருகானந்தம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் ஈரோடு தென் மாவட்ட அமைச்சர் திரு. வேதானந்தன் , திருப்பூர் மேற்கு மாவட்ட அமைச்சர் திரு செந்தில்வேல், நீலகிரி மாவட்ட அமைச்சர் திரு மோகன்ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு நந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
- அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழையைப் பொறுத்து இரு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
கர்நாடகா இரு அணைகளில் இருந்தும் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 78,443 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் மாற்றுப் பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.
- கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்போது 123.35 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 38,977 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 55,659 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் 84 அடி ஆகும். இந்த அணையில் தண்ணீர் முழுகொள்ளளவை எட்டிவிட்டது. இந்த அணைக்கு 30,805 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 24,667 கன அடி நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை 2 அணைகளில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை கர்நாடகம்-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 1,53,091 கன வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலையில் 1,05264 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் நீர்வரத்து 70,257 கன அடி சரிந்த நிலையில் காலை 8 மணிக்கு நீர்வரத்து 62,870 கன கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 118.84 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 91.63 டி.எம்.சி. இருந்தது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 41ஆயிரத்து 722 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால் இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்இருப்பை பொறுத்து முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அணையின் நீர்மட்டம் 120 அடி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இன்று மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆகஸ்ட் 2-வது வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம்.
- அரசு மற்றும் ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
சென்னை:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வு முடிவு வெளியான பிறகும் அகில இந்திய மருத்துவ இடங்கள் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
நீட் மறுதேர்வு நடை பெறுமா? நடைபெறாதா? என்று கேள்விகள் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு மாதமாக நீடித்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தர வின்படி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடியும், குறைந்தும் மாற்றமாகி உள்ளது.
புதிய திருத்தப்பட்ட நீட் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான (15 சதவீதம்) அட்டவணையை மருத்துவ ஆலோசனைக் குழு இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
அதன்படி ஆகஸ்ட் 14-ந்தேதி அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. 3 சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
முதல் சுற்று ஆகஸ்ட் 14 தொடங்கி 27-ந் தேதி வரையிலும் 2-வது சுற்று செப்டம் பர் 5 முதல் 10-ந் தேதி வரையிலும் நடைபெறு கிறது. 3-வது சுற்று செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது.
அதன் பின்னர் விடுபட்ட காலியிட சுற்றுக்கான கலந்தாய்வு அக்டோபர் 16 முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆலோசனைக் குழு அட்டவணை வெளியிட்டதை தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மருத்துவ கல்வி இயக்ககம் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலின் அடிப்படையில் அறிவிப்பானை ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. எந்தெந்த தேதியில் விண்ணப்பிக்கத் தொடங்கி முடிக்க வேண்டும் என்ற விவரம் இணையதளம் வழியாக தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அதிக மாணவர்கள் பெற்று இருப்பதால் கடுமையான போட்டி ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 4 ஆயிரம் மாணவர்கள் பெற்று இருப்பதால் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் 600-க்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ந் தேதி தொடங்கு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு முதலில் தொடங்கி நடைபெறும். உத்தேச தேதியாக இதனை மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 2-வது வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னர் விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.
இன சுழற்சி அடிப்படையில் ரேங் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட வில்லை. கடந்த முறை இருந்த மருத்துவ இடங்களே உள்ளன. 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக வருவதன் மூலம் அரசு மற்றும் ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி.
- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பரவலாக மழை பெய்த நிலையில் அதன்பிறகு படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது.
தற்போது தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக உள்ளது. வரத்து 3216 கன அடி. திறப்பு 1333 கன அடி. இருப்பு 4460 மி.கன அடி.
வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 2701 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 57 அடி. வரத்து மற்றும் திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 78.4, தேக்கடி 44.6, சண்முகாநதி அணை 12.6, ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 21, பெரியகுளம் 13, சோத்துப்பாறை 12, வைகை அணை 9.6, போடி 26.4, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 9.2.
கனமழை காரணமாக சுருளி அருவியில் நேற்று சீரான நீர்வரத்து வந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியிலும் அதிக அளவு தண்ணீர் தடுப்புகளை தாண்டி செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பெண் ஒருவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப்பர் அபிஷேக் ரபி மீது வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை:
'பிரியாணி மேன்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி.
இவர் பிரியாணி தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருவதுடன் சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் அபிஷேக் ரபி, பெண்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பெண் ஒருவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப்பர் அபிஷேக் ரபி மீது வழக்கு பதிவு செய்து, பெண்கள் பற்றிய அவதூறு பேச்சு தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்த நிலையில் அபிஷேக் ரபியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன்.
- முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.
சென்னை :
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.






