என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர்.
    • வேட்பு மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு உள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க இன்று (திங்கட்கிழமை), மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் மாநகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் வளாகத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    தொடர்ந்து காலை 10 மணி முதல் கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர். முன்னதாக தி.மு.க மேயர் வேட்பாளர் ராம கிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார். கவுன்சிலர்கள் தவிர வேறு யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை.

    பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சுகபுத்ரா முன்னிலையில் வேட்பு மனு வழங்கப்பட்டது. அப்போது கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்குக்கு சென்றார்.

    அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்கிற்கு சென்றார். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து 2 பேரும் வேட்பு மனுவை நிரப்பி அதிகாரியிடம் வழங்கினர். அப்போது தி.மு.க. வேட்பாளர் கிட்டுவுக்கு ஆதரவாக கவுன்சிலர் சுதாமூர்த்தி, முன்மொழிந்தார். கோகுல வாணி வழிமொழிந்தார்.

    இதே போல் வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசந்தா முன்மொழிந்தார். ம.தி.மு.க. கவுன்சிலரான சங்கீதா வழிமொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தொடங்கியது.

    • ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
    • கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.

    கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டி ஐ.டி. ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது.

    அதே நேரத்தில் உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகப் போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் என்பது போன்ற பொய்களை அள்ளி வீசியும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் பொது மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சுருட்டுகிறார்கள்.

    இந்த நிலையில் கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் வியாபாரம் மூலமாகவும் உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் எனக் கூறி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஆன்லைனில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை சுருட்டி விடுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, `ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றார்.

    • கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.
    • பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தார்.

    மாமல்லபுரம்:

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக்காக இந்தியா வந்துள்ளார்.

    இந்த நிலையில், அரசுத்துறை குழுவினர் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.

    பல்லவர்கள், சைவ, வைணவ வழிபாட்டிற்காக, இந்த கோயிலை உருவாக்கியதும், இதுதவிர 6 கோவில்கள் கடலில் மூழ்கியது. பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது, பழங்காலத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோயில் தற்போது பாரம்பரிய நினைவுச் சின்னமாக தொல்லியல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்லவர் காலத்து வரலாற்று தகவல்களை, சுற்றுலாத்துறை அங்கிகாரம் பெற்ற வழிகாட்டி மதன் என்பவர் அவரிடம் விளக்கினார்.

    அவற்றைக் கேட்டு வியந்த அவர் தன் மொபைல் போனில் கணவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுற்றுலாப் பயணிகள் சிலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
    • வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100 சதவீத வரை உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • கடல் சீற்றமாக காணப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 7-ந்தேதி வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும். காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும், பங்கு தந்தைகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கணபதிபுரம் லெழூர் கடற்கரையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.

    போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். முட்டம், தேங்காய்பட்டினம் உட்பட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாகவே இருந்தது. ராட்சத அலைகள் எழும்பியது.

     

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது. கடல் சீற்றமாக காணப்பட்ட தையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் வள்ளல்கள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு.
    • சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை.

    பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு?

    பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • இன்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது.

    தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலி யும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரி களுக்காக நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் தூய பணிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது, தொடர்ந்து இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
    • ஏழைகளின் கண்ணீர், விடியா திமுக ஆட்சியாளர்களை கட்டெரிக்கும் என்று எச்சரிக்கிறேன்

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்ற பொது சித்தாந்த அடிப்படையில் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை அவருக்குப் பின் கழகப் பொறுப்பேற்ற ஒரு குடும்பம், 'தொண்டர்களுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தை கபளீகரம் செய்து, அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, குடும்ப ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கிறது.

    தமிழக நெசவாளர்கள் தொடர்ந்து தங்களது நெசவுத் தொழிலை தொய்வில்லாமல் செய்துவர ஏதுவாக, பொதுமக்கள் தைப் பொங்கல் பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் விலையில்லா 4 செட் சீருடைகள் வழங்கும் திட்டத்தையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் செம்மையாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்பட்டு வந்தன.

    விடியா திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட குறித்த காலத்தில் தகுதியுள்ள பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கியதில்லை. குறித்த நேரத்தில் தமிழக நெசவாளர்களுக்குப் பணி ஆணை வழங்காமலும், தரமற்ற நூல்களை வழங்கி நெருக்கடியை ஏற்படுத்தி வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி நிலைமையை சமாளித்தது. இதன் காரணமாக, தமிழக விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் வேலையில்லாமல், தங்களது தறிகளை எடைக்குப் போடும் சூழ்நிலையையும், கஞ்சி தொட்டி திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக பலமுறை நாங்கள் விடியா திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், சட்டமன்றத்தில் பலமுறை அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம்.

