என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை.
    • தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

    குறிப்பாக, சென்னை மாநகர் மற்றும் புகறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    மதுரவாயல், போரூர், வானகரம், ஐயப்பன்தாங்கல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாக பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. குளிர்ச்சி சூழல் நிலவுவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
    • சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாரியாக கவுன்சிலர்கள் குறித்து விசாரணை.

    அதிக கமிஷன் கேட்டு பணிகள் நிறுத்தம், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் என கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாரியாக கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சில கவுன்சிலர்களுக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுத்தாகவும், இதில், 4 திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும்.
    • பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு -அவிநாசி திட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அத்திகடவு-அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர். கலெக்டர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது இந்த திட்டத்தை வேகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

    இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்த 3 பம்பிங் நிலையங்களுக்கு இடையே உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தி.மு.க. அரசு தான் காரணம்.

    விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. பீடர் லைன் மூலம் 1045 குளங்கள் நிரப்பப்பட வேண்டும். அதை பயன்படுத்தாமல் இருந்ததால் தயார்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.

    பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக தண்ணீர் வரும் போது திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும். முதல் கட்டத்திலேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.

    1416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம் அந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்ட பிறகு உபரி நீரை கொண்டு அத்திகடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேதி நிர்ணயம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில் அரசியல் செய்கிறாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் நியாயமானது தான். அவர் விவரம் தெரியாமல் கூட பேசி இருக்கலாம். திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

    • விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் அங்கு செயல்பட்டு வரும் தனியார் மருத்துவகல்லூரியில் 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் முகேஷ் குமார், இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனை அறிந்த அவரது பெற்றோர், மகனுக்கு அறிவுரை கூறி திட்டியதோடு, முகேஷ்குமார் வைத்திருந்த செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு முகேஷ்குமார் ஆளானார். மேலும் பெற்றோரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    தேர்வில் இரு பாடங்களில் பெயில் ஆனதால் பெற்றோர் அறிவுரை கூறி திட்டியதோடு செல்போனையும் வாங்கி வைத்துள்ளனர். இதனால் கடும் விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு வந்தார்.

    மதுரையில் டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று நீண்ட நேரம் ஆகியும் அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. விடுதி ஊழியர்கள் பலமுறை தட்டிப்பார்த்தும் அறைக்குள் இருந்து எந்த விதமான பதிலும் வர வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் திடீர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் முகேஷ் குமார் தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது.

    அறையின் மின் விசிறியில் முகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முகேஷ்குமார் விடுதியில் அளித்த முகவரியின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் தற்போது மதுரை விரைந்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

    • வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பு பகுதியில் கடந்த 1-ந்தேதி பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த வடசென்னை மேற்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் வட சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கபிலன் பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புகார் அளித்தனர். இதையடுத்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கபிலன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் இன்று காலை பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.
    • வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. 30-வது பொதுக்குழு இன்று சென்னை அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.

    பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கழகப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

    நீட் தேர்வில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.

    பா.ஜ.க. அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதைக் கண்டித்தும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்று வரும் மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதுடன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைப் போல முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி மாற்றப்பட்டார்.
    • தினகரன் சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று 15 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் போலீஸ் வீட்டு வசதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐ.ஜி.யாக பணியாற்றிய டாக்டர் தினகரன் சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி மாற்றப்பட்டு அந்த பதவிக்கு ராதிகா நியமிக்கப்பட்டுள்ளாார். வடசென்னை இணை கமிஷனராக பிரவேஷ்குமார், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக சரோஜ்குமார் தாகூர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 8-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
    • தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

    விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?

    "தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காக செய்துகொள்ளும் செய்திதாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வராது; சீரான சட்டம் ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை" என்பதை உணர்ந்து, அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    • ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்களான பிரதாப்-சங்கவி தம்பதியினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது 3 வயது குழந்தையை விட்டு விட்டு ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக பிரதாப் கூறியதாவது:-

    எங்கள் குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏற்கனவே வயநாடு பகுதிக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சில வீடியோக்களை எங்களுக்கு அனுப்பினார்கள். அதில் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் வீடியோக்களும் இருந்தன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தவித்த குழந்தைகளின் வீடியோக்களை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.

    அதை உணர்ந்துதான் நாங்கள் மீட்பு பணிக்கு வந்தோம். நாங்கள் ஏற்கெனவே வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீட்பு பணிக்காக ரெயிலில் வந்தோம். இங்கு மலையில் இருப்பவர்களுக்கு தான் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டோம். எனவே நாங்கள் மலைப்பகுதிகளுக்கு சென்றோம்.

    எந்த இடத்தில் நிலச்சரிவு ஆரம்பித்ததோ அந்த இடத்தில் இருந்துதான் மீட்பு பணியை தொடங்கினோம். இன்னும் எவ்வளவு நாள் இருப்போம் என்பது தெரியாது. ஆனால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்து விட்டுதான் செல்வோம். திருமணத்துக்கு முன்பு எனது மனைவிதான் தன்னார்வலராக இருந்தார். திருமணத்துக்கு பிறகு நானும் அவருடன் சேர்ந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதாப்பின் மனைவி சங்கவி கூறியதாவது:-

    எங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அவளுக்கு 3 வயது ஆகிறது. குழந்தைகளின் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வைத்தபோது மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதற்காக உடனே கிளம்பி வந்தோம். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது முதல் நான் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

    தன்னார்வ தொண்டு பணியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பது எனது கணவருக்கு தெரியும். எனவே அவர் இதுவரை என்னை தடுத்தது கிடையாது. மேலும் அவரும் என்னுடன் மீட்பு பணிக்கு வர சம்மதித்தார். இதில் எனக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

    பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.

    இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள்.

    சென்னை:

    சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்த துடன் புதிய பஸ்சில் ஏறி சிறிது தூரம் வரை பயணம் செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.

    புதிதாக துவக்கி வைக்கப்பட்ட பஸ்கள் பிராட்வே, கிளாம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, திருப்போரூர், திருவொற்றியூர், திருவேற்காடு, தி.நகர், மகாபலிபுரம், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீல நிறத்தில் விடப்பட்டு உள்ள இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறுவதற்கு சிறப்பு சாய் தளம், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    ×