    குறிப்பாக இந்த ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் விடியா திமுக அரசு குறித்த நேரத்தில் நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்காமலும். வெளி சந்தையில் தரமற்ற நூல்களை விலைக்கு வாங்கியதாலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

    இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா 4 செட் சீருடைக்கு பதில், 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 4 செட் வழங்கியதாக கணக்கு காட்டுவதாகவும், இதன் மூலம் இந்த விடியா திமுக ஆட்சியாளர்கள், அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற அடிப்படையில், எல்லா திட்டங்களிலும் கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் என்று விடியா திமுக அரசு, தனது ஆக்டோபஸ் கரங்களை அங்கிங்கெளாதபடி, அனைத்துத் துறைகளிலும் நீட்டியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

    குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும், விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிடவும், இதன்மூலம் தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    நெசவுத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு குறித்த காலத்தில் பகுப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் வழங்காமல் ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் சுயநலப் போக்குக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஏழைகளின் கண்ணீர், விடியா திமுக ஆட்சியாளர்களை கட்டெரிக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • 3 விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • 6 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சூலூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவையில் நடைபெறும் 3 விழாக்களில் அவர் பங்கேற்கிறார்.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து காணொலி வாயிலாக பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

    பின்னர் உக்கடம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    அதன்பின் கோவை கருமத்தம்பட்டிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 6 அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அங்குள்ள கட்டிட வளாகத்தில் கலைஞர் அறிவுசார் நூலகம், அதன் எதிரே 106 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி சிலை, நூலகம், கொடிக்கம்பம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தயாராகி வருகிறார்கள்.

    • கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி மாலை 6 மணி அளவில் 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 7-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 34 ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 454 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.14 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 36 ஆயிரத்து 996 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 73 ஆயிரத்து 330 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் வீதம் திறக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா பயணம்.
    • 15 நாட்கள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் அமெரிக்கா செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப் பட்டிருந்தது.

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவர் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கி விட்டது. 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.

    அமெரிக்காவில் பயணத்திட்டம் என்னென்ன என்பது பற்றியும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகத்தில் விசா அனுமதியும் கிடைத்து விட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22- ந் தேதி அமெரிக்கா செல்வார் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர் 27-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அமெரிக்கா புறப்படுவார் என்று தகவல் தெரிய வந்துள்ளது.

    • மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவது கண்டிக்கத்தக்கது.
    • திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் மாணவர்களுக்கான விடுதி கட்ட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. விளையாட்டுத் திடலின் பயன்பாட்டை அழித்து விட்டு விடுதி கட்டக் கூடாது என்று அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் நான் திட்டக்குடி சென்றபோது முன்னாள் மாணவர்கள் என்னை சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவது கண்டிக்கத்தக்கது.

    திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளியின் விளையாட்டுத் திடலை அந்தப் பள்ளியின் மாணவர்கள் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களும் விளையாடுவதற்காக பயன்படுத்தி வந்தனர். நகர மக்களும் நடைபயிற்சிக்காக விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வந்தனர். விளையாட்டுப் பயன்பாட்டுக்காக உள்ள திடலை வேறு பயன்பாட்டுக்காக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தனியார் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லாத சூழலில் அவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அரசு பள்ளியில் பயன்பாட்டில் இருக்கும் விளையாட்டுத் திடலை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது விதிகளுக்கு எதிரானது ஆகும். திட்டக்குடி நகரில் குறிப்பிடும்படியாக விளையாட்டுத் திடல்கள் இல்லாத நிலையில், இந்தத் திடலும் மூடப்பட்டால் மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியும், மக்களின் நடைபயிற்சியும் பாதிக்கப்படும்.

    மாணவர்களுக்கான விடுதி தி.இளமங்கலத்தில் செயல்பட்டு வந்தது. அங்கு விடுதியை நடத்துவதில் சிக்கல் இருந்தால் திட்டக்குடியில் வேறு இடத்தில் விடுதியை கட்டலாம். பள்ளிக்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான இடம் இருந்தால் கூட அங்கு விடுதியை கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. விடுதி கட்ட வேறு இடங்கள் இருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் விட்டு விட்டு பள்ளியின் விளையாட்டுத் திடலில் தான் விடுதி கட்டுவோம் என அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

    திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்; விளையாட்டுத் திடல் தொடர்ந்து அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 7-ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு திட்டக்குடி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பா.ம.க. சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் இரா கோவிந்தசாமி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    ×